பணியிட மாற்றம் எனும் பரிணாமம்
பணியிடமாறுதல் பற்றிய நடுப்பக்கக் கட்டுரை.....
அரசுத் துறை, வங்கி மற்றும் வேறு சில தனியார் நிறுவனங்களில் பணியிடமாறுதல் என்பது தவிர்க்க முடியாதது. ஒருவருக்கு பதவி உயர்வின் பொருட்டோ, குறிப்பிட்ட காலத்துக்குப் பின்போ அல்லது வேறு காரணத்துக்காகவோ பணியிட மாற்றம் வரலாம். குடும்ப சூழலைப் பொருத்துத்தான் அதற்கு வரவேற்போ எதிர்ப்போ இருக்கும். மேலும், எந்த ஊருக்கு அல்லது மாநிலத்துக்கு மாற்றம் வந்துள்ளது என்பதையும் கருத்தில்கொண்டு யோசிக்கிறார்கள்.
பணியிட மாற்றம் என்பது ஒரு குடும்பத் தலைவனின் வாழ்க்கையில் வெறும் இடமாற்றம் மட்டுமல்ல. அது குடும்பத்தின் அன்றாட இயல்பு நிலையையே தலைகீழாக மாற்றிப் போடும் ஒரு சவாலான நிகழ்வாகும். குடும்பத்தை அழைத்துக்கொண்டு புதிய ஊருக்குச் செல்வதா?
அல்லது தனியாகச் சென்று பணிபுரிவதா என்ற குழப்பமே முதல் மன அழுத்தமாக உருவெடுக்கிறது.
Advertisement
Advertisement
கல்வியாண்டின் நடுவில் பணியிட மாற்றம் வரும்போது குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை மற்றும் புதிய பாடத் திட்டத்துக்கு அவர்கள் மாறுவது மிகப் பெரிய முட்டுக் கட்டையாக அமைகிறது. மேலும், பணிபுரியும் மனைவியின் வேலை மற்றும் வயதான பெற்றோரின் பராமரிப்பு ஆகியவற்றில் பெரும் சமரசம் செய்யவேண்டிய சூழல் உருவாகிறது. தனியாகச் சென்று தங்கும் நிலையில், தனிமை தரும் மன உளைச்சலுடன் இருவேறு இடங்களில் குடும்பம் நடத்துவதால் பொருளாதாரச் சுமைகளும் இரட்டிப்பாகின்றன. வீட்டில் அன்றாட பொறுப்புகளையும், அவசரத் தேவைகளையும் மனைவி ஒருவரே சுமக்க வேண்டிய கட்டாயமும் எழுகிறது. பல்வேறு நடைமுறைச் சிரமங்கள் வரிசை கட்டி நிற்கும்.
மனைவிக்கு பணியிட மாறுதல் என்றால் குடும்பம் மேலும் தவித்துப் போகும். பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். முதலாவதாக கணவன் பணிபுரியும் இடத்துக்கும் மனைவிக்கு மாறுதலான இடத்துக்கும் இடையே உள்ள தொலைவு காரணமாக இருவரில் ஒருவர் தினமும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியிருக்கும். அல்லது குடும்பத்தைப் பிரிந்து தனியாகத் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். குடும்பத்தை விட்டுவிட்டு பெண்களால் போக முடியாது; அப்போது வேலையைவிட வேண்டி வரும். ஒரு பெண் பணியாளரின் பணியிட மாறுதல் என்பது, அவருடைய தனிப்பட்ட விஷயமாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த குடும்பத்தின் இயல்பு வாழ்க்கையையும் மாற்றி அமைக்கும் ஒரு கடினமான சூழலாக மாறுகிறது.
நண்பரின் மகன் தனக்குப் பணியிட மாறுதல் வந்துள்ளது என்று தொலைபேசியில் மிகவும் சலித்துக் கொண்டார். அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவதன் காரணமாகப் பல சிரமங்களை அனுபவித்து வருவதாகக் கூறி வருத்தப்பட்டார். நாம் என்ன கொஞ்சமாவா சாமான்களை வைத்துள்ளோம்? மாறுதல் வந்தால் உடனே ஒரு வண்டியில் போட்டு எடுத்துக்கொண்டு போக முடிகிற அளவுக்கா நம்மிடம் பொருள்கள் இருக்கின்றன?.
நமக்கு எந்த வசதிக் குறைபாடும் இருக்கக் கூடாது; அதனால், அவசியத்துக்குப் பொருள் வாங்குவது போய் ஆடம்பரத்துக்கு வாங்கிக் கொள்கிறோம். என்றாவது ஒருநாள் வரக்கூடிய அல்லது வரவே வராத விருந்தினர்கள் வாயைப் பிளக்க வேண்டும் என்று வீட்டை அழகுபடுத்துகிறோம். எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள அழகு பொருள்களை வாங்கி வந்து காட்சிப்படுத்துகிறோம். சொந்த வீடாக இருந்தால் பணியிட மாறுதல் இல்லாத வேலையாக இருந்தால் வீட்டைப் பொருள்களால் நிறைத்து வைக்கலாம். ஆனால், பணி ஓய்வு பெறும் வரை ஊர் ஊராக அல்லது மாநிலம் மாநிலமாக சுற்ற வேண்டியிருந்தால் அவர்கள் அடையும் சிரமங்கள் சொல்லி மாளாது.
ஒரு குறிப்பிட்ட சூழலில் பழகிய மனிதர்களை விட்டு விட்டு சட்டென்று பாயை சுருட்டிக் கொண்டு போவதுபோல வேறு ஊருக்குப் போவது அத்தனை எளிதானது கிடையாது. பிள்ளைகளின் பள்ளிகளை மாற்றிக் கொண்டே இருந்தால் அவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெறுவது சிரமம். மனித மனம் எப்போதும் பாதுகாப்பான சூழலை விரும்பக் கூடியது. ஆகவே, புதிய சூழலை எதிர்கொள்ள தயக்கம் உண்டாகிறது. இருப்பிட மாற்றம் ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கைச் சக்கரம், பழக்கவழக்கங்கள் மற்றும் உளவியல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வாழ்வியல் நிகழ்வு.
இடமாற்றத்தைப் பணி சார்ந்த அல்லது பொருளாதார ரீதியான மாற்றமாக மட்டுமே பார்க்கிறோம். இதன் பின்னே ஆழமான உளவியல் போராட்டங்களும் உள்ளன. பழகிய தெருக்கள், தெரிந்த கடைகள், பழகிய அலுவலக நண்பர்கள் என நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் இருப்பதுபோல் ஒர் உணர்வு இருக்கும். அக்கம் பக்கத்தினர் உறவினர் போல நடந்து கொள்வார்கள். திடீரென அந்தச் சங்கிலி உடைபட்டுப் போகும்போது மனதுக்குள் மெல்லிய அச்சம் ஏற்படும்.
ஒரே ஊரில்கூட வீடு மாறும்போது சங்கடமாக இருக்கும். முகவரி மாற்றம் செய்ய வேண்டிய சேவைகள் முதலில் முக்கியம்; அனைத்தையும் இணையவழியில் செய்ய முடியும் என்றாலும், அதுவும் பெரிய சிரமம்தான். நாம் ஒர் ஊரில் தங்கும் விடுதியில் அறை எடுத்து இரண்டு நாள்கள் தங்கியிருப்போம், பின்னர், அறையைக் காலி செய்யும் போது ஏதோ ஓர் உணர்வு தோன்றும். அந்த ஊருக்கு, அந்த அறைக்கு நாம் மீண்டும் நம் வாழ்நாளில் வரவே சாத்தியமில்லை என்ற உண்மை முகத்தில் அறையும். அப்படி இருக்க பழகிய இடத்தை விட்டுவிட்டு புதிய இடத்துக்குப் போவது எல்லோருக்கும் எளிதன்று.
குடும்பச் சுமைகள் இல்லாதவர்களுக்கு பணியிட மாறுதல் கொண்டாட்டமாக இருக்கும். புதிய சூழல், நண்பர்கள், வாழ்க்கை முறை என நம்மை வெளிப்படுத்தவும் ஒரு நல்வாய்ப்பாக அதை எடுத்துக் கொண்டால் அது நேர்மறை எண்ணம் ஒரு புதிய சூழலில் நமது தகவமைத்துக் கொள்ளும் திறன் வளர்கிறது. புதிய அனுபவங்கள் வாழ்க்கையில் இனிமையைக்கூட்டுவதாகவும் இருக்கலாம். புதிய சவால்களை எதிர்கொள்ளும்போது மனதில் தன்னம்பிக்கை ஆழமாக வேரூன்றுகிறது. நம் நட்பு வட்டமும் சமூகத் தொடர்புகளும் விரிவடைகின்றன.
சில நேரங்களில் பழைய இடத்தில் அலுப்பூட்டும் சூழல்களுக்கு இடமாறுதல் உற்சாகத்தைத் தரலாம். வளர்ச்சி என்பது ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்து வெளிவருவது; புதிய நீர்நிலைக்குப் பழகிக் கொள்ளும் மீனைப் போல மனித மனமும் பழகிக்கொள்ள வேண்டும். இந்த நெகிழ்வுத் தன்மைதான் வாழ்க்கையில் எந்த ஒரு திடீர் மாற்றத்தையும் தாங்கும் ஆற்றலை நமக்குத் தரும் உலகைப் பல்வேறு சாளரங்கள் வழியாகப் பார்ப்பது சிறந்ததுதானே?.
ஒரே சாளரம் வழியே பார்த்தால் ஒரே காட்சியைத்தான் தினமும் பார்க்க நேரும்; அது நாளடைவில் சலிப்புத் தட்டிவிடும். வெவ்வேறு சாளரங்கள் வழியாகப் பார்க்கும்போது வெவ்வேறு காட்சிகள் நமக்குக் கிளர்ச்சியூட்டும். பழைய இடங்களில் தேங்கிப்போன கசப்பான நினைவுகள் மனச்சோர்வுகள் ஆகியவற்றிலிருந்து இடமாறுதல் விடுதலை அளிக்கும். சட்டையை மாற்றுவதைப்போல இடமாறுதலையும் இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய செடியை ஓரிடத்தில் இருந்து பிடுங்கி வேறு இடத்தில் நடும்போது முதலில் அது வாடிவிடும்; அது பிழைக்காதோ? என நாம் நினைக்கும்போது, மண்ணில் பற்றிக்கொண்டு தழைக்கும்; பின் வளரும். அதுபோலவே சட்டென ஓர் இடமாறுதலை நம்மால் ஏற்க முடியாது.
ஒவ்வாத சூழல் என தோன்றும்; நமது அனுபவத்தின் ஆழத்தையும், சிந்தனையின் அடர்த்தியையும் அதிகரித்துக்கொள்ள இது ஒரு நல்வாய்ப்பு என அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தைக்கு புதிய பல் முளைக்கும்போது ஏற்படும் தற்காலிக அசெüகரியத்தைப் போலவே இடமாறுதலும் ஆகும்; ஆரம்பக்கட்டச் சிக்கல்கள் இருக்கவே செய்யும். அதேபோல புதிய இடத்துக்குச் செல்லும்போது வீடு பிடிப்பது, புதிய வழித்தடங்களைப் புரிந்துகொள்வது, புதிய கலாசாரம் மற்றும் மொழி சார்ந்த சிரமங்கள் என ஆரம்பத்தில் பல பிரச்னைகள் இருக்கும்; சில மாதங்கள் கடந்த பிறகு வலுவான அனுபவம் மற்றும் ஆளுமை வளர்ச்சி நமக்குப் பரிசாகக் கிடைக்கும்.
நம் வீட்டில் பல நாள்களாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் பொருள்களை வேறு இடத்துக்கு மாற்றும் போது வெறுமனே தளவாடங்கள் மாறுவதில்லை; நம் மனநிலையும்கூட சேர்ந்து மாறுகின்றன. வீட்டுக்குள் ஒரு புதிய உற்சாகமும் மகிழ்ச்சியும் பரவுவதுபோல இருக்கும். அதேபோல்தான் பணியிட மாற்றமும்; வீட்டுக்குள் நாம் செய்யும் மாற்றங்கள். நம் அகத்தைச் சீரமைப்பதைப் போல பணியிட மாற்றம் நம் பணியிலும், வாழ்விலும் ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது.
"தாடிக்கு ஒரு சிகைக்காய், தலைக்கு ஒரு சிகைக்காய் அல்ல; இரண்டுக்கும் ஒன்றுதான்' என்பது கிராமத்து சொலவடை. இது இடமாறுதலுக்குப் பொருந்தாது. பணியிட மாற்றம் எல்லோராலும் வரவேற்கப்படாது. அவரவர் விருப்பம், குடும்பச் சூழ்நிலை, உடல்நிலை, வசதி வாய்ப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபடும். முன்பு அதிகாரிகள் அலுவலர்களை "தண்ணியில்லா காட்டுக்கு மாற்றி விடுவேன்' என மிரட்டுவார்கள். அப்போது தண்ணீர் மட்டுமே செழுமையைக் குறித்தது. இப்போதோ பல்வேறு காரணிகள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஆகவே, வாழ்க்கையை அதன் போக்கில் போக விட்டு வாழக் கற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது.
கடந்த காலத்தின் சுமையையும் எதிர்காலம் குறித்த பயத்தையும் ஒதுக்கிவைத்து விட்டு, "இப்போது' நிகழும் கணத்தில் முழுமையாக வாழும்போது, புயலிலும் முறியாத மூங்கிலைப்போல சூழ்நிலைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து, அமைதியுடனும் நிறைவுடனும் நம்மால் வாழ முடியும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.