ஏரிகள் சீரமைப்பில் வேளாண் மறுமலர்ச்சி
'எல் நினோ'வின் தாக்கத்தால் வரவிருக்கிற வடகிழக்குப் பருவமழையின் பேரளவு மழைநீரைச் சேமிக்க போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி...
இந்த ஆண்டு 'எல் நினோ' அதாவது 'கெட்ட' என்ற பொருள்படும் காலநிலை மாற்றத்தால் பருவகால மழை உலகின் அநேக நாடுகளில் குறைந்த மற்றும் அதிக மழைப் பொழிவால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் ஜூன்-செப்டம்பர் மாதங்களின் தென்மேற்கு பருவமழை மூலம் கிடைக்கும் சுமார் 80 சதவீத மழை அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தமிழகத்தில் உணரப்பட்டாலும், மற்ற இந்திய மாநிலங்களைப் போல் அல்லாமல், தமிழகத்துக்கே உரிய வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர்-டிசம்பரில் அதிக மழை பெற வாய்ப்பு உள்ளது. சூரியனால் வெளிப்படுத்தப்படும் வெப்பம் சுமார் 6,000 டிகிரி சென்டிகிரேட். இதில் ஒரு சிறு பகுதியே பூமியை வந்தடைகிறது. இந்த வெப்ப நிலையே கடல்நீரை ஆவியாக்கி மேகங்களால் மழையாகக் கிடைக்க உதவுகிறது. இந்த வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படும்போது பருவகால மாற்றம் ஏற்படுகிறது.
எனினும், எந்த ஆண்டிலும் மழையே இல்லாமல் அறவே பொய்த்துப் போவது இல்லை; இதுவே இயற்கை. கடந்த 50 ஆண்டுகளில், 1975-க்குப் பிறகு-மூன்று ஆண்டுகள் 1982-83, 1997-98 மற்றும் 2015-16 - ஆண்டுகளில் கடுமையான 'எல் நினோ' தாக்கம் இந்தியாவில் ஏற்பட்டு நம் தமிழகத்திலும் உணரப்பட்டது. அதிலும் குறிப்பாக 2015-ஆம் ஆண்டில் ஏற்பட்ட எல் நினோவால், 2015 நவம்பரில் பெய்த பெருமழையால் கடும் சேதத்தை சென்னை மாநகரம் சந்தித்தது; அதேபோன்ற நிலை இந்த ஆண்டு ஏற்பட்டாலும் வியப்படைவதற்கு இல்லை.
Advertisement
Advertisement
'மகேசனை நம்பலாம்; ஆனால் மழையை நம்ப முடியாது'- இது கிராமப்புற மக்களின் கூற்று. நகர்ப்புறங்களில் மழை குறைந்தாலும் பாதிப்புகள் அதிகம் இல்லை. ஆனால், விவசாயத்தையே நம்பியுள்ள கிராமங்களுக்கு மழையே உயிர்மூச்சு. பெய்கிற சிறுதூறல் மழையில் பெரும்பகுதியை பூமி உள்வாங்கி மண்ணுக்கு அடியில் எங்கெல்லாம் துவாரங்கள் உள்ளதோ, அங்கெல்லாம் நீரைப் புகுத்தி நிலத்தடி நீர்மட்டம் மேம்பட வழிவகுப்பது இச்சிறு தூறல் மழையே; இந்தக் கருத்தின் வெளிப்பாடே சிறுதுளி பெருவெள்ளம்.
தமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களில் அமைந்துள்ள மழைநீர் சேமிப்பு அமைப்புகளான ஏரிகள் மூலம் ஓரளவுக்கு மேல் பெய்கிற பெருமழை நீரைத் தேக்கினால் அது மழையற்ற கோடைகாலத்துக்கு பெரிதும் உதவும். எக்காரணம்கொண்டும் ஏரிகளை எவரும் ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. அவையே எதிர்காலத்தின் நீர் ஆதாரங்களாகும். நகரங்களில் வீடுகளுக்கு மழைநீர் சேகரிப்பு எவ்வளவு கட்டாயமோ, அவ்வளவு கட்டாயம் கிராமங்களில் மழைநீர் சேகரிப்பதும் ஆகும்.
எனவே, கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளையும், குளங்களையும் மராமத்து செய்து அவற்றை முழு கொள்ளளவுக்குத் தயார் செய்வது அரசு மற்றும் அனைத்து மக்களின் இன்றியமையாக் கடமையாகும். ஆனால், இவற்றின் முக்கியத்துவம் உணரப்பட்டாலும், செயல்பாடுகள் இன்றளவும் மிகக் குறைவாகவே உள்ளது. இதுவே ஒட்டுமொத்த நீர்ப் பற்றாக்குறைக்கு அடிப்படைக் காரணமாகும். தமிழகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதே நிலையே நீடிக்கிறது. இந்நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது.
தமிழகத்திலுள்ள 37 மாவட்டங்களில் நான்கைத் தவிர்த்து (திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் நீலகிரி), மற்ற 33 மாவட்டங்களிலுள்ள மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 2024-25-இல் தமிழக அரசின் புள்ளிவிவரப்படி 41,123. இவற்றுள் 24,263 ஏரிகள், ஒவ்வொன்றும் 40 ஹெக்டேருக்கும் குறைவான பாசனப்பரப்புடன் ஊராட்சிகளால் பராமரிக்கப்படும் சிறிய வகை ஏரிகளாகும். இவற்றின் மொத்த பதிவு செய்யப்பட்ட பாசனப் பரப்பு 2.21 லட்சம் ஹெக்டேராகும்.
நடுத்தர வகை ஏரிகளான 40 முதல் 200 ஹெக்டேர் பாசனப் பரப்புடைய 14,405 ஏரிகளின் பதிவு செய்யப்பட்ட பாசனப் பரப்பு 5.35 லட்சம் ஹெக்டேராகும். மாறாக, வீராணம், காவேரிப்பாக்கம் போன்ற பெரிய வகை ஏரிகளின் எண்ணிக்கை 534 ஆகும். இவற்றின் மொத்த பதிவு செய்யப்பட்ட பாசனப் பரப்பு 2.56 லட்சம் ஹெக்டேராகும். ஆக, மொத்தம் பதிவு செய்யப்பட்ட ஏரிப் பாசனப் பரப்பு 10.12 லட்சம் ஹெக்டேராகும்.
தற்போது நீர்வளத் துறையின் கணக்கில் உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 39,202. இது முந்தைய (1977) தமிழக பொதுப் பணித் துறையின் கணக்கீடு ஆகும். மேலும், இந்த ஏரிகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள 17,500 வருவாய் கிராமங்களில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் தமிழக அரசின் புள்ளியியல் துறையால் வெளியிடப்பட்டுவரும் பருவ மற்றும் பயிர் அறிக்கையின்படியான 41,123 என்ற மொத்த ஏரிகளின் எண்ணிக்கை, முந்தைய பொதுப் பணித் துறையின் கணக்கீட்டின்படி (41,123-39,202) 1921 ஏரிகள் அதிகமாகும்.
இப்படி ஏரிகள் மற்றும் அவற்றின் பாசனப் பரப்பு குறித்த புள்ளிவிவரங்களில் உண்மைத்தன்மை இல்லாத போதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) சராசரியாக ஏரிப் பாசனத்தால் பயன்பெற்ற பாசனப் பரப்பு 3.96 லட்சம் ஹெக்டேர் மட்டுமே. அதாவது, மொத்தம் பதிவு செய்யப்பட்ட ஏரிப் பாசனப் பரப்பான 10.12 லட்சம் ஹெக்டேரில் இது 39 சதவீத நிலம் மட்டுமே சாகுபடியாகியுள்ளது. இந்தப் புள்ளிவிவரம் உணர்த்துவது, கடந்த 60 ஆண்டுகளாக, தமிழகம் எந்த அளவு ஏரிப் பாசனத்தை சிறிது சிறிதாக இழந்து வருகிறது என்பதை உணர்த்துகிறது. மேலும், தமிழகத்தின் அனைத்து ஏரிகளின் நிகர கொள்ளளவு 347 டி.எம்.சி. ஆனால், அனைத்து (90) அணைகளின் நிகர கொள்ளளவு 224 டி.எம்.சி.
தற்போது, தமிழகத்திலுள்ள 37 மாவட்டங்களில் 17-இல் 81 சதவீத ஏரிகளும், 97 சதவீத ஏரிப் பாசனப் பரப்பும் அடங்கியுள்ளன. மீதமுள்ள 20 மாவட்டங்களில், 4-இல் ஏரிகளே இல்லை. மற்ற 16-மாவட்டங்களில் 19.5 சதவீத ஏரிகளும், 3 சதவீத ஏரிபாசனப் பரப்பும் உள்ளன, இப்புள்ளிவிவரம் சிறப்பாக உணர்த்துவது யாதெனில், மேலே குறிப்பிட்ட 17 மாவட்டங்களில், முன்னுரிமைப்படி அனைத்து ஏரிகளையும் போர்க்கால அடிப்படையில் செப்பனிட்டு புனரமைத்தால் உடனடியாக ஏரிப் பாசனப் பரப்பும் தற்போதுள்ள நான்கு லட்சம் ஹெக்டேரிலிருந்து எட்டு லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தின் சராசரி மழை அளவான 965 மி.மீ.-இல் 80 சதவீதத்துக்கும் அதிகமான மழை இரு முக்கியப் பருவகாலங்களான தென்மேற்கு (340 மி.மீ.) மற்றும் வடகிழக்கு (480 மி.மீ.) பருவக் காற்றால் கிடைக்கிறது. பெரும்பகுதி மழை ஓரிரு மாதங்களில் குறிப்பாக, அக்டோபர்- நவம்பரில் ஒரு சில நாள்களில் மிக அதிக அளவாகப் பதிவாகிறது.
இந்த மழை நீரை நல்ல முறையில் தேக்கி வைத்து கோடை மற்றும் வறட்சிக் காலங்களில் பயன்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டவையே இந்த ஏரிகளாகும். பெரிய ஆறுகளும், கால்வாய்களும் இல்லாத தமிழ்நாட்டில் ஆங்காங்கே பெய்யும் மழை நீரைச் சேமித்துப் பாதுகாத்துப் பயன்படுத்த உதவுபவையே ஏரிகள். தமிழகத்தில் கடந்த 75 ஆண்டுகளில் ஏரிப் பாசனம் எப்படி மாறி வந்துள்ளது என்பதைக் கீழுள்ள புள்ளிவிவரங்கள் தெளிவாக்குகின்றன.
1950-களில் 7.8 லட்சம் ஹெக்டேராக இருந்த ஏரிப்பாசனம், 1960-களில் மிக அதிகபட்சமாக 9.1 லட்சம் ஹெக்டேராகவும், 1970-களில் 8.5 லட்சம் ஹெக்டேராகவும், 1980-களில் 6.2 லட்சம் ஹெக்டேராகவும், 1990-களில் 6.3 லட்சம் ஹெக்டேராக ஒரே நிலையிலும், பின்பு 2000-களில் 5.1 லட்சம் ஹெக்டேராகவும் குறைந்து, 2010-களில் 3.9 லட்சம் ஹெக்டேராகவும் மேலும் குறைந்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது.
அதாவது, கடந்த 15 ஆண்டுகளில் ஏரிப் பாசனத்தில் 6 லட்சம் ஹெக்டேர் சாகுபடியில் இல்லை என்பது தெளிவாகிறது. இப்படிப்பட்ட நிலைக்கு ஏரிகளின் பராமரிப்பு 70-80 சதவீதம் குறைந்துவிட்டதும், 'குடிமராமத்து' எனப்படும் ஏரிப்பராமரிப்பு ஏறத்தாழ மறைந்து விட்டதும், ஏரிப் பாசனம் பெரும்பாலான விவசாயிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளதும், ஏரிகளின் ஆக்கிரமிப்பு மிக அதிகமாக உள்ளதும் முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றன. மேலும், பெரும்பாலான ஏரிகளின் வரத்துக் கால்வாய்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
ஏரிப் பயனாளர்கள் இடையேயான ஒற்றுமை வெகுவாகக் குறைந்து ஏரிகளின் மேம்பாடு குறித்த எண்ணமே இல்லாமல் உள்ளனர். கிணற்றுப் பாசனம், இலவச மின்சாரம் வந்த பிறகு, விவசாயிகள் ஏரிகளை மறந்துவிட்டனர். மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு ஏரிகளிலிருந்து எவ்வளவு வருவாய் ஈட்டமுடியும் என்ற குறிக்கோளைக் கொண்டுள்ளது. அவற்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்த எண்ணமே அரசுகளுக்கு நீண்டகாலமாக இல்லை.
இந்த நிலைகளை எல்லாம் தவிர்த்து ஏரிப் பாசனத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர தமிழக அரசு 2000-ஆம் ஆண்டில் கொண்டுவந்த சிறந்த திட்டமே 'தமிழக விவசாயிகள் நீர் மேலாண்மை சட்டம்-2000'. இந்தத் திட்டத்துக்கு புத்துயிர்கொடுத்து தற்போது செயல்படுத்தினால் அநேக ஏரிப் பிரச்னைகள் சுலபமாகத் தீரும். இனியாவது அரசும், பயனாளர்களும் இணைந்து, அடுத்து 'எல் நினோ'வின் தாக்கத்தால் வரவிருக்கிற வடகிழக்குப் பருவமழையின் பேரளவு மழைநீரைச் சேமிக்க போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் மேற்கொண்டால் அது தமிழக வேளாண்மைக்கு வளம் கொழிக்கும் செயல் என உறுதியாகக் கூறலாம்.
கட்டுரையாளர்: பேராசிரியர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.