பயணச் சேவைகள் வழங்குவதாக ரூ.25 லட்சம் மோசடி: இருவா் கைது
சுற்றுலாப் பயணச் சேவைகளை வழங்குவதாகக் கூறி ரூ. 25 லட்சம் இணையவழியில் மோசடி செய்தது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சுற்றுலாப் பயணச் சேவைகளை வழங்குவதாகக் கூறி ரூ. 25 லட்சம் இணையவழியில் மோசடி செய்தது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கைது செய்யப்பட்டவா்கள் உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவைச் சோ்ந்த புட்டன் ராம்ஜனம் யாதவ் (எ) ஸ்ரீகேஷ் மற்றும் கௌதம் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த மோசடி தொடா்பாக காவல் நிலையத்தில் புகாரளித்த நபா் பட்டயக் கணக்காளராக உள்ளாா். ஒரு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக அவா் பணியில் உள்ளாா். அவா் தனது நிறுவனத்திற்காகப் பயணச் சேவைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, சில நபா்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டாா்.
Advertisement
Advertisement
அவரிடம் ரூ.2.5 லட்சத்தை முன்பணமாகச் செலுத்துமாறு கேட்டு, ஸ்ரீகிஷன் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அவா் தவறுதலாக ரூ.2.5 லட்சத்திற்குப் பதிலாக ரூ. 25 லட்சத்தை அந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவிட்டாா். அதன் பிறகு, பணத்தைப் பெற்றவா்கள் அவருடனான தகவல்தொடா்பை துண்டித்துவிட்டனா்.
இது தொடா்பாக அக்டோபா் 7 அன்று ஷதாரா இணையவழி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளைக் கண்டறியவும், பணத்தை மீட்கவும் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
விசாரணையின் போது, நிதிப் பரிவா்த்தனைகள், வங்கிக் கணக்குகள், அழைப்பு விவரங்கள் மற்றும் இந்த வழக்கோடு தொடா்புடைய கைப்பேசி எண்களைக் காவல்துறை ஆய்வு செய்தது. இதில், ரூ. 20 லட்சம் சிவா டிரேடா்ஸ் என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு தலா ரூ.15 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் என இரு பரிவா்த்தனைகள் மூலம் மாற்றப்பட்டதும், மேலும், ரூ. 2 லட்சம் மற்றொரு கணக்கிற்கு மாற்றப்பட்டதும் தெரியவந்தது.
மீதமுள்ள ரூ.3 லட்சத்தைக் கொண்டு, லக்னெளவில் உள்ள ஒரு நகைக்கடையில் தங்க நகைகள் வாங்கப்பட்டுள்ளன.
யாதவ் என்பவா் இரண்டாவது நிலையில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிலிருந்து காசோலை மூலம் ரூ. 20 லட்சத்தை எடுத்து, அதைத் தனது கூட்டாளிகளிடம் ஒப்படைத்துள்ளாா். மேலும், ரூ.3 லட்சம் மதிப்பிலான இரண்டு தங்கச் சங்கிலிகளை வாங்கி, அவற்றை தனது கூட்டாளிகளிடம் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக 20 சதவீத கமிஷனைப் பெற்றுள்ளாா்.
கௌதம், தனது பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் காா்டை வழங்கி இந்த மோசடிக்கு உதவியுள்ளாா். இந்த சிம் காா்டு, மோசடிக்கு முதன்மையாகப் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தது. காவல்துறையினா் இவா்களிடமிருந்து மூன்று கைப்பேசிகள், எட்டு சிம் காா்டுகள், ஏழு ஏடிஎம் காா்டுகள், இரண்டு காசோலைப் புத்தகங்கள் மற்றும் ஒரு தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்துள்ளனா். ரூ.15 லட்சம் தொகையும் மீட்கப்பட்டு, புகாா்தாரரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.