FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கட்டுமானத் திட்டம் அல்ல; தலைமுறைக்கான முடிவு!

புதிய தலைமைச் செயலகம் தொடர்பான நடுப்பக்கக் கட்டுரை.....

24 செப்டம்பர் 2026, 3:29 am IST
தலைமைச்செயலகம்..
பகிர்:

புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்திருப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. தற்போதைய தலைமைச் செயலகத்தை விரிவாக்கம் செய்ய முடியாது என்பதாலும், உயர்தர வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் ரூ. 1,200 கோடி மதிப்பில் 20 லட்சம் சதுர அடியில் மிகவும் பிரம்மாண்டமான தலைமைச் செயலகம் கட்டப்படும். இதில் அதிநவீன வசதிகள் இடம்பெறும் என்றும் அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

புனித ஜார்ஜ் கோட்டையானது கிழக்கிந்திய கம்பெனியால் கடந்த 1640-ஆம் ஆண்டு வணிக செயல்பாட்டுக்காக வாங்கப்பட்ட நிலத்தில் கட்டடப் பணி தொடங்கப்பட்டு, 1644-ஆம் ஆண்டு பணிகள் நிறைவடைந்தன. 1652-ஆம் ஆண்டு பிரசிடென்சி நிலைக்கு உயர்த்தப்பட்ட பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரபூர்வ தலைமையிடமாகத் திகழ்ந்தது.

சுதந்திரத்துக்குப் பின்னர் தமிழக அரசின் தலைமைச் செயலகமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

சுமார் 400 ஆண்டுகளாக நிர்வாக மையமாகவும், தமிழக அரசு சுமார் 40 ஆண்டுகள் ஆட்சிப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது. இது 107 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தலைமைச் செயலகத்தின் பயன்பாட்டுக்காக சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. எஞ்சிய நிலப்பரப்பு இந்திய பாதுகாப்புத் துறை மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், இந்த வளாகத்தை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் முடியவில்லை. தற்போது தலைமைச் செயலகம் இரண்டு கட்டடங்களில் செயல்பட்டு வருகிறது.

1978-இல் கட்டப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகை பிரதான கட்டடமான புனித ஜார்ஜ் கோட்டை ஆளுநரின் இருப்பிடமாக முதலில் பயன்படுத்தப்பட்டது. தற்போது சட்டப்பேரவை முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், நிதித் துறை மற்றும் பல முக்கியத் துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகம் 2.07 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ளது. மாநில அரசில் விரிவடைந்துவரும் நிர்வாகத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் நாமக்கல் கவிஞர் மாளிகை 1978-ஆம் ஆண்டு 3.75 லட்சம் சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 10 மாடிகள் கொண்டதாகக் கட்டப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் செயலாளர்கள், அலுவலர்கள் மற்றும் 6,000-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இடப்பற்றாக்குறை மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. பின்னர், அது பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது. இதனால், தலைமைச்செயலகம் தொடர்ந்து கோட்டை வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளில் தலைமைச் செயலக ஊழியர்களின் எண்ணிக்கையும், நிர்வாகப் பொறுப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. ஆகவே, தலைமைச் செயலக விரிவாக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். தற்போதைய கட்டட கட்டமைப்பை பெரிதாக மாற்ற முடியாத சூழல் இருப்பதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகவேதான், ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டியது அவசியமாகிறது. அதில் அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே வளாகத்தின் கீழ் கொண்டு வந்து நிர்வகிக்கப்படும்.

இவற்றில் தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வசதிகள் நவீன நிர்வாக வளாகம், போதுமான வாகன நிறுத்தும் இடம், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள், அலுவலர்களுக்கான நவீன வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. புனித ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரிய கட்டடங்களை வரலாற்று மரபுச் சின்னங்களாகப் பாதுகாத்து அவற்றின் பாரம்பரிய மதிப்பை வருங்காலத் தலைமுறை அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே புதிய கட்டடத்துக்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு போதுமான இடம், போக்குவரத்து வசதி, சுற்றுச்சூழல் மற்றும் சட்டப் பிரச்னைகள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, புதிய தலைமைச் செயலகத்துக்காக சென்னையின் முக்கியமான பகுதிகளில் இடங்களை தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

அவற்றில் முதலாவதாக பட்டினப்பாக்கம் தமிழக அரசின் விருப்பத்தில் இருக்கிறது. நகரின் மையப் பகுதியில் இருப்பதும், சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பு இருப்பதும் அரசின் தேவையில் முதன்மையாக இருக்கிறது. ஆனால், இது கடலோரப் பகுதியாக இருப்பதால் கட்டடங்கள் கட்டுவதற்கு பல்வேறு விதிமுறைகள் இருப்பதும், தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாக செய்திகள் சொல்கின்றன.

இரண்டாவதாக கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி மையம், இந்திய ஆராய்ச்சி வளாகத்தில் சுமார் 35 ஏக்கர் நிலம் இருக்கிறது. கிண்டியிலேயே ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் பெரிய அளவில் நிலம் இருப்பதாலும், நகரின் மையப் பகுதியில் இருப்பதாலும் இந்தப் பகுதி முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. மூன்றாவதாக நந்தம்பாக்கத்தில் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலம் அரசின் பரிசீலனையில் இருக்கிறது. இந்த இடத்துக்கு அருகில் விமான நிலையம் இருப்பதாலும், தென்சென்னை மற்றும் மேற்கு சென்னைக்கு அருகில் இருப்பதாலும் எளிதாக மக்கள் வந்து செல்ல முடியும் என்பதாலும் இந்த இடமும் அரசின் பரிசீலனையில் உள்ளது.

கோயம்பேடு பழைய பேருந்து நிலைய பகுதி 36 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தப் பகுதியில் மெட்ரோ ரயில் வசதியுடன் உள்ளது. இவையும் சாதகமான சூழ்நிலையாகப் பார்க்கப்படுகிறது. ஆக, இந்த 4 இடங்களில் உள்ள சாதக, பாதக அம்சங்களைக் கொண்டு அரசு புதிய கட்டடத்துக்கு இடம் தேர்வு செய்யப்படும் என்ற கருத்து நிலவுகிறது. இவை தவிர்த்தும், மேலும் பல இடங்கள் பரிசீலனையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகின் தொன்மை சமூகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிற தமிழ்நாடு நாகரிகப் பண்பாட்டின் முதன்மையாக உள்ள தமிழ்நாடு, தனது நிர்வாகத்தின் இதயமாக இருக்கிற தலைமைச் செயலகத்துக்கு ஒரு புதிய இடம் தேடுவதும், அதற்கு ஒரு புதிய முகத்தை ஏற்படுத்துவதும், ஒரு புதிய முகவரியைக் கண்டறிவதும் காலத்தின் கட்டாயம் என்று கருதப்படுகிறது.

அதிகாரத்தின் மையங்களாக ஜனநாயக விவாதக் களங்களாக விளங்கும் ஆட்சி மன்றக் கட்டடங்கள் கட்சிப் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஒத்தக் கருத்தை எட்டப்படுவதும், அதே சமயம் அவற்றை கட்சிகள் ஏற்றுக் கொள்வதும் ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கின்ற நிகழ்வாகும்.

இந்த நிலையில்தான், பட்டினப்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் தலைமைச் செயலகம் கட்டப்படுவதாக பேசுபொருளான போது அதற்கு மீனவ அமைப்புகள், சில அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். முக்கியமாக வாழ்வாதாரம், போக்குவரத்து, கடலோரச் சூழல், செலவு ஆகியவை கேள்விகளாக எழுப்பப்படுகிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து கடலுக்கு அருகில் இருப்பது, படகு நிறுத்தம், மீன்பிடித் தொழில் உள்ளிட்டவை குறித்து அச்சப்படுகிறார்கள்.

ஏற்கெனவே சாந்தோம் சாலை, கிரீன்வேஸ் சாலை, லூப் சாலை இணைப்புச் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெருக்கடி இருக்கிறது. இவையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த 100 ஆண்டுகளுக்கான நிர்வாக மையம் தொலைநோக்கில் திட்டமிடப்பட வேண்டும் என்பதை தமிழக அரசு மிக முக்கியமாகக் கருத்தில் கொண்டு கையாளுகிறது.

ஆகவேதான், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத இடமாகவும், மெட்ரோ ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்துடன் இணையும் இடமாகவும், அதிகாரம் மட்டுமல்லாமல் பொதுமக்களும் எளிதில் அணுகக் கூடிய இடமாகவும் எதிர்கால விரிவாக்கத்துக்கு போதுமான நிலப்பரப்பு உடையதாகவும் இருக்க வேண்டும் என்று அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இவற்றில் சட்டப்பேரவை, தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள், ஊடக மையங்கள், பொதுமக்கள் சேவை மையம் ஆகியவை ஒருங்கிணைந்த வளாக மையமாக இருக்க வேண்டும் என்பதும், மழைநீர் சேகரிப்பு, சூரிய ஆற்றல் கழிவு நீர் மறு சுழற்சி போன்ற பசுமை கட்டமைப்பு, ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் போதுமான வாகன நிறுத்தம், 100 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு சிந்தனை ஆகியவற்றை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் என்பது ஒரு கட்டடம் அல்ல. தமிழ்நாட்டு நிர்வாகத்தின் முகம். அந்த முகம் அழகாக இருப்பது மட்டும் போதாது. மக்களுக்கு அருகில் இருக்க வேண்டும்.

மக்களின் வாழ்க்கையைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும், சுற்றுச்சூழலைப் பேணிக் காப்பதும், போக்குவரத்து சுமையைத் தாங்கிக் கொள்வதும், அடுத்த நூற்றாண்டின் நிர்வாகத் தேவையை நிறைவேற்றுவதற்காகவும் இருக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதிப்பாட்டுடன் இருக்கிறது என்பதை எதிர்வினையாற்றுகிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கட்டடம் பெரிதாக இருப்பதைவிட அதன் நோக்கம் புதிதாக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். புதிய தலைமைச் செயலகம் கட்டுவது ஒரு கட்டுமானத் திட்டம் அல்ல. அது ஒரு தலைமுறைக்கான முடிவு.

கட்டுரையாளர்:

முன்னாள் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments