அடையாளம் காட்டும் தாய்மொழி
தாய்மொழி ஓர் இனத்தின் முகம், முகவரி மட்டுமல்ல அது தனித்துவ சக்தியாகும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் மூதாதையர் முன்மொழிந்த, பெற்றவர் வழிவந்த, மண், மரபு சார்ந்த மொழியே தாய்மொழியாகும். குழந்தை கருவாய் இருந்தபோதே கேட்ட முதல் ஓசையே, அந்தக் கருவைச் சுமந்ததாய் பேசிய மொழியேயாகும். அதுவே தாய்மொழி, இந்தத் தாய்மொழியே அவனுக்கு மரபணு சார்ந்த அடையாளத்தைக் கொடுக்கும்.
உலகில் வடதுருவத்துக்கும், தென் துருவத்துக்கும் இடையில் முக்கால் பங்கு நீரில் மிதப்பதுபோல் இருக்கிற கால் பங்கு நிலத்தில் பலநாடுகளில் வாழ்கிற மக்கள் மொழி, மதம், நிறம், பண்பாடு என்பனவற்றை முன்னெடுத்து தனித்துவ இனங்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். உலக வரலாற்றைப் பார்க்கிறபோது மதத்தை முன்வைத்தும், நிறத்தைக் காட்டியும், மொழியை முன்னிறுத்தியும், பண்பாட்டைக் காட்டியும் தனித்துவமாய் வாழ பல்வேறு இனங்கள் தனிக்கொடிகளுடன் கூடிய நாடுகளைக் கண்டன. இவற்றில் மொழியைத் தனித்துவமாக வைத்து அடையாளம் காட்டிய நாடுகளே உலகில் அதிகமாகும். ஆகவே மொழி, ஏனைய மதம், பண்பாடு என்பனவற்றைக் கடந்து ஒரு பெரிய சக்தியாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
தாய்மொழி உலகில் வாழ்கிற பல இனங்களின் அடையாளமாகும். அதுவே அவ்வினங்களின் தெளிவான முகவரியாகும். சில நாடுகளில் மதம் வெவ்வேறான போதும் பண்பாட்டில் மாற்றம் உள்ள போதும் பேசுகிற தாய்மொழியே அவர்களை ஒரு கொடிக்குள் இணைக்கிறது. மொழி என்பது ஒருவர் மற்றவருடன் பேச, உறவாட உதவும் ஒரு சாதனம். உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த மொழிகளில் மிகச் சிலவே அதிக மக்கள் பேசும் மொழிகளாக இருக்கின்றன. சில மொழிகளில் பேசுவதற்கு மக்களே இல்லாத நிலை உருவாகி வருகிறது. வேறு சில மொழிகள் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கின்றன. இன்னும் சில மொழிகளுக்குத் தனித்துவமாய் எழுத எழுத்துகளே இல்லை.
உலகில் ஆங்கிலம், சீனம், அரபு, பிரெஞ்சு, ஸ்பானிஸ், ஜெர்மன், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, ரஷியன், மலாய், தமிழ் ஆகிய மொழிகள் அதிகமான மக்கள் பேசும் மொழிகளாக இருக்கின்றன. இந்தியாவில் மிகப் பழைமையான மொழிகளில் தமிழும் ஒன்று. மற்றது சம்ஸ்கிருதம். தமிழ் தந்தையென்றால் சம்ஸ்கிருதம் தாய் என்றும், சம்ஸ்கிருதம் தந்தையென்றால் தமிழ் தாய் என்றும் அறிஞர்கள் சொல்வார்கள். இவ்விரண்டு மொழியும் செம்மொழிகளாகும். ஆனால், சம்ஸ்கிருத மொழிக்கு இல்லாத ஒன்று தமிழ் மொழிக்கு உண்டு. தமிழை இன்று உலகமெங்கும் எட்டுக் கோடிக்கும் மேற்பட்டவர்கள் பேசுகிறார்கள். அது மக்கள் மொழியாக இருக்கிறது. ஆனால், சம்ஸ்கிருதம் மக்கள் பேசுகிற மொழியாக இல்லை.
தமிழ்மொழிக்கு மிகப் பழைமையான இலக்கியம், இலக்கணம் என்பன இருக்கின்றன. அதன் வரலாறு ஈராயிரம் ஆண்டைத்தாண்டி நிற்கிறது என அறிஞர்கள் எழுதுகிறார்கள். மதம் வெவ்வேறான போதும் தமிழ்மொழியே தமிழர்களின் தாய்மொழியாக இருக்கிறது. தாய்மொழி ஓர் இனத்தின் முகம், முகவரி மட்டுமல்ல அது தனித்துவ சக்தியாகும். அதை அடையாளம் கண்டு உலகில் பல இனம் தம்மை ஒரு தனி இனமாகவும் தனி எல்லைக்குள் நிலைநிறுத்திக் கொண்ட வரலாறுகள் இருக்கின்றன. அத்தகைய வரலாறு தான் 'வங்கதேசம்' என்ற நாடு பிரிந்த கதை.
இந்தியாவிலிருந்து மதத்தை முன்வைத்து பாகிஸ்தான் பிரிந்தபோது மதத்தை முன்வைத்தே கிழக்கு பாகிஸ்தான் மக்கள் பாகிஸ்தானுக்குள் இணைந்திருந்தார்கள். இது நடந்து சரியாக 24 ஆண்டுகளுக்குப் பிறகு அதே கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தங்கள் தாய்மொழியான 'வங்களா' மொழியை முன்வைத்துப் போராடி 'வங்கதேசம்' என்ற நாட்டை உருவாக்கினார்கள். இவர்கள் மதம் என்ற கொடியின் கீழ் இணைந்திருப்பதைவிட தாய்மொழியின் கீழ் நிற்பதே எதிர்காலப் பாதுகாப்புக்குச் சரியானது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
இதே போன்று மதம் ஒன்றானபோதும் மொழி வழியே தனித்திருக்கிற நாடுகள் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இருக்கின்றன. ஐரோப்பாவில் ஸ்கண்டிநேவிய நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், ஸ்வீடன், நார்வே, பின்லாந்து ஆகியன மக்கள்தொகையிலும், நிலப்பரப்பிலும் சிறிய நாடுகள்; ஆனால், மொழியால் தனித்துவமான நாடுகள்.
மேற்கண்ட நாடுகளின் மக்களின் நிறம், பண்பாடு, மதம் என்பன வெவ்வேறல்ல. ஆனால், மொழியால் சற்று மாறுபட்டவர்கள். இதேபோன்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாட்டு மக்கள் நிறம், பண்பாடு, மதம் என்பனவற்றால் ஒன்றானவர்கள். ஆனால், பேசுகிற தாய்மொழியின் மூலம் அவர்கள் தங்களைத் தனித்து அடையாளப்படுத்துகிறார்கள். ஒரு பிரான்ஸ் நாட்டவரைப் பார்த்து, 'உன் தனித்துவம் மதத்திலா? மொழியிலா? பண்பாட்டிலா?' என்று கேட்டால் 'தாய்மொழியில் நான் பிரெஞ்சுக்காரன்' என்பான். இதே போன்றே ஜெர்மனியர்களும் ஜப்பானியர்களும் தாய்மொழியை உயர்த்திப் பிடிப்பார்கள்.
உலகத்தின் பல நாடுகளைக் கைப்பற்றிய பிரிட்டன் பக்கத்து நாடாக இருந்த போதும் பிரான்ஸ்காரர்கள் ஆங்கில மொழியில் மயங்கவில்லை. தாய்மொழியை எப்போதும் ஜெர்மானியர்கள் துறக்கவில்லை. சொந்தமாக எழுத்துகள் இல்லாத மலாய் மொழியில் மலேசியாவும் இந்தோனேசியாவும் தமது நாடுகளை ஆட்சி செய்கின்றன. ஆனால், உலகின் மூத்த மொழியென்றும், செம்மொழியென்றும் புகழப்படும் தமிழைத் தாய்மொழியாகப் பேசும் தமிழர்களுக்கு தாய்மொழி மீதான தயக்கம் உண்டு. அந்தத் தயக்கமே கற்றல் மொழி தமிழா எனக் கேட்க வைக்கிறது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாணவர்களின் கல்வி ஆங்கில மொழியில் இருக்கிறது. அவர்களில் பல மாணவர்கள் தாய்மொழியை ஒரு மொழியாகக் கூடப் படிப்பதில்லை.
தமிழ்நாட்டின் நகர்ப்புற வீதிகளில் உலாவரும் ஆங்கில மொழி மெல்ல மெல்ல கிராமங்களையும் ஊடுருவத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் வெளியாகும் சில பத்திரிகைகள், இதழ்கள் என்பனவற்றில் எழுதப்படும் வார்த்தைகளில் ஆங்கிலத்தை வலுக்கட்டாயமாகவே திணித்திருப்பதைப் பார்க்கலாம். தொலைக்காட்சிகளில் வானொலிகளில்கூட தமிழில் ஆங்கிலம் கலந்தே உச்சரிக்கப்படுகின்றன. இதை விவரமாக சொல்வதானால் தமிழ்நாட்டில் ஒலி, ஒளி, எழுத்து ஆகிய மூன்று ஊடகங்களில் ஆங்கில மொழிக்கலப்பு அச்சமின்றி நடைபெறுகிறது.
சாதாரணத் தமிழ் மக்களின் வார்த்தைகளில் இரவு, ராத்திரி ஆகிய வார்த்தைகள் மறைந்து 'நைட்' என்ற ஆங்கில வார்த்தை அந்த இடத்தில் உட்கார்ந்து விட்டது. 'நாளை இரவு சந்திக்கிறேன்' என்று யாராவது சொன்னால் அவர் செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்தவரோ எனப் பார்க்கிற பார்வையே நிறையவுண்டு. இது ஓர் உதாரணம். இதுபோல் பல தமிழ் வார்த்தைகள் தமிழர்களிடமிருந்து காணாமல் போய் அந்த இடங்களில் ஆங்கிலம் கம்பீரமாக உட்காரத் தொடங்கிவிட்டது. தனித் தமிழைப் பயன்படுத்துங்கள் என்று நான் சொல்லவில்லை. ஏற்கெனவே பழக்கத்தில் இருந்த தமிழ் சொற்களைக் கைவிட்டு ஆங்கிலச் சொற்களை ஏன் கையாள வேண்டும்? தமிழில் சொற்கள் இல்லையா என்ன? ஆ(பசு), கோ(மன்னன்) தீ, போ, தை, ஈ (ஓர் உயிர்) கை, பூ என ஓர் எழுத்திலேயே சொல்லை தந்த மொழி தமிழ்.
தமிழைப் படித்தால் சொற்களை அடையாளம் காணமுடியும். உலகில் எந்த மொழியும் கற்காமல் பேசவோ எழுதவோ வராது. தமிழைப் படிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் பக்கத்து மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அந்த மாநிலங்களின் தாய்மொழியே ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் இருக்கிறது. தமிழகத்தில் இது குறித்து சிந்திக்க ஆட்சியில் இருந்தவர்களும் - இருப்பவர்களும் மறந்துவிட்டார்கள். இங்கு ஹிந்தியை விரட்டுவதாகக் கூறிக்கொண்டு ஆங்கிலத்தைத் துணை கொண்டார்கள்.
ஆங்கிலத்தின் மூலமாக தமிழர் எந்தக் கொடியும் ஏற்ற முடியாது. அவ்வாறு ஆங்கிலத்தால் ஏற்றப்படும் கொடி, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் கொடிகளின் கீழேதான் இருக்கும். காரணம் ஆங்கிலம் தமிழர்களின் தாய்மொழியல்ல. அது இன்னொரு இனத்தின் மொழி.
ஈழத்தில் நடைபெற்ற இனக்கலவரத்தில் உயிரைக் காக்க பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா , அமெரிக்கா என ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குப் போனவர்கள் தங்கள் குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும் என்பதில் போராடி வருகிறார்கள். அதே நேரத்தில், அவர்கள் ஆங்கிலத்தில் கல்வி கற்பதை பெருமை கொள்கிறார்கள் என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.
ஆனால் ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், டென்மார்க், நெதர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளுக்குப் போனவர்கள் குழந்தைகள் அங்கு கற்கிற மொழியால் கவலைப்படுகிறார்கள். அவர்களில் சிலர் இங்கு கண்ட கண்ட மொழியைப் படிப்பதைக் காட்டிலும் இலங்கையில் தாய்மொழியுடன் சிங்களத்தையும் கற்றிருக்கலாம் என்று ஆதங்கப்படுவோர் இருக்கின்றனர்.
பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாட்டிலிருந்து பிரிட்டனுக்குப் போய் ஆங்கிலத்தில் சங்கமமாவதை சிலர் விரும்புகிறார்கள். அவ்வாறு போனவர்களும் உண்டு. அதற்கு ஆங்கில மோகமே காரணம். ஆங்கிலம் நமது மொழியல்ல; அது இன்னொரு இனத்தின் மொழி; அதைக் கற்கலாம். அது நமது முகமாக, முகவரியாக இருக்காது. ஆகவே, தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமது முகவரியையும், முகத்தையும், அடையாளத்தையும் காப்பாற்ற வேண்டுமானால் தமிழைக் கற்க வேண்டும் - தமிழை நேசிக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.