FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உலகப் புலம்பெயர் மொழி

மொழி என்பது வெறும் சொற்களின் தொகுப்பு அல்ல. அது ஓர் இனத்தின் நினைவகம்; தலைமுறைகளைக் கடந்து செல்லும் உணர்வின் பாலம்.

16 செப்டம்பர் 2026, 6:11 am IST
பகிர்:

மொழி என்பது வெறும் சொற்களின் தொகுப்பு அல்ல. அது ஓர் இனத்தின் நினைவகம்; தலைமுறைகளைக் கடந்து செல்லும் உணர்வின் பாலம்; ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு, துயரம், மகிழ்ச்சி, நம்பிக்கை, கனவு, எதிர்ப்பு, அன்பு ஆகிய அனைத்தையும் தன்னுள் சுமந்து செல்லும் உயிர்ப்பொருள்.

குறிப்பாக தமிழ் மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் செம்மொழி என்பதைக் காட்டிலும், பல தலைமுறைகளின் வாழ்க்கையை ஒன்றோடொன்று இணைத்துக் கொண்டிருக்கும் வாழ்வியல் மொழி என்பதே அதன் மிகப் பெரிய சிறப்பு.

ஆனால், இன்று தமிழ் மொழி ஒரு புதிய வரலாற்றுக் கட்டத்தை எதிர்கொள்கிறது. தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர். போர், பொருளாதாரத் தேவை, கல்வி, தொழில், அரசியல் சூழல், குடும்ப இணைவு, புதிய வாழ்க்கை வாய்ப்புகள் எனப் பல காரணங்களால் ஏற்பட்ட புலம்பெயர்வு, தமிழ்ச் சமூகத்தின் புவியியல் எல்லைகளை முற்றிலும் மாற்றிவிட்டது.

Advertisement

Advertisement

ஒருகாலத்தில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புடன் நெருக்கமாக இணைந்திருந்த தமிழ் மொழி இன்று பல மொழிகள், பல பண்பாடுகள், பல அரசியல் அமைப்புகள், பல்வேறு சமூக அனுபவங்கள் ஆகியவற்றுடன் உரையாட வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. இந்த மாற்றத்தின் மையத்தில் நிற்பவர்கள் புலம்பெயர் தலைமுறையினர்.

அவர்களில் முதல் தலைமுறை தாயகத்தை நினைவாகக் கொண்டிருக்கிறது. இரண்டாம் தலைமுறை தாயகம் குறித்து பெற்றோர்களிடம் இருந்து அறிந்து கொள்கிறது. மூன்றாம் தலைமுறை அந்தத் தாயகத்தின் வரலாறு, குடும்பப் புகைப்படங்கள், விழாக்கள், உணவு, இசை, கோயில், இணையம், சில சொற்கள் ஆகியவற்றின் வழியாக கற்பனை செய்கிறது. நான்காம் தலைமுறைக்கு 'தமிழ்' என்பது பிறப்பால் கிடைத்த அடையாளமாக இருக்கலாம்; ஆனால், மொழிப் பயன்பாட்டால் உருவான வாழ்வனுபவமாக இருக்காமல் போகலாம்.

இதுவே இன்றைய மிகப் பெரிய கேள்வியை உருவாக்குகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் அடுத்த தலைமுறைகளிடம் தமிழ் எவ்வாறு உயிருடன் இருக்கும்?

இந்தக் கேள்விக்கு 'தமிழைப் படிக்க வேண்டும்' என்ற ஒரு வரி பதில் போதாது. மொழி வாழ்வதற்கு பாடசாலை மட்டும் போதாது; வீடு வேண்டும். அது மட்டும் போதாது; நண்பர்கள் வேண்டும். அவர்கள் மட்டும் போதாது; சமூகப் பயன்பாடு வேண்டும். அதுவும் போதாது; தொழில்நுட்ப உலகில் மொழிக்கு இடம் வேண்டும்.

இவற்றைத் தாண்டி, அந்த மொழியில் ஓர் இளம் மனிதன் தன் கனவுகளையும் கோபத்தையும், காதலையும் சந்தேகங்களையும், நகைச்சுவையையும் அறிவியலையும், அரசியலையும் எதிர்காலத்தையும் வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு வேண்டும்.

தமிழர்களின் புலம்பெயர்வு இன்று தோன்றிய நிகழ்வு அல்ல. வர்த்தகம், கடல் பயணம், கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் மாற்றங்கள், காலனித்துவ ஆட்சி, தொழிலாளர் இடம்பெயர்வு, போர், பொருளாதார நெருக்கடி ஆகிய பல்வேறு வரலாற்றுக் காரணிகளால் தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

ஆனால், இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து உருவான பெருமளவிலான புலம்பெயர்வு தமிழ்ச் சமூகத்தின் அமைப்பையே மாற்றியது. குறிப்பாக ஆயுத மோதல்கள், அரசியல் நிலையற்ற தன்மை, பொருளாதாரத் தேவை மற்றும் பாதுகாப்பு தேடல் போன்ற காரணங்களால் உலகின் பல நாடுகளுக்கும் சென்ற தமிழர்கள், அங்கு புதிய சமூகங்களை உருவாக்கினர். அதேசமயம் கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல், வணிகம் போன்ற துறைகளில் வாய்ப்புகளைத் தேடி சென்ற தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இதன் விளைவாக இன்று தமிழ் ஒரு தாயக மொழி மட்டுமல்ல, அது ஓர் உலகப் புலம்பெயர் மொழி.

ஒரு மொழி புவியியல் எல்லையைத் தாண்டும்போது அதன் இயல்பும் மாறுகிறது. புதிய மொழிகளுடன் தொடர்பு ஏற்படுகிறது. புதிய சொற்கள் புகுகின்றன. புதிய உச்சரிப்புகள் உருவாகின்றன.

குடும்ப உறவுகள் மாறுகின்றன. குழந்தைகள் வேறு மொழியில் கல்வி கற்கின்றனர். நண்பர்களுடன் வேறு மொழியில் பேசுகின்றனர். வேலைக்குச் செல்லும் போது வேறு மொழியைப் பயன்படுத்துகின்றனர். தமிழ் வீட்டுக்குள் மட்டும் சுருங்கத் தொடங்கும் போது, அதன் சமூகப் பரப்பு குறையத் தொடங்குகிறது.

புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினருக்கு தமிழ் வாழ்க்கையின் இயல்பான மொழி. இரண்டாம் தலைமுறைக்கு தமிழ் குடும்பத்தின் மொழி. மூன்றாம் தலைமுறைக்கு தமிழ் குடும்பத்தின் சில நிகழ்வுகளின் மொழி.

இந்த மாற்றம் எல்லா குடும்பங்களிலும் ஒரே மாதிரியாக நிகழ்வதில்லை. சில குடும்பங்களில் தமிழ் தொடர்ந்து வலுவாகப் பேசப்படுகிறது. சில குடும்பங்களில் தமிழ் புரிந்துகொள்ளப்படுகிறது; ஆனால் பேசப்படுவதில்லை. சில குடும்பங்களில் தமிழ் விழாக்கள், சமய நிகழ்வுகள் அல்லது மூத்த தலைமுறையினருடனான தொடர்புக்குள் மட்டும் வாழ்கிறது. இன்னும் சில குடும்பங்களில் தமிழ் பெயர்கள், உணவு, இசை, நடனம் போன்ற பண்பாட்டு அடையாளங்களாகத் தங்கி, மொழிப் பயன்பாடு மிகக் குறைந்துவிடுகிறது.

இந்த வேறுபாடுகளை மொழிப்பற்று உள்ளவர்கள்,மொழிப்பற்று இல்லாதவர்கள்என்று எளிதாகப் பிரிப்பது தவறு.

ஒரு குழந்தை எந்த மொழியை 'தன் மொழி' என்று உணர்கிறது என்பதை அதன் பிறப்பிடம் மட்டும் தீர்மானிப்பதில்லை. அது எந்த மொழியில் முதலில் அன்பைப் பெறுகிறது, விளையாடுகிறது, கனவு காண்கிறது, எந்த மொழியில் தன் நண்பர்களுடன் சிரிக்கிறது, எந்த மொழியில் தன் பள்ளிக் கல்வியைப் பெறுகிறது என்பவையும் தீர்மானிக்கின்றன.

குழந்தையின் பெற்றோர் தமிழில் பேசலாம். ஆனால், அந்தக் குழந்தையின் அன்றாட உலகம் வேறு மொழியில் இயங்கினால், அதன் உணர்ச்சி மற்றும் அறிவுசார் வளர்ச்சியின் முக்கியப் பகுதி அந்த மொழியிலேயே அமையும். இதனால் வீட்டில் தமிழ் பேசுகிறோம்; ஆகவே, தமிழ் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை மட்டும் போதாது.

புலம்பெயர் சமூகங்களில் மொழித் திறன் குறித்துப் பேசும்போது ஒரு முக்கியமான குழப்பம் நிலவுகிறது. குழந்தை தமிழில் பேசவில்லை என்றால், தமிழ் தெரியாது என்று கூறுகிறோம். ஆனால், அந்தக் குழந்தை தமிழைப் புரிந்துகொள்கிறதா?

மொழித் திறன் என்பது பேசுகிறான்/ பேசவில்லை என்ற இரு முனை அளவுகோல் அல்ல. புரிதல், பேச்சு, வாசிப்பு, எழுத்து, உணர்ச்சி, பண்பாட்டு பயன்பாடு, அறிவுசார் பயன்பாடு என பல அடுக்குகள் உள்ளன. புலம்பெயர் தலைமுறைகளில் இந்தத் திறன்கள் சமமாக இருக்காது.

புலம்பெயர் இரண்டாம் தலைமுறை ஒரு தனித்துவமான மனநிலையை எதிர்கொள்கிறது. அவர்களின் பெற்றோர் ஒரு நாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்கள் வளர்ந்த நாடு இன்னொன்று. வீட்டில் ஒரு மொழி- பள்ளியில் இன்னொரு மொழி. இதேபோன்றே கலாசாரமும். இதனால், இரண்டாம் தலைமுறையின் அடையாளம் ஒரே பெட்டிக்குள் அடங்குவதில்லை.

அவர்கள் முழுமையான தாயகத் தமிழர்கள் அல்லர். அதே நேரத்தில், தமிழ் இல்லாத புதிய நாட்டின் மக்கள் என்றும் மட்டும் கூற முடியாது.

'நீ தமிழன்; எனவே, தமிழ் பேச வேண்டும்.'- இந்த வாக்கியம் பெற்றோரின் மனத்தில் அன்பிலிருந்து பிறந்ததாக இருக்கலாம். ஆனால், குழந்தையின் காதில் அது சில சமயம் கட்டளையாக ஒலிக்கலாம். மொழி மீது அன்பை உருவாக்குவதற்கு குற்ற உணர்வு நீண்டகால அடிப்படையாக இருக்க முடியாது.

தமிழ் பேசவில்லை என்றால் நீ தமிழன் இல்லை. இத்தகைய குற்றம்சாட்டும் சில குழந்தைகளை தமிழுக்கு நெருக்கமாக்குவதற்குப் பதிலாக, அதிலிருந்து விலகச் செய்யலாம். எப்படி தமிழ் பேசச் செய்வது? என்பதல்ல, தமிழில் பேசுவதற்கு குழந்தைக்கு ஏன் விருப்பம் ஏற்பட வேண்டும் என்பதே.

மூன்றாம் தலைமுறையினரின் நிலை இன்னும் வேறுபட்டது. அவர்களுக்கு தாயகம் நேரடி நினைவாக இருக்காது. அது தாத்தாவின் கதையாக இருக்கலாம். பாட்டியின் சமையலாக இருக்கலாம். ஒரு பழைய புகைப்படமாக இருக்கலாம். இதனால், அவர்களுடைய தமிழ் அடையாளம் பெரும்பாலும் நினைவுகளின் வழியாகக் கட்டமைக்கப்படுகிறது.

இங்கே ஒரு மிக முக்கியமான உண்மை உள்ளது. மொழியை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல நினைவுகள் மட்டும் போதாது. நினைவுகளுக்கு மொழி தேவை. பாட்டியின் வாழ்க்கைக் கதை தமிழில் சொல்லப்படவில்லை என்றால், அடுத்த தலைமுறைக்கு அந்த வரலாறு சுருங்கிவிடும். மொழி இழப்பு என்பது அகராதியில் இருந்து சில சொற்கள் மறைவது மட்டுமல்ல; ஒரு தலைமுறையின் அனுபவத்தை அடுத்த தலைமுறை நேரடியாகக் கேட்கும் திறன் குறைவதும்கூட மொழி இழப்பே.

பல குடும்பங்களில் மொழி இழப்பு ஒரு நாளில் நடக்காது. அது மிகவும் அமைதியாக நடக்கும். முதலில் குழந்தை தமிழில் பதில் சொல்லாமல் ஆங்கிலத்தில் பதில் சொல்லும். பெற்றோர் அதைப் பொருட்படுத்தாமல் விடுவார்கள். பின்னர், குழந்தை தமிழில் கேள்வி கேட்பதை நிறுத்தும். அடுத்து, தமிழ்ப் புத்தகங்களை வாசிக்காது.

பின்னர், தமிழ் உறவினர்களுடன் நீண்ட உரையாடலைத் தவிர்க்கும். அதன் பிறகு தாத்தா-பாட்டியுடன் பேசும்போது பெற்றோரை மொழிபெயர்ப்பாளராகப் பயன்படுத்தத் தொடங்கும். ஒரு கட்டத்தில் தமிழ் புரியும்; ஆனால் பேச முடியாது. மற்றொரு கட்டத்தில் சில குடும்பச் சொற்கள் மட்டும் இருக்கும். அதற்குப் பிறகு மொழி ஓர் அடையாளச் சின்னமாக மட்டுமே இருக்கும். அதனால்தான் மொழி இழப்பு என்பது மிகவும் சிக்கலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments