இளைய மரபுக் காவலர்கள்! வரலாற்றுச் சின்னங்களையும் மரபுகளையும் காப்பதில் பள்ளி மாணவர்கள் பங்கு!
தொல்லியல் பொருள்கள் மற்றும் நினைவுச் சின்னங்களின் வரலாற்றை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் பற்றி...

கூட்டு நினைவாகப் பாரம்பரியம்
பாரம்பரியம் என்பது ஒரு சமூகத்தின் கூட்டு நினைவு. அது கல்லிலும், மண்ணிலும், நீரிலும், மொழியிலும், கைவினையிலும், பழக்கவழக்கங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பாரம்பரியம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை தொடர்ச்சியாகவும் செழுமையாகவும் விளங்குகிறது.
அத்திரம்பாக்கத்தில் கிடைத்த வரலாற்றுக்கு முற்பட்ட கற்கருவிகள்; ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில் கிடைத்த பெருங்கற்காலப் புதைவுகள், இரும்புத் தொழில் மையங்கள் மற்றும் தொடக்க வரலாற்றுக் காலக் குடியிருப்புகள்; பல்லவ, பாண்டிய, சோழர் காலக் கோயில் கட்டடக் கலை; தமிழி மற்றும் பிற்காலத் தமிழ் கல்வெட்டுகள், சிற்பங்கள், நாணயங்கள், சுவடிகள் ஆகியவை இப்பகுதியின் அரசியல், பொருளாதார, சமய, பண்பாட்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கான முதன்மைச் சான்றுகளாக விளங்குகின்றன. கரகாட்டம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கும்மி, வெண்கலச் சிற்ப வார்ப்பு, நெசவு, மண்பாண்டம், மரச்சிற்பம், இசை, வாய்மொழி மரபுகள் ஆகியவை தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வரும் அறிவைத் தாங்கி நிற்கின்றன. அவற்றை ஆவணப்படுத்துவதும், அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதும் இன்றியமையாததாகும். நீர் மேலாண்மை அமைப்புகள் - பாசன ஏரிகள், கோயில் குளங்கள், கால்வாய்கள், கல்லணை எனப்படும் பெரிய அணைக்கட்டு, ஏரிகள், வேளாண் நிலப்பரப்புகள், பாரம்பரிய வீடுகள், சந்தை வீதிகள், துறைமுகங்கள், கோட்டைகள், வேளாண்மை, மருத்துவம், வானியல், கடல் பயணம், சுற்றுச்சூழல் குறித்த தொல்குடி அறிவு ஆகியவை இதில் அடங்கும். இவற்றின் வழியாக வரலாறு, நிலைத்த வளர்ச்சி, சமூக மேம்பாடு ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும்.
Advertisement
Advertisement
பாரம்பரியத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள்
நகரமயமாக்கம், ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, திட்டமிடப்படாத கட்டுமானம், மாசுபாடு, சிதைவு, முறையற்ற புதுப்பித்தல், போதிய பராமரிப்பின்மை, கல்வெட்டுகளைச் சிதைத்தல், சட்டவிரோத அகழாய்வு, தொல்பொருள் திருடுவது ஆகியவை பாரம்பரியத்திற்கான அச்சுறுத்தலின் முதன்மை காரணங்களாக உள்ளன. அதிகம் கவனம் பெறாத இடங்கள், அது தொடர்பான விழிப்புணர்வு இல்லாமை ஆகியவையும் பாரம்பரிய பாதுகாப்புக்கு பின்னடைவாக உள்ளன.
பாரம்பரிய சின்னங்கள் பரவலாகச் சிதறிக் கிடப்பதால், அரசு அமைப்புகள் மட்டுமே அதனைப் பாதுகாத்துவிட முடியாது. பாதுகாப்பு என்பது பள்ளிகள், சமூகங்கள், தன்னார்வ அமைப்புகள், இளைஞர்கள் ஆகியோரின் பகிரப்பட்ட பொறுப்பாக வேண்டும். முறையாக வழிகாட்டப்படும் மாணவர்கள் சிறந்த விழிப்புணர்வுத் தூதர்களாகச் செயல்பட முடியும்.
இளம் பாரம்பரியப் பாதுகாவலர்கள் என்ற கருத்தாக்கம்
தொல்லியல் பொருள்கள் மற்றும் தளங்களை மாணவர்கள் ஆழ்ந்து பார்வையிடல், ஆவணப்படுத்துதல், பொருள் விளக்கம் அளித்தல், தகவல் பரப்புதல் ஆகியவற்றின் வழியாகக் கற்கிறார்கள். அனுமதியற்ற அகழாய்விலோ, நேரடிப் பாதுகாப்புப் பணியிலோ ஈடுபடுவதில்லை. இதன் வழியாக அவர்கள் வரலாற்றைச் செயலற்ற முறையில் பெறுபவர்கள் என்ற நிலையிலிருந்து, பாரம்பரியத்தை மதித்துப் போற்றும் செயல்வழி கற்றோர் என்ற நிலைக்கு மாறுகிறார்கள். ஆசிரியர்கள், தொல்லியலாளர்கள், அருங்காட்சியக வல்லுநர்கள், வரலாற்றாசிரியர்கள், பாதுகாப்பு வல்லுநர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்கள் உள்ளூர் நினைவுச் சின்னங்களைப் பயிலலாம், மரபுகளை ஆவணப்படுத்தலாம். மேற்பார்வையுடன் கூடிய பாரம்பரிய நடைப்பயணங்களிலும், அருங்காட்சியக பயணங்களிலும் பங்கேற்கலாம். மேலும் கட்டடங்களின் பொதுவான நிலையைக் கவனித்து விளக்கக் காட்சிகள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், எளிய பதிவுகளைத் தயாரிக்கலாம் மற்றும் வீட்டிலும், தன் சுற்றத்திலும் விழிப்புணர்வைப் பரப்பலாம். மாணவர்கள் அகழாய்வாளர்களோ, பாதுகாப்பாளர்களோ, சேகரிப்பாளர்களோ அல்ல. அவர்கள் அகழாய்வு செய்யவோ, தொல்பொருள்களை எடுக்கவோ, கல்வெட்டுகளைச் சுத்தம் செய்து படி எடுக்கவோ, நினைவுச் சின்னங்களை மாற்றவோ, அழியக் கூடிய நிலையில் இருக்கக் கூடிய பொருள்களைக் கையாளவோ கூடாது. அனைத்துக் களப்பணிகளும் மேற்பார்வையுடன், சட்ட மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உள்பட்டு நடைபெற வேண்டும்.
பள்ளி மாணவர்களை ஏன் ஈடுபடுத்த வேண்டும்?
கீழடி (சிவகங்கை), பொற்பனைக் கோட்டை (புதுக்கோட்டை) சோழர் கட்டடக்கலை மற்றும் வெண்கலச் சிற்பங்கள் (தஞ்சாவூர்), கொடுமணலின் (ஈரோடு) மணிகள் மற்றும் இரும்புத் தொழில், மயிலாடும்பாறை, கீழ்நமண்டி, சிவகளை, அழகன்குளம் உள்ளிட்ட தொல்லியல் தளங்களைப் பற்றிக் கற்பது, வரலாற்றைத் தங்கள் சொந்த ஊர், நகரம், ஆறு ஆகியவற்றோடு இணைத்துப் புரிந்துகொள்ள வைக்கிறது. இதன் தொடர்ச்சியாக தொல்பொருள் வகைப்பாடு, தள வரைபடங்கள், வரலாற்று வரைபடங்கள், அடுக்கியல், காலக்கணிப்பு, சுற்றுச்சூழல் ஆய்வு, சான்று அடிப்படையிலான பொருள் விளக்கம் ஆகியவை அறிவியல் சிந்தனையை வளர்க்கின்றன.
தொல்பொருள் தளங்களின் சிதைவு, அவ்விடங்களில் குப்பை கொட்டுதல், ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் ஏற்படும் தீமையை உணர்ந்து, அதனைக் குடும்பத்தினருக்கும், தன் சுற்றத்தினருக்கும் எடுத்துரைக்கும் பொறுப்பு பள்ளி மாணவர்களுக்கு வளர்கிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு அனைத்து சமய, நாட்டுப்புற மற்றும் பழங்குடி மரபுகள் சமநிலையான பொருள் விளக்கத்தின் வழியாகக் கற்பிக்கப்பட வேண்டும். மாணவர்களைப் பாரம்பரிய பாதுகாப்பில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், விழிப்புணர்வு கொண்டவர்களாகவும் மாற்றுவதற்கு நீர் அமைப்புகள், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான கட்டடக்கலை, தொல்குடி அறிவு, நிலையான கைவினைகள், பாரம்பரியச் சுற்றுலா, ஊரக வாழ்வாதாரங்கள் ஆகியவற்றோடு பாரம்பரியக் கல்வியையும் இணைத்து கற்பிக்க வேண்டும்.
இந்தியாவிலிருந்து கற்றல்
2002-இல் தொடங்கப்பட்ட கலை மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை (INTACH - இன்டாக்) இன் மரபுக் கல்வி மற்றும் தகவல் தொடர்பு பிரிவு (Heritage Education and Communication Service) என்ற திட்டம், தற்போது 149 நகரங்களில் சுமார் 5,000 பள்ளிகளில் 4,50,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை உள்ளடக்கியுள்ளது. பாரம்பரிய நடைப்பயணங்கள், அருங்காட்சியகக் கல்வி, கைவினைப் பயிலரங்குகள், ஆவணப்படுத்துதல், திரைப்படங்கள், கண்காட்சிகள், ஆசிரியர் பயிற்சி ஆகியவை தனித் தேர்வுப் பாடமாக இல்லாமல் ஒருங்கிணைத்து நடத்தப்படுகின்றன.
இதேபோல் தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென்று தனியாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் சுமார் 25 - 30 மாணவர்கள் கொண்ட இளம் பாரம்பரியப் பாதுகாவலர் மன்றங்கள், பயிற்சி பெற்ற ஆசிரியர் தலைமையில் உள்ளூர் இடங்கள், அருங்காட்சியகங்கள், மரபுகளோடு இணைக்கப்பட்டு, உள்ளூர் வல்லுநர்களின் பங்கேற்புடன் இத்திட்டத்தை செயல்படுத்தலாம்.
ராஜஸ்தானிலுள்ள நீர்ப் பாரம்பரியம், படிக்கிணறுகள், நீர்த்தேக்கங்கள், நீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ஆகியவை வறட்சிக்குப் பண்டைய சமூகம் கண்ட தீர்வுகளைக் காட்டுகின்றன. தமிழ்நாட்டிலும் பாசன ஏரிகள், கோயில் குளங்கள், கால்வாய்கள், கல்லணை, ஏரி அமைப்பு ஆகியவற்றின் வரலாற்றையும், சமூகப் பராமரிப்பையும், அறிவியல் மற்றும் கூட்டுக் கல்வியாக மாணவர்களுக்குப் பயிற்றுவித்து இன்றைய நீர் பாதுகாப்பு மேலாண்மை திட்டத்தோடு இணைக்க வேண்டும்.
கர்நாடக மாநிலத்திலுள்ள ஹம்பியின் நினைவுச் சின்னங்கள், கோட்டைகள், கோயில்கள், நீர்த்தேக்கங்கள், சந்தைகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவை விஜயநகரப் பேரரசின் அரசியல், பொருளாதாரம், சமயம் மற்றும் நகரத் திட்டமிடல் தொடர்பான சிறப்புகளை ஒருங்கிணைத்து வெளிப்படுத்துகின்றன.
இதைப் போலவே தமிழ்நாட்டிலும் மதுரை, தஞ்சாவூர், மாமல்லபுரம், கங்கைகொண்ட சோழபுரம், திருவண்ணாமலை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைத் திறந்தவெளிக் கல்விக் கூடங்களாக மேம்படுத்த வேண்டும். அங்குள்ள கோயில்கள், கல்வெட்டுகள், நீர்நிலைகள், குடியிருப்புகள், வணிகப் பாதைகள் மற்றும் பண்பாட்டு மரபுகளை ஒருங்கிணைத்துக் கற்பிப்பதன் மூலம் மாணவர்களிடம் முழுமையான வரலாற்றுப் புரிதலையும், பாரம்பரியப் பாதுகாப்பு உணர்வையும் வளர்க்கலாம்.
மகாராஷ்டிரத்தில் வரலாறு வகுப்பறைக்குள் மட்டும் நின்றுவிடாமல், இராய்கட், சிவனேரி, பிரதாப்கட், சிங்கட் போன்ற கோட்டைகளுக்கு மாணவர்களை நேரடியாக அழைத்துச் சென்று கற்பிக்கப்படுகிறது. இந்த களப்பயணங்கள் மூலம் மாணவர்கள் நான்கு முக்கியப் பாடங்களைக் கற்கிறார்கள்: போர்க் கட்டடக்கலை (மதில், அகழி, மறைவான வாயில்கள் போன்றவற்றைப் பற்றிய விவரங்கள்), வரலாற்றுப் புவியியல் (ஆறுகள், வணிகப் பாதைகள் குறித்த தகவல்கள்), நீர் மேலாண்மை (கிணறுகள், குளங்கள் தொடர்பான செய்திகள்) மற்றும் குடியிருப்பு அமைப்பு (அரண்மனை, கோயில்கள், சந்தை, தானியக் களஞ்சியங்கள்).
இதே முறையைத் தமிழ்நாட்டுக் கோட்டைகளிலும் பயன்படுத்தலாம். செஞ்சி, வேலூர், திண்டுக்கல், சங்ககிரி கோட்டைகள் ஆகியவற்றுக்கு பாரம்பரிய பயணம் மேற்கொள்வதன் வழியாக இடைக்கால அரசியல், பாதுகாப்பு நுணுக்கங்கள், நீர் மேலாண்மை, வணிகப் பாதைப் பாதுகாப்பு ஆகியவற்றை மாணவர்கள் நேரடியாகக் கற்றுக்கொள்ளலாம். இந்தப் பயணங்கள் வெறும் சுற்றுலாவாக இல்லாமல், ஆசிரியர் /வல்லுநர் மேற்பார்வையில் முறையான கற்றல் செயல்பாடுகளாக அமைய வேண்டும். மாணவர்கள் வரைபடம் வரைதல், ஒளிப்படம் எடுத்தல், நீர்த்தொட்டிகளைக் கணக்கிடுதல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும். அதேசமயம் கோட்டைகளைச் சேதப்படுத்தாமல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இதனால் ஒவ்வொரு கோட்டையும் திறந்தவெளி வகுப்பறையாக மாறும்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே உள்ள முயற்சிகள்
திருப்புல்லாணி (ராமநாதபுரம்): சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 2010 முதல் பாரம்பரிய மன்றம் செயல்படுகிறது. இங்கு கல்வெட்டுகள், கட்டடக்கலை, நாணயவியல், தொல்லியல் தொடர்பாக மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
கங்கலேரியில் (கிருஷ்ணகிரி) வரலாற்றுக்கு முற்பட்ட கற்கருவிகளை கற்றுத்தரும் கல்விக்களமாக தொல்லியல் மன்றம் செயல்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் முத்தனேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முன்னெடுத்த தொல்லியல் கள ஆய்வு (2026) முக்கியமானதாகும். இதன் தொடர்ச்சியாக, மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலும், உள்ளூரில் உள்ள புதுக்கண்மாய்ப் பகுதியிலும் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நுண்கற்கால கருவிகளான செர்ட் (Chert), குவார்ட்ஸ் (Quartz), ஜாஸ்பர் (Jasper) போன்ற கற்களால் செய்யப்பட்டவை கண்டெடுக்கப்பட்டன. கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், இரும்பு கருவிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட அந்தப் பொருள்களை அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. இராஜகுரு அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, கண்டெடுக்கப்பட்ட பொருள்களை ஆய்வு செய்தார். இவை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு, ஒரு பொது வரைமுறையின் கீழ் இணைக்கப்பட வேண்டும்.
பன்னாட்டு மாதிரிகளிலிருந்து கற்றல்
1994-இல் தொடங்கப்பட்ட யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் கல்வித் திட்டம் பாரம்பரியம், அதற்கான அச்சுறுத்தல்கள், அதனைப் பாதுகாப்பதில் இளைஞர்களின் பங்கு ஆகியவற்றைக் கற்பிக்கிறது. இதன் உலகப் பாரம்பரியம் இளம் கைகளில் (World Heritage in Young Hands) என்ற கையேடு (1998) இடைநிலை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பல்துறை கற்றல் பொருள்களை வழங்குகிறது.
தமிழ்நாட்டிலும் தொல்லியல், நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், கட்டடக் கலை, வரைபடவியல், நீர்ப் பாரம்பரியம், பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய, படங்கள், வரைபடங்கள், பயிற்சிகள், உள்ளூர் எடுத்துக்காட்டுகள், இருமொழி (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மாநிலப் பாரம்பரியக் கல்விக் கையேடு உருவாக்கப்படலாம். இங்கிலாந்தின் 'வரலாற்று இங்கிலாந்து' என்ற அமைப்பு முன்னெடுத்துள்ள பாரம்பரியப் பள்ளிகள் திட்டத்தில் ஆசிரியர்கள் ஏற்கெனவே உள்ள பாடங்களில் உள்ளூர் வரலாற்று வளம் தொடர்பான திட்டங்களை இணைத்து பயன்படுத்துகிறார்கள். பாரம்பரிய அமைப்புகள், சமூகங்கள், பயிற்சி பெற்ற ஒருங்கிணைப்பாளர்களின் உதவியுடன், ஆசிரியர்களுக்குப் பணிச்சுமை கூடாமல் இது நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலும் பாடத்திட்டத்துடன் மாவட்டப் பாரம்பரியக் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் சிவகங்கையைக் கீழடியுடனும், தஞ்சாவூரைச் சோழர் கட்டடக்கலை மற்றும் கல்வெட்டுகளுடனும், ராமநாதபுரத்தைக் கடல்சார் பாரம்பரியத்துடனும், கிருஷ்ணகிரியை வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் பெருங்கற்கால எச்சங்களுடனும், திருநெல்வேலியைப் பொருநை (தாமிரபரணி) நிலப்பரப்புடனும் இணைக்கலாம்.
ஜப்பானில் நினைவுச் சின்னங்கள் தனியாக பாதுகாக்கப்படுவதில்லை. கூடுதலாக கைவினைகள் (மண்பாண்டம் மற்றும் நெசவு செய்தல், காகிதம் தயாரித்தல், மர வேலைப்பாடுகள்), நிகழ்வுகள் (திருவிழாக்கள், நடனம்), பழக்க வழக்கங்கள் ( உணவு உடை வணிக நடைமுறை), நிலப்பரப்புகள் (மலை, ஆறு, கடல்) ஆகியவை ஒருங்கிணைந்த மண்டலக் கதையாடல்களாகப் பின்னப்படுகின்றன. இவை அனைத்தும் தனித்தனியாக பிரிந்து இருந்தால் அது பட்டியல் என்ற பிரிவில் வரும்.
எடுத்துக்காட்டாக ஜப்பானின் ஃபுகுய் மாகாணத்தில் கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வகாசா பகுதியில் இருந்து கியோட்டோ என்னும் ஜப்பானின் புகழ்பெற்ற வரலாற்று மற்றும் சிறப்புமிக்க இடத்திற்கு மீனை விற்பனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உள்ள மலைச் சாலையில் பயணிப்பதன் வாயிலாக உள்நாட்டு வணிகம், செல்லும் வழியில் நடைபெறும் திருவிழாக்கள், சந்தைகள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வதோடு, நீண்ட பயணத்தில் மீனைப் பாதுகாக்கும் மற்றும் உணவு சமைக்கும் முறை, அந்தச் சாலையில் உள்ள பழைய கோயில்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் கடற்கரைப் பகுதியில் பிடிக்கும் மீன் எப்படி பல்வேறு நிலைகளைக் கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு வந்து சேர்ந்தது என்பதை பதிவு செய்வதுதான் கதையாடல்களாக பதிவு செய்யப்படுகின்றன. மாறாக தனிப்பட்ட கோயில்கள் மட்டும் பதிவு செய்யப்படுவதில்லை.
அதைப் போல தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்துவமான தொல்லியல், வரலாறு, கலை, கட்டடக்கலை, நாட்டுப்புற மரபுகள் மற்றும் பண்பாட்டுச் சிறப்புகள் உள்ளன. இவற்றை மாணவர்களின் பங்கேற்புடன் ஆவணப்படுத்தி, மாவட்ட மரபுக் கதையாடல்களாக (District Heritage Narratives) உருவாக்கலாம்.
இதற்காக மாணவர்கள் தங்கள் ஊரிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள், பழங்காலக் கோயில்கள், கல்வெட்டுகள், நீர்நிலைகள், பாரம்பரியத் தொழில்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைகள் குறித்த தகவல்களைச் சேகரிக்கலாம். அவற்றைப் புகைப்படங்கள், வரைபடங்கள், சிறு கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகியவற்றுடன் தொகுத்து மாவட்ட அளவிலான படங்களுடன் கூடிய நூல்கள், சிற்றேடுகள் வெளியிடுதல் மற்றும் கண்காட்சிகளாக பதிவு செய்யலாம். மேலும், காணொலிகள், ஒலிப்பதிவுகள், மின்னூல்கள், இணைய வரைபடங்கள் மற்றும் குறும்படங்கள் மூலம் இத்தகவல்களை எண்ம வடிவில் (Digital Storytelling) பொதுமக்களிடம் கொண்டு செல்லலாம்.
எடுத்துக்காட்டாக, மதுரை கோயில் வரலாறு, கல்வெட்டுகள், நகர வளர்ச்சி, தஞ்சாவூர் சோழர் கட்டடக்கலை, ஓவியங்கள், நீர்ப்பாசன மரபு, சிவகங்கை கீழடி தொல்லியல் தளம் மற்றும் பழந்தமிழர் வாழ்வியல் குறித்த தகவல்கள், தூத்துக்குடி ஆதிச்சநல்லூர், கொற்கை மற்றும் கடல்சார் மரபு தொடர்பான பதிவுகள், விருதுநகர் மாவட்டத்திலுள்ள முத்தனேரி உள்ளிட்ட உள்ளூர் தொல்லியல் சான்றுகள் குறித்த தகவல்களை மேற்கண்ட வகையில் செயல்படுத்தலாம். இத்தகைய முயற்சிகள் மாணவர்களின் ஆய்வுத் திறன், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதுடன், உள்ளூர் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் உதவும்.
ஆஸ்திரேலியாவில் இளைய தலைமுறையைத் தொல்குடி மக்களின் பண்பாடு, வாய்மொழிக் கதைகள், பாரம்பரிய நிலப்பரப்பு, சமூகத்தில் மூத்தவர்களின் அறிவுச் சிந்தனை ஆகியவற்றோடு இணைக்கிறார்கள். மூத்தவர்களே அறிவின் காப்பாளர்கள் என்று மதிக்கப்படுகிறார்கள். பாரம்பரியம் என்பது வாழும் மரபுகள், சமூக நினைவு, தொல்குடி அறிவு ஆகியவற்றையும் உள்ளடக்கியது என்பது இதன் வாயிலாக புலனாகிறது. தமிழ்நாட்டில் ஒப்புதல் மற்றும் உரிய குறிப்புடன், மாணவர்கள் மூத்தவர்கள், கைவினைஞர்கள், விவசாயிகள், நாட்டுப்புறக் கலைஞர்களிடம் பாசனம், மண்பாண்டம், நெசவு, நாட்டுப்புற இசைக்கருவிகள், திருவிழாக்கள், கட்டடக்கலை, சுற்றுச்சூழல் அறிவு குறித்து நேர்காணல் செய்து, விரைவாக மறைந்து வரும் அறிவைப் பாதுகாக்கும் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
பிரான்ஸில் வகுப்பறைகளாக அருங்காட்சியகங்களும், நினைவுச்சின்னங்களும் செயல்படுகின்றன. புத்தகத்தில் படிப்பதற்குப் பதிலாக, மாணவர்கள் அந்த இடத்துக்கே சென்று கட்டடக்கலை, சிற்பம், கலை, வரலாறு, பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை நேரடியாகப் பார்த்து, தொட்டுணர்ந்து (அனுமதிக்கப்பட்ட அளவில்) கற்கிறார்கள். அதாவது அந்த இடமே பாடப் புத்தகமாகிறது. பாரம்பரிய தளங்கள் விரிவாக்கப்பட்ட கற்றல் சூழல்களாகச் செயல்படுகின்றன.
தமிழ்நாட்டிலும் அரசு மற்றும் தள அருங்காட்சியகங்களுடன் பள்ளி - அருங்காட்சியகக் கூட்டாண்மை, வழிகாட்டப்பட்ட பொருள் விளக்கம், மாதிரிப் பொருள்களைக் கொண்டு கற்றல், பொருளைக் கவனித்தல், பணித்தாள்கள், செயல்முறை விளக்கங்கள் ஆகியவற்றை கொண்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
முன்மொழியப்படும் தமிழ்நாடு இளம் பாரம்பரியப் பாதுகாவலர் இயக்கம் (TN-YHGM)
இது ஒருங்கிணைந்த மாநிலக் கொள்கை வரைமுறையாக, பள்ளிக்கல்வி, தொல்லியல், அருங்காட்சியகங்கள், சுற்றுலா, உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பின் வழியாகச் செயல்பட வேண்டும். இதன் நோக்கம் உள்ளூர் வளங்கள் குறித்த விழிப்புணர்வு, அவற்றை அடையாளம் காணல், ஆவணப்படுத்துதல், பள்ளி மன்றங்கள், கள மற்றும் அருங்காட்சியகத் திட்டங்கள், சமூக விழிப்புணர்வு, எண்மப் பாரம்பரிய எழுத்தறிவு, வல்லுநர்கள் மற்றும் சமூகங்களுடன் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல். மேலும் பல்வேறு வகுப்புகளிலிருந்து சுமார் 25-30 மாணவர்கள், பயிற்சி பெற்ற ஆசிரியர் தலைமையில், மாணவிகள், ஊரக மற்றும் நலிவடைந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து இணைக்கப்பட வேண்டும். இதன் வாயிலாக பாரம்பரியத்தை அடையாளம் காணுதல், மேற்பார்வையுடன் கூடிய நடைப்பயணங்கள், அருங்காட்சியகத்தை பார்வையிடல், ஒளிப்படம் எடுத்தல், கட்டுரைகள், கைவினைச் செயல்முறை விளக்கங்கள், மூத்தோரிடம் நேர்காணல்கள், எண்ம ஆவணப்படுத்துதல், விழிப்புணர்வுப் பரப்புரைகள் மேற்கொள்ளப்படலாம். மேலும், பாரம்பரிய மன்றம் வெறும் பெயர்ப்பலகையாகவோ, ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்ச்சியாகவோ இல்லாமல் பள்ளியின் வழக்கமான கால அட்டவணையிலேயே அதன் செயல்பாடுகள் இடம்பெற்று, மாணவர்கள் பயிற்சி பெறும் இடமாக இருக்க வேண்டும். தொல்லியல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பண்பாட்டு அமைப்புகளின் வழிகாட்டுதலுடனும் செயல்பட வேண்டும். பாரம்பரியம் தொடர்பான தகவல்கள் ஏற்கெனவே உள்ள பாடங்களில் இணைக்கப்பட வேண்டும், அவை தனித் தேர்வுப் பாடமாகச் சேர்க்கப்படக் கூடாது.
ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள், திருவிழாக்கள், நாட்டுப்புறக் கலைகள், சமூகக் கதைகள் தொடர்பான தகவல்களையும், நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு பாரம்பரிய நடைப்பயணங்கள், அருங்காட்சியக பார்வையிடல், உள்ளூர் வரலாற்றுப் பயிற்சிகள் வழங்குவது, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு எளிய கல்வெட்டு ஆய்வுகள், மாதிரிகளைக் கொண்டு மண்பாண்ட வகைப்பாடு, கட்டடக் கலையை பார்வையிடுவது, வரைபடங்கள் வரைவது, மேற்பார்வையுடன் கூடிய ஆவணப்படுத்துதலிலும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறு ஆய்வுத் திட்டங்கள், வாய்மொழி வரலாறுகள், எண்ம விளக்கக் காட்சிகள் உள்ளிட்டவற்றிலும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
ஒரு பள்ளி, ஒரு பாரம்பரிய வளம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளியும் அருகில் உள்ள ஒரு வளத்தை, அதாவது கோயில், கட்டடம், குளம், கல்வெட்டு, நடுகல், கோட்டை, கைவினை மையம், நாட்டுப்புற மரபு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை சேகரித்து அதன் பெயர், அமைவிடம், வரலாறு, ஒளிப்படங்கள், சிறப்பியல்புகள், நிலை, அச்சுறுத்தல்கள் அடங்கிய பதிவைத் தயாரிக்க வேண்டும்.
வல்லுநர்கள் மதிப்பாய்வு செய்த பின்னரே அது பயன்படுத்தப்பட வேண்டும். இது பரவலாக்கப்பட்ட சமூகப் பாரம்பரியப் பட்டியலை உருவாக்கும். ஒரு மாவட்டம், ஒரு பாரம்பரியக் கல்வித் திட்டம் என்ற திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பண்டைய குடியிருப்புகள், நீர் மேலாண்மைகள், கைவினைத் தொழில் தொடர்பான தகவல்கள், கட்டடக்கலை, கடல்சார் பாரம்பரியம் தொடர்பான தகவல்கள், பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் குறித்த விவரங்கள், வரலாற்று நிலப்பரப்புகள், பழக்க வழக்கங்கள், உள்ளூர் மரபுகள், கோட்டை கொத்தளங்கள் தொடர்பான பதிவுகள், பல்வேறு சமயங்கள் தொடர்பான கலை மற்றும் கட்டடக்கலை பாரம்பரியம் சார்ந்த தகவல்களை ஒருங்கிணைக்க முடியும்.
வளங்கள் மற்றும் திறன் மேம்பாடு
முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான மானியமாக ஒரு பள்ளிக்கு ஆண்டுக்கு ரூ. 25,000 வழங்கலாம். இதில் மன்றச் செயல்பாடுகளுக்கு ரூ. 5,000, ஆவணப்படுத்துதலுக்கு ரூ. 5,000, கற்றல் பொருள்களுக்கு ரூ. 3,000, களப்பயணங்களுக்கு ரூ. 7,000, கண்காட்சிகளுக்கு ரூ. 5,000 என்ன பிரித்து செலவு செய்யலாம். இவை திட்டமிடல் மதிப்பீடுகள் மட்டுமே. முன்னோடித் திட்டம் மற்றும் மாவட்டக் கலந்தாய்வு வழியாக இவை செம்மைப்படுத்தப்பட வேண்டும்.
இந்தியாவைப் பொருத்தவரை 'இன்டாக்' (INTACH) அமைப்பு ஆசிரியர்களுக்கு ஆயத்தப் பாரம்பரியக் கல்விக் கருவிப் பெட்டி (Heritage Education Toolkit) வழங்குகிறது. இது ஆசிரியர்கள் தனியாகப் பாடத்திட்டம், படங்கள், பயிற்சிகள் போன்றவற்றைத் தேடிச் சேகரிக்க வேண்டிய சுமையைக் குறைகிறது. மாறாக ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கற்பித்தல் வளங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாரம்பரியக் கல்வியை எளிதாக வழங்குகிறது. இந்த அமைப்பின் கீழ் உள்ள பள்ளிகளில் உருவாக்கப்படும் பாரம்பரிய மன்றங்களில் உறுப்பினர்களாக சேரும் மாணவர்களுக்கு பாரம்பரிய அடையாள அட்டை (Heritage Club Badge) மற்றும் பாஸ்போர்ட் (Heritage Club Passport) ஆகியவை கிடைக்கின்றன.
இதன் சிறப்பு யாதெனில் பாரம்பரியக் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு பள்ளியும் தனியாக நிதியை செலவிட வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. அதைப்போல இங்கிலாந்திலும் பள்ளி மாணவர் குழுக்களுடன் இணைந்து செயலாற்றும் பாரம்பரிய இடைநிலையாளர் பணிக்காக 2.7 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 32.72 கோடி) தொடக்க நிலையில் வழங்கப்படுகிறது. அதேபோல பிரான்சிலும் ஒரு ஆசிரியர் தன் வகுப்பு பாரம்பரிய பண்பாட்டு கல்விச் செயல்பாடுகளுக்காக ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒரு மாணவருக்கு 20 முதல் 30 பவுண்டு வரை (ரூ. 2400 முதல் 3,600 வரை) பெறலாம். இத்தொகை பள்ளியில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்த நிதியை ஆசிரியர் பெற வேண்டும் என்றால் பிரான்ஸ் நாட்டின் பண்பாட்டுத் துறை அமைச்சகத்தின் வாயிலாக செயல்படும் 'அடேஜ்' (Adage) என்ற செயலியில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும். அதைப் போல தமிழ்நாட்டிலும் அரசு மற்றும் ஊரகப் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
மாவட்ட வள மையங்கள், அருங்காட்சியகங்கள், கல்லூரிகள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் (DIET), தொல்லியல் அலுவலகங்கள் ஆகியவற்றில் ஏற்கெனவே உள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி அமைக்கப்பட வேண்டும். இந்த மையங்கள் கற்றல் பொருள்களை வழங்குதல், ஆசிரியர் பயிற்சி நடத்துதல், பள்ளிகளை வல்லுநர்களுடன் இணைத்தல், பாரம்பரிய பயணங்களுக்கு உதவுதல், ஆவணப்படுத்துதலுக்கு ஆதரவு அளித்தல் ஆகிய பணிகளைச் செய்ய வேண்டும்.
வரலாறு, சமூக அறிவியல் மற்றும் ஆர்வமுள்ள பிற ஆசிரியர்களுக்குத் தொல்லியல், தமிழ்நாட்டுப் பாரம்பரியம், பாதுகாப்பு அடிப்படைகள், பொருள் விளக்கம், அருங்காட்சியகம் சார்ந்த கற்றல், எண்ம ஆவணப்படுத்துதல், வாய்மொழி வரலாற்று மரபுகள், திட்ட மேற்பார்வை ஆகியவற்றில் தொடர் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இதற்குத் தொல்லியல் துறை, பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
கூட்டாண்மை, தொழில்நுட்பம், சமத்துவம்
பாரம்பரியக் கல்வி என்பது தனித்த நிறுவனச் செயல்பாடு அல்ல. அது அறிவு, அனுபவம், வளம் ஆகியவை இணையும் கூட்டு அறிவுச் சூழலாகும். பல்கலைக்கழகங்கள் கோட்பாட்டு வல்லமையையும், தொல்லியல் துறைகள் தொழில்நுட்ப வழிகாட்டுதலையும், கல்லூரிகள் மாணவர்களுக்கு தன்னார்வத்தையும் வழங்குகின்றன. பள்ளிகள் உள்ளூர் மரபுச் சொத்துகளைக் கண்டறிகின்றன, சமூகங்கள் வாய்மொழி வரலாற்றையும், வாழும் அறிவையும் வழங்குகின்றன, அருங்காட்சியகங்களும், அதிகாரிகளும் அணுகலையும், நிறுவன ஆதரவையும் தருகின்றனர்.
எடுத்துக்காட்டாக சிவகங்கைப் பள்ளி கல்வெட்டை அடையாளம் காண, கல்லூரி மாணவர்கள் அதைப் படிக்க, கற்பிக்க, ஊரிலுள்ள மூத்தவர்கள் அதன் பின்னணிக் கதையை வழங்கும் முறை இந்தக் கூட்டாண்மையின் செயல் வடிவமாகும். இந்தக் கற்றலை நிலைநிறுத்த, அரசு மாணவர் பாரம்பரிய எண்மத் தளத்தை உருவாக்க வேண்டும். மாவட்ட வரைபடங்கள், மாணவர் கதையாடல்கள், ஒளிப்படங்கள், காணொளிகள், வாய்மொழி வரலாறுகள், கைவினை ஆவணங்கள், மெய்நிகர் அருங்காட்சியக வளங்கள், தமிழ்-ஆங்கிலக் கற்றல் பொருட்கள் ஆகியவை இதில் இடம்பெற வேண்டும். மேம்பட்ட பணிகளில் ஜிஐஎஸ் (GIS) வரைபடங்களும், மொழிபெயர்ப்பு, உள்ளடக்கக் கண்டறிதல், பட்டியலாக்கம் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவும் பயன்படுத்தப்படலாம்.
ஆயினும், அனைத்துத் தகவல்களும் வல்லுநர் சரிபார்ப்புக்கு உள்பட வேண்டும். மாணவர் தனியுரிமை, அறிவுசார் சொத்துரிமை, பாதிப்புக்குள்ளாகும் இடங்களின் துல்லிய அமைவிடம் ஆகியவை கண்டிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக ஈரோடு மாணவர்கள் கொடுமணல் பற்றிய காணொலியைச் சரிபார்ப்புக்குப் பின் ஏற்றலாம்; ஆனால் கொள்ளை போகும் அபாயமுள்ள தளத்தின் துல்லிய இடம் வெளியிடப்படக் கூடாது.
சமத்துவமே இத்திட்டத்தின் அடிப்படை. அரசு மற்றும் ஊரகப் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தது இரண்டு பாரம்பரிய பயணம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். போக்குவரத்து, பயிற்சி பெற்ற வழிகாட்டிகள், பணித்தாள்கள், அருங்காட்சியக அமர்வுகள், விளக்கப் பலகைகள், குடிநீர், அடிப்படை வசதிகள், மேற்பார்வை ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். இந்த பயணம் சுற்றுலா அல்ல; வகுப்பறையின் நீட்சியாக அமைய வேண்டும். கீழடி அருங்காட்சியக வருகையில் மாணவர் வழிகாட்டியின் விளக்கத்தைக் கேட்டு, பணித்தாள் வழி கற்றலைப் பதிவு செய்வது இதற்கு எடுத்துக்காட்டு. கற்றல் வெளிப்பாட்டுக்காக, கண்காட்சிகள், மாதிரி உருவாக்கம், கைவினைச் செயல்முறை விளக்கங்கள், ஒளிப்படப் போட்டிகள், ஆவணப் படங்கள், வினாடி வினாக்கள், உள்ளூர் வரலாற்று வெளியீடுகள், ஆய்வு விளக்கக் காட்சிகள் அடங்கிய ஆண்டு மாநில விழா நடத்தப்பட வேண்டும். மன்றங்கள், ஆவணப்படுத்துதல், எண்மத் திட்டங்கள், சமூகப் பங்கேற்பு, ஆசிரியர்கள், ஊரகப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்படலாம். இவை துல்லியம், நெறிமுறை, படைப்பாற்றல், கல்வி மதிப்பு, சமூக ஈடுபாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுடன் கல்வி நோக்கில் பள்ளிகள் இணைக்கப்படலாம். மாணவர்கள் குப்பை கொட்டுதல், சிதைவு, ஆக்கிரமிப்பு, சேதம் ஆகியவற்றைக் கவனித்து தங்களுடைய ஆசிரியர்களுக்கு அறிவிப்பார்கள். இது கண்காணிப்புக் கல்வியே தவிர, சட்ட அல்லது பாதுகாப்புப் பொறுப்பு அல்ல. செஞ்சிக் கோட்டை அருகிலுள்ள பள்ளி மாணவர்கள் கிறுக்கல்களையோ, குப்பையையோ ஆசிரியர் வழியாக அதிகாரிகளுக்குத் தெரிவிப்பார்கள்; அவர்களே சுத்தம் செய்யவோ பழுதுபார்க்கவோ மாட்டார்கள். பொது - தனியார் கூட்டாண்மையில் பல்கலைக்கழகங்கள், இன்டாக் (INTACH), அருங்காட்சியகங்கள், பண்பாட்டு அமைப்புகள், சிஎஸ்ஆர் (CSR) முயற்சிகள், அறக்கட்டளைகள், முன்னாள் மாணவர்கள், சமூகக் குழுக்கள் ஆகியவை நிதி, பொருள்கள், போக்குவரத்து, எண்ம உள்கட்டமைப்பு, கண்காட்சிகள், பயிற்சி ஆகியவற்றை வழங்கலாம். ஆனால் பாதுகாப்பு முடிவுகளும், சட்டப் பாதுகாப்பும் அரசு அதிகாரிகளிடமே இருக்க வேண்டும். சிஎஸ்ஆர் (CSR) நிதியில் பேருந்து வழங்கலாம். ஆனால் கோயில் சிற்பத்தை எவ்வாறு பழுதுபார்ப்பது என்பதை அரசுசார் தொல்லியல் துறைகளே தீர்மானிக்க வேண்டும்.
விளைவுகள் மற்றும் மதிப்பீடு
மாணவர்களிடம் சிறந்த வரலாற்றுப் புரிதல், உள்ளூர் தொடர்பான விழிப்புணர்வு, எண்ம எழுத்தறிவு, குடிமைப் பொறுப்பு, பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமூகப் பங்கேற்பு அதிகரிப்பு, கைவினைகள், நாட்டுப்புற மரபுகள், வாய்மொழி வரலாறுகள் பாதுகாக்கப்படுதல், சிதைவு, ஆக்கிரமிப்பு, புறக்கணிப்பு குறித்து முன்கூட்டியே அறிவித்தல், பாரம்பரியக் கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, உள்ளூர் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்புகள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. மேலும் தரமான கல்வி, நல்ல வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி (பாரம்பரியச் சுற்றுலா, கைவினைகள், பண்பாட்டுத் தொழில்முனைவு), நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள், பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி, அமைதி, நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள் ஆகியவையும் முக்கியத்துவம் பெறுகின்றன. பங்கேற்கும் பள்ளிகள், செயல்படும் மாணவர்கள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சரிபார்க்கப்பட்ட பாரம்பரியப் பதிவுகள், வருகைகள், ஈடுபட்ட சமூக உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட தளப் பதிவேற்றங்கள், முன் மற்றும் பின் மதிப்பீடுகள், ஊரக மற்றும் நலிவடைந்தோர் பங்கேற்பு, மன்ற நிலைத்தன்மை ஆகியவையும் மதிப்பிடப்பட வேண்டும். தொல்லியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள், கல்வியாளர்கள், பாதுகாப்பாளர்கள், சமூகப் பிரதிநிதிகள் அடங்கிய தனித்துவமான குழு, சேர்க்கை எண்ணிக்கையை மட்டும் அல்லாமல், கற்றல் தரம், நெறிமுறை, நீண்டகாலத் தாக்கம் ஆகியவற்றையும் மதிப்பீடு செய்ய வேண்டும்.
பாதுகாப்பு மற்றும் நெறிமுறை வழிகாட்டுதல்கள்
அனுமதியற்ற அகழாய்வு, தொல்பொருள் அல்லது மண்பாண்டச் சேகரிப்பு, கல்வெட்டுகளைச் சுத்தம் செய்தல், அழியும் நிலையில் உள்ள சிற்பங்களைக் கையாளுதல் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்களின் மேற்பார்வை, பாதுகாப்பு ஏற்பாடுகள், தொல்லியல் நிறுவனங்களின் அனுமதி ஆகியவை கட்டாயமாக்கப்படுவதோடு, வாய்மொழியாக வந்த வரலாற்று தகவல்களுக்கு ஒப்புதல், தேவைப்படும் இடங்களில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒப்புதல் ஆகியவையும் அவசியம்.
மாணவர்களின் ஒளிப்படங்கள், பதிவுகள், தனிப்பட்ட தரவுகள் பாதுகாக்கப்படுவதோடு, எதிர்பாராத கண்டுபிடிப்புகளைக் கலைக்காமல் மாணவர்கள் ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும். பல்வேறு சமயங்கள் தொடர்பான தளங்கள், அவற்றின் சமய நடைமுறைகள், சமூக மரபுகளுக்கு மதிப்பளித்து, நம்பகமான சான்றுகளின் அடிப்படையில் ஆவணப்படுத்துவதோடு, மத்திய மற்றும் மாநில நினைவுச்சின்னங்களுக்கான சட்டப் பாதுகாப்புகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அகழாய்வு செய்வது, மறுசீரமைப்புக்குட்படுத்துவது, கட்டமைப்பை மதிப்பீடு செய்வது, பாதுகாப்பது ஆகியவை தகுதிவாய்ந்த வல்லுநர்களுக்கு மட்டுமே உரியவையாகும்.
இறுதியாக, பாரம்பரியப் பாதுகாப்பு என்பது ஒரு சமூகத்தின் நினைவு, அதன் வாழ்வியல் விழுமியங்கள், செயல்பாடுகள், அடையாளம் ஆகியவற்றைப் பாதுகாப்பதாகும். அது பொது விழிப்புணர்வு, பொறுப்பான பங்கேற்பு, தலைமுறைகளுக்கிடையே அந்தத் தகவல்களை பகிர்வது ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. யுனெஸ்கோ, இன்டாக், வரலாற்று இங்கிலாந்து, ஜப்பான் ஆகியவை இளைஞர்கள் சரியான பாரம்பரிய பாதுகாவலர்களாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல் தளங்களான அத்திரம்பாக்கம், கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் முதல் பல்லவ, சோழர் கட்டடக்கலை, கைவினைகள், பாசனம், தொல்குடி அறிவு வரை தமிழ்நாட்டின் வளங்கள் அரிய வாய்ப்பை வழங்குகின்றன. அரசு தமிழ்நாடு இளம் பாரம்பரியப் பாதுகாவலர் இயக்கத்தை நிறுவ வேண்டும். மன்றங்கள், ஆசிரியர் பயிற்சி, மாவட்ட மையங்கள், ஆவணப்படுத்துதல், எண்மத் தளங்கள், அருங்காட்சியக வருகைகள், சமூகப் பங்கேற்பு ஆகியவற்றுடன், பாரம்பரியத்தின் அருகில் வாழ்ந்தும், அதன் முக்கியத்துவத்தைக் கற்க வாய்ப்பின்றி இருக்கும் ஊரகப் பள்ளிகளுக்குச் சிறப்புக் கவனம் அளிக்க வேண்டும். வெற்றி என்பது மீட்கப்பட்ட நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கையால் மட்டும் அளக்கப்படக் கூடாது; சமூகம் தன் பாரம்பரியத்தை எவ்வளவு ஆழமாகப் புரிந்து, மதித்துப் பாதுகாக்கிறது என்பதாலும் மதிப்பிடப்பட வேண்டும். இன்றைய மாணவர்களே நாளைய பாரம்பரிய பாதுகாவலர்கள். ஒவ்வொரு பள்ளியும் ஒரு பாரம்பரிய மையமாகவும், ஒவ்வொரு மாணவரும் ஒரு பாரம்பரிய பாதுகாவலராகவும், ஒவ்வொரு சமூகமும் செயல்பாட்டுக் கூட்டாண்மையாகவும் விளங்கும் மக்களை மையப்படுத்திய மாதிரியைத் தமிழ்நாடு உருவாக்க வேண்டும்.
(கட்டுரையாளர் - உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை)