FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கரிசல் காடெங்கும் ஹரிஹரனைக் கொண்டுசேர்த்த தேனிசை தென்றல் தேவா!

பிரபல பாடகர் ஹரிஹரனின் குரலை தமிழகம் எங்கும் கொண்டு சேர்த்த பெருமைக்குச் சொந்தக்காரர் தேனிசை தென்றல் தேவா...

17 அக்டோபர் 2026, 5:51 pm IST
PC: Respecting owner - X
பகிர்:

பிரபல பாடகர் ஹரிஹரனின் குரலை தமிழகத்தின் பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்த்த பெருமைக்குச் சொந்தக்காரர் தேனிசை தென்றல் தேவாதான். ஹிந்துஸ்தானி, கா்நாடக இசை புலமைக் கொண்ட ஹரிஹரனின் குரலை கரிசல்காட்டுக் கானத்துக்காக செழுமைப்படுத்தியவர் தேவா. எம்எஸ்வி-க்கு டிஎம்எஸ், இளையராஜாவுக்கு-எஸ்பிபி என்ற வரிசையில் தேவாவுக்கு-ஹரிஹரன்தான்.இந்த காம்போவில் வந்த எல்லாப் பாடல்களுமே மனதுக்கு நெருக்கமானவைகளே.

தமிழ் திரையுலகில், 90-களின் பிற்பகுதியில் நிறைய அறிமுக நாயகர்களின் திரைப்படங்கள் வெளிந்தன. அந்த புதுமுக நடிகர்களை பாடல்கள்தான் மக்களிடத்தில் கொண்டு சேர்த்தன. அதுமட்டுமின்றி, திரைத்துறையில் நிலைத்திருக்க குத்துப் பாடல்கள் மட்டுமே கை கொடுக்காது என்றுணர்ந்த தேவாவும், தனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், மக்களின் மனதில் நங்கூரமிட்டு தனக்கான இடத்தைப் பிடித்துக் கொள்ள ஏராளமான மெலோடி பாடல்களைத் தந்தார். அதில் பெரும்பாலானவை ஹரிஹரனின் குரலில்தான் வந்தன.

அப்படி வந்த பாடல்கள் அனைத்துமே, இசை ரசிகர்களால் மறக்க முடியாதவை. அதோடு தேவாவின் இசை ரசனையை அனைவரும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அத்தகைய பாடல்களே உள்ளன.

Advertisement

Advertisement

பாடகர் ஹரிஹரனும் தேவாவுக்காக பாடல்களில் சேர்த்திருக்கும் சின்ன சின்ன கமகங்களும், சங்கதிகளும் அந்தப் பாடல்களை வேற லெவலுக்கு கொண்டு சேர்த்துவிடும். தமிழ் மண்ணெங்கும் ரசிக்கப்படும் தேவாவின் ஜீவனுள்ள மெலோடிகளில் ஹரிஹரனின் குரல் செய்திருக்கும் மாயங்கள், தேவாவின் நினைவுகளை நம்மிடருந்து எப்போதும் பிரிக்கவே முடியாது.

'நேருக்கு நேர்' இசையமைப்பாளர் தேவாவின் கோல்டன் ஹிட்ஸ் ஆல்பங்களில் முக்கியமான திரைப்படம். இந்தப் படத்தில் வரும் 'அவள் வருவாளா' பாடலை பாடாத மேடைகளே இருக்காது எனும் அளவுக்கு கொண்டாடித் தீர்க்கப்பட்ட பாடல். இது ஹரிஹரன் சோலோவாக பாடியிருப்பார். இதே படத்தில் வரும் 'எங்கெங்கே' பாடலை ஹரிஹரன்- ஆஷா போஸ்லே இணைந்து பாடியிருப்பர்.

இருவரது குரலிலும் இப்பாடலை கேட்டு அனுபவிக்காத காதுகள் பாவம் செய்தவை. அதுவும் "பூபோல இருந்த மனமின்றி மூங்கில் போல் வெடிக்குதடி சகியே" இந்த இடத்தை ஹரிஹரன் தன் குரலால் செதுக்கி இருப்பார். குறிப்பாக "சகியே சகியே" என பாடும் இடங்கள் எல்லாம் பிஸாஸ்ட்தான். இந்தப் பாட்டின் இடையிசை எல்லாம் தேவாவின் மாய ஜாலங்கள் மயக்கியிருக்கும். அந்த பேஸ் ஃபுளூட் இசை வரும் இடத்தில் எல்லாம் நம்மை சில நிமிடங்கள் கடத்திச் சென்றிருப்பார் தேவா.

'ஆசை', படத்தில் வரும் அஜித் எவ்வளவு இளமையாக இருப்பாரோ அதேபோல்தான் இந்தப் பாட்டில் வரும் ஹரிஹரன் குரலில் இளமை ததும்பியிருக்கும். ஹரிஹரனின் குரலில் இளம் தலைமுறையினருக்கான வசீகரத்தைக் கண்டுபிடித்தவர் தேவாதான் என்பதற்கு சான்றுதான் 'கொஞ்ச நாள் பொறு தலைவா' பாடல். தேவாவின் கம்போசிங் ஒருபக்கம், ஹரிஹரனின் வசீகரிக்கும் குரல் ஒரு பக்கம் என இந்த காம்போவுக்கான எவர்கிரீன் மெலோடிகளில் முதலிடம் இந்தப் பாடலுக்குத்தான்.

பாடலின் இரண்டாவது சரணத்தில் வரும், "சிந்தனையில் வந்து வந்து போறா, அவ சந்தனத்தில் செஞ்சு வெச்ச தேரா, என்னுடைய காதலியே ரொம்ப ரொம்ப பத்திரமா, எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன், வண்ண வண்ணச் சித்திரமா, வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா" வரிகளை ஹரிஹரன் பாடல் கேட்பவர்களின் மனங்களில் வரிவரியாய் இழைத்திருப்பார்.

அதேபோல் இந்தப் பாடலில் கோரஸ் செக்ஸனை தேவா லாவகமாக கையாண்டிருப்பார். அதிலும், பெண் குரல்களில் வரும், "பச்சைத் தாவணி பறக்க அங்கு தன்னையே அவன் மறக்க, வச்ச கண்ணு வாங்காலயே என் மாமன் கண்ணு தூங்கலயே" என வரும் கோரஸை தேவா பிளேஸ் பண்ணியிருக்கும் இடம் அற்புதமாக இருக்கும். இந்தப் படத்தில் வரும் மீனம்மா, புல்வெளி புல்வெளி என தேவா காலத்தால் அழிக்க முடியாத மெலோடி பாடல்களை கொடுத்திருப்பார்.

'நினைத்தேன் வந்தாய்' இந்தப் படத்தில் வந்த அனைத்துப் பாடல்களுமே ஹிட்தான். இசை அமைப்பாளர் தேவாவின் வெற்றி படங்கள் அனைத்துமே மியூசிக்கல் ஹிட் ஆல்பத்தைக் கொண்டவை என்பதற்கு இந்தப் படத்தின் பாடல்கள் சிறந்த உதாரணம். அதிலும், ஹரிஹரன் பாடியிருக்கும் 'வண்ண நிலவே வண்ண நிலவே' பாடல்தான் ஹைலைட்டே. ஹரிஹரனின் குரல் ஆளுமையை தேவா கையாண்ட விதம்தான், இந்த காம்போவின் மாபெரும் வெற்றிக்கு காரணம். சரணத்தில் வரும்,"கண் மூடினால் உன் ஞாபகம், பூப்பூக்குதே என் வாலிபம்" இந்த இடத்தை தேவா மிக சிறப்பாக கம்போஸ் செய்ய ஹரிஹரன் தனது குரலால் நம் இளமையை பூ பூக்க வைத்திருப்பார்.

அதேபோல, பாடலின் இடையிசையில் வரும் ஃபுளூட்டும், ஃபேஸ் புளூட்டும் தேவாவின் தேவாமிர்த கம்போசிங்கான சான்றுகள். அதுவொரு பக்கம் என்றால், ஹரிஹரன் சரணங்களில் கொட்டித் தீர்த்திருப்பார். "கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ, தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ" என்ற வரிகளில் ஹரிஹரன் குரல் ஏறியிறங்கும் இடத்தை கடக்கும்போது, பாடல் கேட்போரும் உருகித்தான் போயிருப்பர். இப்படியாக இந்த காம்போவில்,

'தாஜ்மஹால் ஒன்று', 'காஞ்சிபட்டு சேலகட்டி', 'நான் வானவில்லையே பார்த்தேன்', 'யாரோ அழைத்தது போல்', 'ஒரு மணி அடித்தால்', 'ஆகாசவாணி', 'கீச்சுக்கிளியே', 'சோனா ஓ சோனா', 'மொட்டு ஒன்று மலர்ந்திட', 'சின்ன சின்ன கிளியே', 'செம்மீனா விண்மீனா', 'உன் உதட்டோரம் சிவப்பே', 'முதன்முதலில் பார்த்தேன்' உள்பட இந்த காம்போவில் நூற்றுக்கணக்கான மெலோடி பாடல்களைத் தந்தவர் தேவா. குத்துப்பாட்டு, கானா என்ற வட்டத்தில் மட்டும் அவர் தன்னை சுருக்கிக் கொள்ளாமல், காலத்தைக் கடந்து நிற்கும் எண்ணற்ற மெலோடி பாடல்களைத் தந்தவர் தேவா. திரைத்துறையில் தனது கடின உழைப்பாலும், தன்னிகரில்லா தனிமனித பண்பாலும் இசை ரசிகர்களின் மனங்களில் தேவாவுக்கும் அவரது பாடல்களுக்கும் எப்போது ஓரிடம் இருக்கவே செய்யும்...

summary

Deva who carried the name of Hariharan across the entire tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments