பேசும் வியர்வைத் துளிகள்! கண்ணதாசன் நூற்றாண்டுத் தொடர் - 19
பொதுவுடைமை, வர்க்க பேதம், ஏழை மக்களின் பசி மற்றும் வறுமை குறித்த கண்ணதாசனின் கவிதைகள் பற்றி...
- சொக்கு சுப்பிரமணியன் எம்.ஏ.
"தெருக்கள் தூரிகைகள் ஆகட்டும்; மைதானங்கள் மைப்பலகைகள் ஆகட்டும்! " என்று பாடினான் ரஷ்யக் கவிஞன் மாயகோவ்ஸ்கி. கலையும் இலக்கியமும் மக்கள் சொத்துக்கள். மாபெரும் மக்கள் சமுதாயத்தில் இவை ஆழமாய் வேர் கொண்டு உள்ளன. இந்தக் கலையும் இலக்கியமும் சாதாரண மக்களின் உணர்ச்சி எழுச்சிகளை, சிந்தனை ஓட்டங்களை, மன உறுதிகளை ஒன்றாக்கி அவர்களை வாழ்வில் உயர்த்த வேண்டும். பொதுவுடைமைத் தத்துவத்தில் கலைக்கும் இலக்கியத்திற்கும் உரிய இடம் இதுதான்.
இருவேறு வர்க்கங்கள் இன்று புதியன அல்ல. சமுதாயம் தொடங்கிய நாள் முதலாக இந்நாள் வரையில் இருவேறு வர்க்கங்கள் இருந்துதான் வந்திருக்கின்றன. உலக வரலாற்றில் இந்த இருவர்க்கங்களின் போராட்டங்கள் இல்லாத பக்கமே இல்லை.
Advertisement
Advertisement
முதலாளித்துவத் தனியுடைமை, சமுதாயம் முழுவதையும் சுரண்டி, மக்கள் அனைவரையும் மண்டியிட வைத்துத் தான் மட்டும் வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கும் முதலாளித்துவத் தனியுடைமையை முறித்துப் பொதுவுடைமைப் பொற்காலத்தைத் தோற்றுவிப்பது, சென்ற நூற்றாண்டு முதல் பல நாடுகளில் நடந்து வந்திருக்கும் செய்தி. சுரண்டப்படும் மக்களுக்காகக் கண்ணீர் வடித்த கவிஞர்களும் உண்டு; கனல் தெறிக்கப் பாடிய கவிஞர்களும் உண்டு.
"கவிஞன் வரலாற்று நிகழ்ச்சிகளைக் கவிதையில் பதிவு செய்வோன் அல்லன்; இந்த வேலையை வரலாற்று ஆசிரியர்கள் இன்னும் நன்றாகவே செய்வார்கள்" - (The poet is not a recorder of facts in verse; historians take care of facts much better) என்று பெட்ரோனியஸ் (Petronius) கூறுவான். கவிஞர்களைக் குறை கூறுவதற்குக் கிளம்புவோர்கள் முதலில் இந்த மூதறிஞர்களின் சொற்கோலங்களைப் படித்துணர வேண்டும்.
காசிரெர் (cassirer) கூறுவதைப் போல, 'சொந்த வாழ்க்கையில் சமுதாயத்தின் பாதிப்புக் கவிதையாக மலர்கிறது'. ஒவ்வொரு கவிஞனுக்கும் ஒரு தனி ஆளுமை இருக்கிறது. அவனுடைய ஒவ்வொரு நடையும் ஒரு தனித்துவம் பெற்றிருக்கும். இதை உணராமல் கவிஞர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் பணியில் இறங்குவது மடமை.
மக்களுக்குப் புரியாத மொழியில் எழுதுபவன் கவிஞன் அல்லன்; உலக நடைக்குப் புறம்பாகப் பேசுவது பொருந்தாது; இது ஒரு பிரபுத்துவ நோக்காகப் போய்விடும் (To write verses or speak in fashions different from all world that is an aristo-cratic pose) என்று கூர்பே குறிப்பிடுவார். மக்களுக்குப் புரியாத மொழியில் எழுதுவோர் மதிக்கப்படுவதில்லை.
"குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமைநீதி கடியொன்றில் எழுந்தது பார்" என்று ரஷ்யப் புரட்சியைப் பாடிய பாரதி, மக்களால் இன்றும் என்றும் மதிக்கப்படும் மாகவிஞன்."புதியதோர் உலகம் செய்வோம்; கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்; பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்" என்று குரலெடுத்துக் கூவிய புதுவைக் குயில் பாரதிதாசன், மக்கள் மன்றம் போற்றிய கவிஞன்; பாவேந்தன்! பாரதி, பாரதிதாசனென வாழையடி வாழையாக வந்த ஒரு பரம்பரைக் கவிஞன் அவர்கள் படைத்த தடத்திலிருந்து மாறுவானா? சிந்தனை தேவை.
'ஜீவிக்கும் எழுத்துக்கள்' பாடி வரும் ஒரு வானம்பாடியின் பேனாவை, "விஷம் கசியும் பேனா" என்று குறிப்பிடுகிறார் ஒரு குட்டிக் கவிஞர். "பசித்துத் துடிக்கின்ற பாட்டாளி கேட்கின்றேன்; எனக்காக இலக்கியங்கள் எழுதிடவே மாட்டீரா" என்று அதைக் கவிஞர் கேட்கின்றார்.
"பாழ்நிலம் புதுக்கிப் பயிர்களை வளர்த்தோன் / பசியெலாம் தீர்ந்ததும் இல்லை / வாழ்வதற் கென்றே மண்ணிடைச் சிலர்தான் வந்தனர்"
- என்று அந்த வானம்பாடி மனம் வெதும்பிப் பாடும் பாடல் இந்தக் கோஷக் கவிஞரின் கண்ணில் பட்டிருக்க நியாயம் இல்லை. ஏனென்றால் எல்லா எழுத்துக்களையும் படிப்பது அவர்கள் வழக்கம் அல்லவே! அந்த வானம்பாடி ஒரு வற்றாத கவியூற்று; கொடுமை கண்டு குமுறும் எரிமலை; அன்புக்குக் குழையும் தென்றல்; நட்புக்கு மணக்கும் முல்லை.
கவியரசு கண்ணதாசன்தான் அந்த வானம்பாடி! "சலியாத தொழிலாளர் சமரிலே வடிவான சமதர்ம பூமி" எங்கும் மலர்வதற்கு, "பாடும் பொழுதெல்லாம் பால்வார்க்கும் செந்தமிழால்" கவிமழை பொழிபவர். "பின்னிக் கிடக்கும் இப் பேருலக முரண்பாட்டுக் கண்ணிகளை உடைக்கும் களப்பரணி" எழுதுபவர். இதை யாரும் மறுக்க முடியாது.
பொதுவுடைமைத் தத்துவத்தை எழுதுவதற்கு, பாடுவதற்கு இரண்டு முக்கிய அம்சங்களை உயிரோட்டமாகக் குறிப்பர் திறனாய்வாளர். வர்க்கப் பிரசாரம் ஒன்று; மற்றொன்று புரட்சி போதனை, கவியரசு கண்ணதாசன் இவை இரண்டையும் சிறப்பாகவே தம் கவிதைகளில் பின்பற்றி இருக்கிறார். கவிஞர் காட்டும் பொதுவுடைமை வெறும் கானல் நீர் அல்ல; 'செவத்தம்மா'வின் செயல் ஆறு.
"என் தாய் என்னை ஏழை வயிற்றிலிருந்து பெற்றாள்" என்று தன் ஏழைமையைக் காட்டி, "இருவேறு வர்க்கம் இனி மேல் கிடையாது" என்று ஏழைமைக்கு எதிரான போர்க் கோலத்தை எழுப்புகிறார் கவிஞர். இளமையில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்தவர் ஆதலால், வர்க்க பேதத்தின் கொடுமையைக் கவிஞர் சாடுகையில் உணர்வு கொப்பளிக்கிறது.
சமுதாயத்திலிருந்து விலகி நின்று கவிதை எழுதுபவர் அல்ல...... மன்னிக்கவும்; பாடுபவர் அல்ல கண்ணதாசன். ஒன்றிக் கலந்து உயிரோவியங்களாக, காலத்தால் அழியாத கனிதமிழ்ப் பாடல்களை இவர் தந்திருக்கிறார். "மேட்டை உடைத்துப் பள்ளத்தில் விடுவதென நாட்டுக்கோர் தத்துவத்தை நாட்டக் கிளம்பியவர்" கண்ணதாசன். 'கவிதை வாழ்க்கையின் விமர்சனம்' என்பர் வேர்ட்ஸ்வொர்த். கண்ணதாசன் கவிதைகளுக்கு இது மிகவும் பொருந்தும்.
'மூலதனம் குவிவது, தொழிலாளர்களின் உழைப்புக்குப் பதிலாக இயந்திர உழைப்பைக் கூடுதலாக்கி, ஒரு முனையில் செல்வத்தையும் மறு முனையில் வறுமையையும் வளர்த்து முதலாளித்துவத்திற்கு உயிர் ஊட்டும்' என்பார் மார்க்ஸ். கவிஞர் இந்தக் கருத்தை,
''ஒருபக்கம் முதல்சாய ஒருபக்கம் தொழில்காய / உண்டாகும் சமுதாயம் உடும்புக்குச் சமமாகும்"
என்று குறிப்பிடுகிறார். "சமதர்மம் பூத்துக் காய்த்துச் சரஞ் சரக் கனிகள் நல்கும்" சமுதாயத்தை இவர் காண விரும்புகிறார். கோவை நகர் இவர் கவிதையில்,
"முதலாளிச் சாதிக்கும் இதுதான் முதல்நகரம் / பாட்டாளி மக்கட்கும் இதுதான் பரந்தஇடம்"
என்று பாட்டாளிப் பாட்டாக உருவெடுக்கிறது. கவிஞரின் இதயத்திலே ஊடாடும் பொதுமைக் கொள்கை, வாய்க்கும் இடமெல்லாம் வந்து விழுவதை இவை காட்டுகின்றன.
'கலையில் சமுதாய விளைவு இருக்க வேண்டும்' என்று மார்க்ஸீயம் கூறும். பொதுவுடைமைக் கோஷங்களை மட்டுமே கவிதையாக்கும் கவிஞர் எனப்படுவோர், ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்துவதற்காகப் பாடுவது தன் கடமை என்னும் நோக்கில் கவிதைகள் எழுதலாம். ஆனால் கண்ணதாசனோ ஒடுக்கப்பட்டவர்களில் ஒருவராக நின்று, அவர்களின் துயரக் கடலில் மூழ்கி மூழ்கி கவிதை முத்துக்களாக வெளிவருகிறார். அவருடைய கவிதைகளிலே துயரச் சாயல் மிகுதியாகப் படிந்திருக்கிறது என்றால், ஏற்றத் தாழ்வு நிறைந்த இந்தச் சமுதாயம் தான் காரணம்! சமத்துவம் மலர்வது வாயிலாக சாதாரண மனிதனும் வாழ்வு காண முடியும் என்பது அவர் கருத்து
பொதுவுடைமைச் சமுதாயம் இந்திய பூமியில் தோன்றுமோ என்ற ஐயத்தைப் பலர் கிளம்பிய நேரம். கவிஞர் அவர்களைப் பார்த்து, 'ஓஹோ ஹோ ஹோ' என வெறிச் சிரிப்புச் சிரித்தார். அதுவே இன்று வெற்றிச் சிரிப்பாகி விட்டது. பாடலைப் பாருங்கள்:
"வருமோ சமதருமம் / வறுமையினைப் பங்கிட்டுத் / தருமோ?என்றல்லாம் / தத்துவத்தைக் கேலிசெய்தீர்"
-என்று சமதர்மத்தை எதிர்க்கும் சநாதனிகளைக் கேட்கிறார் கவிஞர்.
'பசி வந்திடப் பத்துப் பறந்துபோம்' என்னும் பழமொழியை உணர்ந்த கண்ணதாசன்,
"அடிவயிறு பற்றிவிட்டால் / அடுத்து நடப்பதென்ன? / கொடியபசி வந்துவிட்டால் / குமுறும் எரிமலை தான்"
என்று வறுமையின் கொடுமையை வருணிக்கிறார்.
மணிமேகலை ஆசிரியர் சாத்தனார், 'பசிப்பிணி என்னும் பாவி' என்று கூறி, அமுதசுரபியால் பிச்சைக்காரர்கள் வளர்ச்சியைக் காட்டினார் என்பர். வறுமையைக் கண்டு கவிஞரோ கடுங்கோபம் கொள்கிறார். "பரந்து கெடுக உலகி யாற்றியான் என்று தானே வள்ளுவனும் பாடினான். கண்ணதாசனோ,
"பசியால் புரட்சிவரும் / பாமரர்கள் சேர்ந்தெழுந்தால் / அசையாத மாளிகையும் / ஆடிப் பொடிபடுமாம்"
- என்று எரிமலையாய்க் கவிதையைப் பொங்கி எழச் செய்கிறார். பாட்டாளி முதலாளி வர்க்கப் போராட்டம் இந்தக் கவிதையிலே உயிரோட்டமாக இல்லையா? வர்க்க பேதத்தால் பெரும்பான்மை மக்களான ஒரு சாரர் வறுமையில் வாடுவது நிதர்சனம், கவிஞர் அதைக் காண்கிறார்.
ஒரு சிலரானா பணக்காரரின் பகட்டையும் பார்க்கிறார், "பணம் இருக்கும் மாளிகையில் மனம் இருக்க மார்க்கம் இல்லை" என்கிறது கவியுள்ளம்.
பொதுவுடைமைச் சமுதாயம் பூப்போல மலர்வதற்குக் கண்ணதாசன் கவி வேள்வி செய்கிறார். ஏகபோகத் தொழில் அமைப்புக்களும், சொத்துரிமையும், இனவெறியும், முதலாளித்துவம் வளர்வதற்கான உரங்கள். இவற்றை நீக்கினால்தான் சம உரிமைச் சமுதாயம், 'எல்லார்க்கும் எல்லாமான' புதிய சமுதாயம் உருவாக முடியும். வாய்ச்சொல் வீரர்களை நோக்கிக் கவிஞர் கேள்விக்குறி எழுப்புகின்றார்.
"வகுப்புவெறி பற்றியெல்லாம் / வாயாரப் பேசுகிறீர் / வர்க்கப்போர் பற்றி உங்கள் / வாயே திறப்பதில்லை"
- என்று கேள்வி புறப்படுகிறது. சீரழிந்து வரும் சமுதாய நிலையைக் கண்டு வருந்தும் கவிஞர், அழிவைத் தடுப்பதற்கான அருமருந்தைக் காட்டுகிறார்.
"தொழிலைப் பொதுவாக்கி / சொத்துரிமை நீக்கிவிட்டால் / அழிவைத் தடுப்பதற்கு / அடிப்படை போல் ஆகிவிடும்"
என்று இவர் பொதுவுடைமைத் தத்துவத்திற்கு விளக்கம் தருகிறார்.
"வல்லவனை வாழ்விக்க வந்தோம் இல்லை; ஏழைக்கே நாடென்று இதயக் குரல் கொடுத்தார்” என்பவை கவிஞர் கண்ணதாசனின் சமதர்மக் கவிதைக் கனிகள். பொதுவுடைமையை,
"ஒன்றேபோல் வாழ்வு; ஒன்றேபோல் சிந்தனைகள் உருவாக்கும் திட்டமிது; உள்ளத்தின் சட்டமிது” - என்று அவர் குறிப்பிடுவார்.
"பரந்ததோர் நிலத்தை ஒருவர்கொள்ளாமல் /பங்குபோட்டமைப்பதெம் வேலை; / இரந்துணும் பேரே எவருமிலாமல் / எழிலுறச் செய்வதெம் வேலை; / கரங்களின் வலிமை கட்டிய உலகம் / கனத்தவர் கொள்வதை ஏலோம்; / நிரந்தர மாயவர் சுதந்திரம் காண / நிமிர்ந்தனம்"
- என்று பாட்டாளிப் பாட்டு பாடுகையில், கவிஞரின் பொதுவுடைமை உள்ளக மனித நேயமாண்பு செந்தாமரையாக மலர்ந்து விரிகிறது.
''போராடிப் போராடிப் புரட்சி நெருப்பினிலே நீராடி நீராடி..."
- வளர்ந்த பொதுவுடைமை, "ஏங்கல்ஸின் இதயத்தை ஏங்க வைத்ததையும்", "மார்க்ஸின் மனதில் மணமகளாய்க் குடியிருந்ததையும்" கண்ணதாசன் மகிழ்ச்சியோடு பாடுகிறார். "வால்கா நதிக்கரையின் வஞ்சமிலா மக்காளெளாம்" கண்ட வளம், பொதுவுடைமையால் விளைந்தது என்பதையும் அவர் உணர்கிறார். அந்தப் புதிய சமுதாயத்தை இங்கே காண விரும்புகிறார்.
"மேட்டை இடித்துவிடு; மெல்லியலே / தனி உரிமைக் கோட்டை தகர்த்துவிடு''
- என்று கட்டளை இடுகிறார் கவிஞர். ஒளிமிக்க இந்தச் சமுதாயம் உருவாகவில்லை என்றால், உறுதி மிக்க,
"சித்தத்தால் நாட்டுவோம்; சீறும் பணக்காரன் ரத்தத்தால் நாட்டுவோம்''
- எனப் புரட்சிக் குரல் எழுப்புகிறார் கண்ணதாசன்.
பணக்காரர்களால் சமுதாயம் சீரழிகிறது. சமுதாயம் சீர்பட சமவுரிமை தேவை.
"ஒழுங்காகச் சம்பாதித்துப் பணக்காரனானவனும் குறைவு; உண்மையைப் பேசிப் பதவிக்கு வந்தவனும் குறைவு" என்பது கவிஞரின் செப்புமொழி.
"பணக்காரனுக்கு இருதய நோய் வந்ததென்று கேள்விப்பட்டால் நான் ஆச்சரியப்படுகிறேன்; அவனுக்கு இருதயம் இருந்ததா?" என்று இவர் வினா எழுப்புகிறார்.
"பணமிருக்கும் மாளிகையில் மனமிருக்க மார்க்கமில்லை" என்று பாடிய கண்ணதாசன், "ஏழை ஒருமுறை சிரித்தால், வறுமை அவன் வாயை மூடுகிறது; பணக்காரன் ஒருமுறை அழுதால், பணம் அவன் கண்ணீரைத் துடைக்கிறது” என்று கூறி, வர்க்க பேத பிரசாரத்தைச் சிறப்பாகச் செய்திருப்பது நோக்கத் தகும்.
பாட்டாளிச் சமுதாயத்திற்குப் பரிந்து பேசுவதாக நடித்துப் பணம் பண்ணும் அரசியல்வாதிகளைக் கவிஞரின் கவிச்சாட்டை புரட்டி எடுக்கிறது.
"ஏழையைப் பற்றிப் பேசாதவர்கள் யார்? அவனது வறுமையைப் பற்றி உருகாதவர்கள் யார்? உருகி உருகி அதன் மூலமே பணக்காரனாகாதவர் யார்?" என்று செப்புமொழியில் தகிடுதத்த அரசியல்வாதிகளை நையப் புடைக்கிறார் கவிஞர்.
''ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதாகக்" கூறி, அவர்களின் வறுமையையே முதலீடாக்கி வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அரசியல்வாதிகளை நாம் கண் கூடாகக் கண்டோம். கவிஞரோ வறுமையைக் கண்டு உள்ளத்தால் உருகியவர். ஏழைகள்,
''நடுக்குறும் வாழ்வை நடத்துவர்; அவரை நாயினும் கீழென எண்ணி மடக்குவர் மட்டும் வாழ்வது தானோ வல்விதி"
-என்று வருந்துவர் கண்ணதாசன்.
பொதுவுடைமைத் தத்துவத்தில் புரட்சி போதனை, இலக்கியத்தின் இரண்டாம் அம்சம். கவிஞரின் இலக்கியம் காட்டும் கவிப் புரட்சியைப் பார்க்கலாம். "ஆலையரசுகள் சோலை மிராசுகள் பாலில் மிதந்திட, வேலை இழந்தவர் வீதி முனைகளில் கூழுக்கு அலைவதைக்" கண்ட கண்ணதாசன்,
"நெஞ்சை நிமிர்த்துங்கள் தோழர்களே - இனி நேருக்கு நேர் நின்று பார்ப்போம் - சம நீதிக்குப் போர்ப்படை சேர்ப்போம்"
- என்று புரட்சிப் பண் இசைக்கிறார். "நாட்டுப் பொருள் எங்கள் வீட்டுப் பொருள் என்று நாட்டுவோம்" என்று போர்ப் பறை முழக்குகிறார். வாடும் ஏழையர் வயிற்றில் மூண்ட தீ, செல்வர் மாளிகையைச் சென்று பொசுக்கிவிடும் என்னும் கருத்தை,
"தீயும் வயிறுகள் சேர்ந்தெழுவோம் அந்தத் தீயின் கிளைகளைப் போலே - கொடுந் தீயவர் மாளிகை மேலே"
- என்னும் வரிகளில் வடிக்கிறார் கவிஞர்.
விடுதலை அடைந்து பல்லாண்டுகள் கடந்தும் நாட்டின் பெரும்பான்மையான பாட்டாளிகள் உண்மையான விடுதலை பெறாத நிலையைக் கண்டார் கவிஞர். இவர் உள்ளம் வேதனைப் பட்டது. அந்த வேதனை ஏச்சாக மாறியது.
"வந்த சுதந்திரம் ஏழைக்கல்ல அது / வாழும் முதலைகள் தூங்க- பசி / வாட்டும் வயிறுகள் ஏங்க"
- என்று கண்ணதாசன் சமுதாயத்தை, அதன் கையாலாகாத் தனத்திற்காக ஏசுகிறார்.
"இப்படியே பசி நீளுமென்றால் இது என்ன சுதந்திர பூமி?"
- என்பது அவர் கேள்வி! கேள்விக்குப் பதிலும் அவர் கவிதையிலேயே கிடைத்து விடுகிறது.
"பொருள்கள் யாவையும் பொதுமை என்பதில் / புதுமுறை கொள்ளும் புரட்சியே"
பசியைப் போக்கிப் பாட்டாளிகளை வாழ்விக்கும் என்பது கவிஞர் கண்ட முடிவு.
"சரித்திர நதியின் ஓட்டத்தைத் தனி மனிதன் திருப்ப முடியும் என்பதற்கு, சாட்சி லெனின்" என்னும் கவிஞரின் சொற் கோலம் பொதுவுடைமைத் தத்துவத்தில் கவிஞரின் ஈடுபாட்டி ற்குச் சான்று.
கவிஞர் கண்ணதாசன் அரசியல் அரங்கில் புகுந்து பிற்போக்குக் கட்சி ஒன்றில் இருந்த காலம். அந்தக் கட்சிக்காக எழுதிய நேரம். அவரே 'வனவாச'த்தில் குறிப்பிடுவது போல, வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டிருந்த சமயம். அப்போது கவிஞர்,
"பொதுவுடமை என்றாலே குழப்பம் என்போம் / பொறுத்திருந்து பார்ப்போர்க்குப் புரியும்" என்று எழுதினார், அது மட்டுமா?
"தன்னாட்டைத் தானாள நினைப்ப வர்க்குத் / தடைக்கல்லே பொதுவுடைமைத் தோழர் கூட்டம்" என்று வசைபாடினார், அன்று.
"ஏழை விவசாயி / இவன் பிரபு என்றெல்லாம் / பாகம் பிரித்துப் /பறக்கும் கொடி"
- என்று, செங்கொடியைக் கவிஞர் ஏசியதும் உண்டு. ஆனால் அவருடைய வெளிநாட்டுப் பயணங்கள் மனத்திலே மாற்றங்கள் விளைவித்தன. "ஏழையர் ஆகி இருவிழி நீரில் ஏங்கிடும் நிலைகள்" கண்டு கவிஞர் மனத்திலே மனிதாபிமானம் மையமாக நிலைபெற்று விட்டது.
அரசியல் அரங்கில் முற்போக்குக் கட்சி ஒன்றில் நிலையான இடம் பெற்ற பிறகு, கவிஞர் பாடல்களிலே பொதுவுடைமைத் தத்துவம் கும்மாளம் போடுகிறது. 'செவத்தம்மா கவிதை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பாடலாகும். "தூய உடை கொண்ட தேவதை பெண்ணுக்குத் தொல்லை கொடுத்திடவும்," "தலைசாய வைத்தே சமதர்மத்தைக் கொன்றிடவும்," ஒன்று சேர்ந்த 'தர்மாகர்த்தாக்களுக்கு, கவிஞர் விடுக்கும் சேர்ந்த எச்சரிக்கை கருத்துக் குன்றம். "சமத்துவ வாள்கொண்டு தர்மத்தின் தேவதை துரத்திய காட்சியைக்" கண்டு, "பல தோள்களை ஒன்றாக்கிக் கொண்டார்" நடத்திய வேட்டையை முடிவு கட்ட கவிஞர் வெகுண்டெழுந்தார். கவிதை பிறந்தது.
"வீழ்ந்தது வகுப்பு வாதம்; / வெகுஜன விரோதப் போக்கு; / தாழ்ந்தது மன்னர் கொற்றம்; / தளர்ந்தது செல்வர் கோட்டம்"
- என்பது கவிஞரின் சமதர்ம வெற்றிப் பண்.
'புவியிலுள பெரும்பான்மை மக்கள் கூடிப் பொதுவுடைமை வேண்டுமென முடிவு செய்தால்"
யாரும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது என்று கண்ணதாசன் கூறுகிறார். பொதுவுடைமைக்கு எதிரான புரட்சிக்கு எச்சரிக்கையும் விடுகிறார்.
"எத்தனைதான் நீங்கள் / எதிர்ப்புரட்சி செய்தாலும் / பத்தாண்டுக் குள்ளாகப் / பணத்தொந்தி சரிந்துவிடும்"
- என்று கவிஞர் கூறியது இன்று புதுப் பொருளாதாரத் திட்டத்தால் தீர்க்க தரிசனம் ஆகிவிட்டது. "உள்ளோர்க்கும் இல்லார்க்கும் ஊடே முளைத்தெழுந்த பள்ளத்தை" - நிரப்பும் பணி விரைந்து நடக்கிறது. கவிஞர்,
"தத்துவத்தின் எச்சரிக்கை / சமதருமம் நாடுங்கள்! / சத்தியத்தின் எச்சரிக்கை / சரித்திரத்தை மாற்றுங்கள்"
- என்றார். பாரதத்தில் இன்று சரித்திரம் மாறுகிறது; சமதர்மம் தழைக்கிறது. இது கண்ணதாசனின் தீர்க்க தரிசனம்.
கவிதை, ஒவ்வொரு புதிய இலக்கையும் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுகிறது (Poetry moves forward by exploiting each new position- C.M. Bowra) பொதிந்த சொற்கள் பொருந்தி வந்தால்தான் நினைத்த பயன் கிடைக்கிறது. (Words can be effective only if they have a definite meaning-Denis de Rougemont) கண்ணதாசனின் கவிதைகள் இதற்குச் சான்றாக விளங்குகின்றன.
"இவன் வேர்வையின் துளிகள் / அவன் சூடிடும் மணிகள் / இந்த ஏழையின் உழைப்பு / அந்த மாளிகை மதிப்பு / பருந்து அங்கே / கிளிகள் இங்கே"
- என்னும் பாடலில் வியர்வைத் துளிகள் பேசுகின்றன.
"காலம் ஒருநாள் மாறும் - நம் கவலைகள் யாவும் தீரும்' - என்னும் கவிக் கனவு நனவாகிறது.
"நாளைய உலகம் நமதென எண்ணி நாமும் விளக்கை ஏற்றி வைப்போம்"
"உங்கள் கைகள் உயரட்டும்! உலகம் அதிலே உருளட்டும்!"
[கவிஞர் கண்ணதாசனின் 50-வது பிறந்த நாளையொட்டி, 1976-ல் வெளியிடப்பட்ட கண்ணதாசன் பொன்விழா மலரில் இடம் பெற்ற கட்டுரை. இன்னோர் 50 ஆண்டுகளுக்குப் பின் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. சொக்கு சுப்பிரமணியன் எம்.ஏ. (சொக்கலிங்கம் சுப்பிரமணியன்) சிறந்த கவிஞர், எழுத்தாளர். இந்திய அரசின் செய்தி விளம்பரத் துறை அதிகாரியாகவும், தில்லி வானொலியில் தமிழ்ச் செய்திப் பிரிவில் துணையாசிரியராகவும் பணியாற்றியவர். காப்புரிமை - தொடர்புடையோருக்கு].
Kavignar Kannadasan Centenary Series - 19
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.