அர்த்தமுள்ள இந்து மதத்தை சினிமாவாக எடுக்கப் போகிறேன்! கண்ணதாசனின் நிறைவேறாத ஆசை! நூற்றாண்டுத் தொடர் - 15
1980-களில் சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் அவர் தொடர்ந்து கட்டுரை எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் மருத்துவ நூலாசிரியர் டாக்டர் இ.எஸ்.எஸ். இராமனுக்கு கண்ணதாசன் அளித்த பேட்டி - கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி மீண்டும் தினமணி இணையதளத்தில்...
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் 1981 ஜனவரி 1 தேதியிட்ட இதழில் தொடங்கி, சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! என்ற தலைப்பில் தன்னுடைய திரைப் பயணம் பற்றித் தொடர் கட்டுரைகளை எழுதினார் கவிஞர் கண்ணதாசன். இந்த காலகட்டத்தில் மாறுபட்ட ஒரு சந்திப்பாக மருத்துவ நூலாசிரியர் டாக்டர் இ.எஸ்.எஸ். இராமனுக்கு கண்ணதாசன் அளித்த பேட்டி - 15.04.1981 தேதியிட்ட சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான அந்த பேட்டி - கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி மீண்டும் தினமணி இணையதளத்தில்...
*
டாக்டர்: சர்க்கரை வியாதி இருப்பதால் உங்களுடைய கவித்திறன் பாதிக்கப்படுகிறதா?
Advertisement
Advertisement
கவிஞர்: இல்லை. சுமார் இருபத்தைந்து வருடங்களாக எனக்கு இவ்வியாதி இருக்கிறது. சர்க்கரை உடம்பில் ரொம்பவும் குறைந்து போகும்போது பாட்டு சரியாக வராது.
டாக்டர்: உங்கள் பிள்ளைகள் சுப்புவும், கலைவாணனும் செய்த முதற்படம் இன்னும் வெளிவரவில்லையே.. அதில் நடித்த நடிகை ஷோபா மரணமடைந்தது சகுனமாகத் தோன்றுகிறதே..
கவிஞர்: அப்படியில்லை. மரணம் சுபசகுனம். 'நாம் இருவர்' படம் ரிலீசான நாள் ஏவி.எம்.மின் துணைவியார் இறந்துபோனார்கள். அன்றிலிருந்து ஏவி.எம்.முக்கு நல்ல ஏற்றம் வந்தது. என் பிள்ளைகளின் படம் (அன்புள்ள அத்தான்) முடிந்துவிட்டது. விரைவில் வெளியாகும்.
டாக்டர்: டைரக்டர் தாசரி நாராயண ராவை நீங்கள் புகழ்ந்து எழுதி விட்டதால் மற்ற டைரக்டர்களுக்கு உங்கள் மீது வருத்தமாமே! இப்பொழுது தாசரியும் உங்கள் படத்தைச் செய்ய மாட்டேன் என்று சொன்னதாகவும் சொல்கிறார்கள்.
கவிஞர்: நான் வெவ்வேறு சமயங்களில் எல்லோரையுமே பாராட்டியிருக்கிறேன். தாசரியைப் பாராட்டியதில் பிறர் ஏன் வருத்தப்பட வேண்டும்? தாசரியை என் படத்தை டைரக்ட் செய்யச் சொல்லி நான் இன்னமும் கேட்கவில்லை. கேட்டால் அவர் மறுக்க மாட்டார்.
டாக்டர்: மது அருந்தி விட்டால் மனநிலை பாதிக்கப்படும். நேர்த்தியாகக் கற்பனை ஓடாது. co-ordination போய்விடும். இது மருத்துவ உண்மை. நீங்கள் போதையில் பாடுவதாகச் சொல்லப்படுவது எப்படி?
கவிஞர்: கொஞ்சமாகக் குடித்தால்தான் பாட்டு வரும். மிதமிஞ்சிப் போனால் பாடவும் வராது... எண்ணங்களும் தடைப்படும். அதிகமாகக் குடித்துவிட்டு நான் பாடல்கள் எழுதுவதில்லை.
டாக்டர்: திரைப்படப் பாடல்களில் இலக்கணப் பிழைகள் வருவதில்லையா? உதாரணமாக 'சாரதா' திரைப்படத்தில் "ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன? காதல்!" என்று வருவதைச் சிலர் குற்றமென்கிறார்கள். 'கைக்கிளை' என்றுதானே அது இருக்க வேண்டும்?
கவிஞர்: "கைக்கிளை"யும் ஒருவகைக் காதல்தானே! 'ஒருதலைக் காதல்' என்று வேண்டுமானால் சரியாகச் சொல்லலாம்.
டாக்டர்: 'அர்த்தமுள்ள இந்து மதம்,' மதத்தைப் பற்றி மக்களிடையே நல்ல Impact ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் திரைப்படங்கள் எடுத்தாலென்ன?
கவிஞர்: அதே பெயரில் ஒரு திரைப்படம் எடுக்கும் எண்ணம் இருக்கிறது. புராணப் படங்களான 'தெய்வத் திருமணங்கள்', 'அங்காளப் பரமேஸ்வரி' அடைகின்ற வெற்றியினைப் பொறுத்துத்தான் எடுக்க வேண்டும்.
டாக்டர்: 'பதினாறு வயதினிலே'யில் வரும் 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' பாடலில் வருகின்ற 'பழைய நெனப்புடா பேராண்டி' ஐடியா உங்களுடையதா? இளையராஜாவுடையதா?
கவிஞர்: இருவருடையதும் இல்லை. 'ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி' யில் 'பழைய நெனப்புடா பேராண்டி' என்ற பழமொழி வரும். அதை மனதில் வைத்துக்கொண்டுதான் அப்படத்தில் புகுத்தினோம்.
டாக்டர்: தேவருக்குப் பிறகு உங்களுக்கு அதிகம் உதவுகின்றவர்...
கவிஞர்: நிச்சயம் எம்.ஜி.ஆர்.தான். தேவர் ஸ்தானத்தில் இன்று அவரே நின்று உதவி வருகின்றார்.
டாக்டர்: பாரதி நூற்றாண்டு விழா வருகிறது. அவர் வரலாற்றை நீங்கள் எழுதித் திரைப்படமாக வெளியிட்டால் சிறப்பாக இருக்குமே?
கவிஞர்: முழு நீள சினிமாவாய் எடுக்க முடியாது. சம்பவங்கள் போதா.
டாக்டர்: ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?' 'கப்பலோட்டிய தமிழனை'ப் பந்துலு எடுக்கவில்லையா?
கவிஞர்: எடுத்தார். ஆனால் அது ஓடவில்லை. பாரதியின் வரலாற்றை 'Feature Film' ஆக வேண்டுமானால் செய்யலாம். நன்றாக வரும்.
டாக்டர்: பிற மொழிப் படங்களைத் தமிழில் எடுக்கும்பொழுது, மொழி மாற்றம் செய்தாற்போல பாடல்கள் அமைகின்றனவே.... உங்கள் ஒரிஜினாலிடி பாதிக்கப்படாதா?
கவிஞர்: சினிமா பாடல்களில் ஒரிஜினாலிடிக்கெல்லாம் இடமில்லை. சம்பவத்திற்கேற்ப பாடல்கள் தேவை. அவ்வளவுதான். டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் சொல்கிறபடிதான் எழுத வேண்டியிருக்கும்.
டாக்டர்: எவ்வளவோ சம்பாதித்த நீங்கள் பிறந்த நாள் விழாவிலே பண முடிப்பெல்லாம் பெற வேண்டியது அவசியந்தானா?
கவிஞர்: பணமுடிப்பு நண்பர்கள் அன்பின் காரணமாகத் தருவது. என் பிள்ளைகளுக்கு எனது நூல்களே சோறு போட்டுவிடும். என் அதிக வசதிக்காகத் தரப்படுவதை நான் ஏன் மறுக்க வேண்டும்?
டாக்டர்: உங்கள் கொள்கைகளுக்கு முரணான கருத்துகளை எழுதும்படி நேர்ந்ததுண்டா?
கவிஞர்: உடன்பாடு சினிமா பாடல்களுக்குத் தேவையில்லை. தொழில் ரீதியாக எழுதப்படுகிற பாடல்கள் எல்லாம் எனக்கு உடன்பாடானவை அல்ல. கடவுள் 'உண்டு' என்றும் எழுதலாம், 'இல்லை' என்றும் சொல்லலாம். எல்லாம் தேவைக்கேற்ப!
டாக்டர்: குடிப்பதில் கல்லீரல் பாதிக்கப்படும், குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு. உங்களுக்கு அந்தத் தொந்தரவு ஏதும்..
கவிஞர்: இல்லைங்க டாக்டர்... லிவர் ட்ரபிள் எனக்கு இது வரைக்கும் இல்லை
டாக்டர்: இப்பொழுதெல்லாம் பெதடின் (போதை) ஊசி போடுவதில்லையா? விடமுடியாத பழக்கமாயிற்றே அது?...
கவிஞர்: அந்த ஊசி போட்டுக்கொண்டால் டயாபடீஸ் காரணமாக உதறல் வந்தது. அதனால் அதன் மேல் வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது... விட்டுவிட்டேன்.
டாக்டர்: உங்களுக்குள்ள நோயைப் பற்றி அறிந்து வைத்திருப்பது உங்களுக்கு உதவுகிறது அல்லவா?
கவிஞர்: நிச்சயமாக. நீங்கள் எழுதியுள்ள 'நீரிழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள்' நூல் அத்தகைய அறிவை அளிக்கக் கூடியது. நன்றி.
டாக்டர்: மிகவும் இனிமையான சந்திப்பு...
கவிஞர்: சர்க்கரை வியாதிக்காரனாயிற்றே... இனிக்கத்தானே செய்யும்! (சிரித்துக்கொண்டே விடை கொடுக்கிறார்).
[மிகவும் வெளிப்படையான நேர்காணல். கவிஞரின் குடிப்பழக்கம், போதை ஊசிப் பழக்கம் பற்றிய நேரடியான கேள்விகளை எதிர்கொண்டு மிக இயல்பாக உண்மையைப் பேசுகிறார் கவிஞர் - 'அதிகமாகக் குடித்துவிட்டு நான் பாடல்கள் எழுதுவதில்லை'].
- ஏற்பாடு, கட்டுரை: ஏ.ச.தி. மூர்த்தி
I am going to make a film based on Arthamulla Indhu Madham; Kannadasan unfulfilled wish
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.