FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கவியரசர் என் காவலர்! - கண்ணதாசன் நூற்றாண்டுத் தொடர் - 22

கவிஞர் கண்ணதாசனைப் பற்றி அவருடைய மிக நெருக்கமான நண்பரும் உலகத் தமிழர் கூட்டமைப்புத் தலைவருமான பழ. நெடுமாறனின் நினைவுகளிலிருந்து...

53 வினாடிகள் முன்பு
'காவலர்' கண்ணதாசனும் பழ. நெடுமாறனும்... - நூலிலிருந்து...
பகிர்:

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் என்றும் அழியாத வகையில் தனது முத்திரையைப் பொறித்த கவியரசர் கண்ணதாசன் வாழ்ந்த காலம் மிகக் குறைவே. மானிட வாழ்க்கையில் 54 ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலமேயாகும். அந்தக் குறுகிய காலத்தில் அவரது சாதனை என்பது எண்ணி எண்ணிப் பிரமிக்கத் தக்கதாகும்.

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர் தனது சுயமுயற்சியால் இலக்கியப் புலமையை வளர்த்துக்கொண்டு பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் பிறகு தமிழ்க் கவிதையுலகின் முடிசூடாத மன்னராகத் திகழ்ந்தார். அவரது வாழ்க்கை எவ்வளவோ ஏற்றங்களையும் இறக்கங்களையும் கண்டிருக்கிறது. வயிற்றுப் பசியைத் தணிக்கப் போராடியும் இருக்கிறார். எத்தனையோ பேரின் பசியைப் போக்கியும் இருக்கிறார். கோடி கோடியாக செல்வம் திரட்டிப் பெருக்கியும் இருக்கிறார். அதைப் பிறருக்கு வாரி வழங்கியுமிருக்கிறார்.

Advertisement

Advertisement

'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு' என அவரே பாடியிருப்பதைப்போல களியாட்ட வாழ்க்கையும் நடத்தியிருக்கிறார். மதத் தத்துவங்களின் சாரத்தைப் பிழிந்தெடுத்து, பேருரைகள் நிகழ்த்திய ஞானப் பேராசானாகவும் திகழ்ந்திருக்கிறார்.

இலக்கியத் தென்றலாகத் தவழ்ந்து தமிழ் மணம் பரப்பி அனைவரையும் மகிழ்வித்தும் இருக்கிறார். அரசியல் புயலாகச் சீறிச் சுழன்றடித்து எதிரிகளைத் திக்குமுக்காட வைத்தும் இருக்கிறார்.

'எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இது நூலில்லை, எப்படி வாழக் கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி' எனத் தனது சுயசரிதையின் முன்னுரையில் சொல்கிற துணிவு அவருக்கு இருந்ததைப் படித்தவர்கள் முதலில் திடுக்கிட்டாலும் அவரது புதுமையான தமிழ்நடையில் மயங்கி அவரது தவறுகளை மறந்து போற்றினார்கள்.

அவரது பாடல்கள் திரையுலகில் புதியதொரு சகாப்தத்தைத் தோற்றுவித்தன. படித்தவர் - பாமரர், பெரியவர்கள் - இளைஞர்கள், ஆண்கள் - பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் மயங்கி முணுமுணுக்கும் வண்ணம் இலக்கியநயம் மிகுந்த பாடல்கள் அவரிடமிருந்து பிறந்தன. அவர் வாழ்ந்த காலம் முழுவதிலும் திரையுலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கவிக்குயிலாகத் திகழ்ந்தார்.

அரசியலில் அவர் எந்த நிலை எடுத்திருந்தாலும் தான் நியாயம் என்று உணர்ந்தவற்றுக்காகப் போராடினார். பதவிகளுக்காக அவர் ஒருபோதும் யாரிடமும் கெஞ்சியதில்லை. தன் நண்பர்கள் பதவிகளைப் பெற உதவியிருக்கிறார். அவரைத் தேடிப் பதவிகள் வந்தபோதும் அதைப் பிறருக்கு வழங்கிய வள்ளல் அவர்.

கவியரங்கங்களுக்குத் தலைமைதாங்கி இளங்கவிஞர்களை நாட்டிற்கு அறிமுகப்படுத்தி ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவரே. பல நூறு கவிஞர்களை உருவாக்கி மகிழ்ந்த பேருள்ளம் அவரது உள்ளம்.

கவிச்சக்கரவர்த்தியான கம்பனுக்குப் பிறகு கவியரசர் கண்ணதாசனிடம்தான் 'சந்தம்' குடிகொண்டது. தனது கவிதையடிகளால் தமிழ் கூறும் நல்லுலகை அளந்தவர் அவர். சொல்தொகுதியின் கரைகண்டவர் அவர். அதனால்தான் நொடிப்பொழுதில் கவிதைகளை எழுதிக் குவிக்க அவரால் முடிந்தது. பணம் சம்பாதிப்பது மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்திருந்தால் திரையுலகில் அவர் ஒரு ஜெமினி வாசனாக, ஏ.வி. மெய்யப்பச் செட்டியாராக ஆகியிருக்க முடியும்.

திரையுலகில் அவரது செல்வாக்குக் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவர் சொற்படி நடக்க நடிகர்கள், நடிகைகள், படமெடுக்கும் முதலாளிகள், இயக்குநர்கள் உள்பட பலரும் காத்துக் கிடந்தனர். இந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரும் படத் துறையில் தங்கச்சுரங்கம் வெட்டி இருந்திருக்கலாம்.

பத்திரிகைத் துறையில் அவர் எழுத்திற்குப் பெரும் மதிப்பு இருந்தது. குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, ராணி, தினமணி, தினத்தந்தி போன்ற பெரும் பத்திரிகைகள் போட்டி போட்டுக்கொண்டு அவரது எழுத்துகளைப் பிரசுரித்துத் தங்களின் விற்பனையைப் பெருக்கிக்கொண்டன. ஆனால், கவிஞர் தனது சொந்தப் பத்திரிகைகளான தென்றல், முல்லை, கண்ணதாசன் போன்றவற்றைச் சற்றுக் கவனத்துடன் வணிக நோக்கில் நடத்தியிருந்தால் அவை நின்று நிலைத்திருக்கும். கவிஞரும் பெரும் பத்திரிகை முதலாளியாகியிருந்திருப்பார்.

அரசியல் உலகில் தனது செல்வாக்கைப் பயன்படுத்திச் செல்வம் சேர்த்தவரல்லர் அவர். தமிழக அரசிலும் இந்திய அரசிலும் அவருக்கு மிக வேண்டியவர்கள் பெரும் பதவிகளில் இருந்தபொழுது அவர்களைப் பயன்படுத்தி தொழில் துறையில் ஈடுபட்டுப் பெரும் செல்வம் திரட்டியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை.

பணத்தை அள்ளிக் குவிக்க வேண்டும் என அவர் ஒருபொழுதும் ஆசைப்பட்டதில்லை. தான் ஒரு சிறந்த இலக்கியவாதியாகத் திகழ வேண்டும் என்று மட்டுமே அவர் விரும்பினார். அவரது ஆசைக்கு முட்டுக்கட்டையாக அரசியல் குறுக்கிட்டது. அதையும் தாண்டி எழுதினார். அரசியலில் அவர் செலவழித்த நேரத்தை எழுதுவதில் செலவழித்திருந்தால் மேலும் பல புதிய ஆக்கங்கள் தமிழுக்குக் கிடைத்திருக்கும். தனிமையில் அவரிடம் பேசும்பொழுது ஒன்றை நான் வற்புறுத்துவதுண்டு.

‘பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் பிறகு தமிழ்க் கவிதையுலகின் தலைமகனாக நீங்கள் திகழுகிறீர்கள். தமிழ்கூறும் நல்லுலகம் உங்களிடமிருந்து சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறது. தமிழின் பெருமையைப் பல மடங்குகள் உயர்த்தும் உன்னதமான படைப்புகளை உருவாக்கும் அறிவும் ஆற்றலும் தகுதியும் திறமையும் உங்களிடம் உண்டு. அதை நீங்கள் செய்ய வேண்டும்’ எனப் பல முறை வேண்டியிருக்கிறேன்.

அவரும் அதை வழிமொழிவார். ஆனால், எங்கேயோ வீசும் அரசியல் சூறாவளியில் தன்னையும் அறியாமலேயே சிக்கிக் கொள்ளுவார். அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பார். அரசியல் சூறாவளிகள், கடன் தொல்லைகள், குடும்பச் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு நடுவேயும், அவரது இலக்கியச் சாதனை எண்ணி எண்ணிப் பிரமிக்கத் தக்கதாகும்.

18 வயதில் எழுதப் புகுந்த அவர் 54-ஆம் வயதில் மறைந்தார். இடைப்பட்ட 36 ஆண்டுக் காலத்தில் கவிதைகள் - 8 தொகுதிகள், நவீனங்கள் -20, கட்டுரை நூற்கள் -20, அர்த்தமுள்ள இந்துமதம் -6 பாகங்கள், திரைப்படப் பாடல்கள் -5000-க்கு மேல், திரைக்கதை வசனம் -10 படங்களுக்கு மேல்... இன்னும் மாங்கனி, ஆட்டனத்தி - ஆதிமந்தி, கவிதாஞ்சலி, தைப்பாவை, பாண்டிமாதேவி, இயேசு காவியம் முதலிய பல காவியங்களைப் படைத்தார்.

வணங்காமுடி, தமிழ்மன்னன், காரைமுத்துப் புலவர் ஆகிய புனைபெயர்களிலும் அவர் எழுதிக் குவித்தார்.

அவருடைய குட்டிக்கதைகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. அவர் எழுதிய 'புஷ்பமாலிகா' ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

‘விளக்கு மட்டுமா சிவப்பு’ என்னும் நவீனம் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 'மலையாளநாடு' இதழில் தொடராக வெளிவந்தது.

அவரது 'அழகி' என்னும் கவிதை ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டது.

'பாடாய் தும்பி! மணவறைப்பாட்டு' கவிதை சாகித்திய அகாதெமியினால் 1958-ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டது.

கவிஞரின் தேர்ந்தெடுத்த கவிதைகளை நண்பர் ஆஷா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'AV Revoir' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

பாரிசில் வாழும் பேராசிரியரான Jean-Marie-Julia என்பவர் கவிஞரின் 100 கவிதைகளைப் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்து Kannadasane என்ற தலைப்பில் வெளியிட்டார்.

தமிழக அரசு இவரை அரசவைக் கவிஞராக நியமித்துப் பெருமையடைந்தது. இந்திய சாகித்திய அகாதெமி அவரின் ’சேரமான் காதலி' நவீனத்தைத் தேர்ந்தெடுத்துப் பரிசளித்தது. எம்.ஏ.சி. அறக்கட்டளையின் சார்பாக அண்ணாமலையரசர் நினைவுப் பரிசு கொடுக்கப்பட்டது.

இந்தப் பாராட்டுகளும் பரிசுகளும் அவரைத் திருப்தி செய்யவில்லை. கம்பனைப் போல இளங்கோவைப் போல அற்புதமான காவியங்களைப் படைத்து அழியாத புகழைப் பெற வேண்டும் என்ற துடிப்பு அவரிடம் குடிகொண்டிருந்தது என்பதை நானறிவேன்.

'கம்பசூத்திரம்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையில் தனது மனக்கிடக்கையைப் பின்வருமாறு வெளியிட்டுள்ளார்:

கம்பனெனும் மாநதியில் / கால்நதிபோல் ஆவதென / நம்புகிறேன் பாட்டெழுதும் நானோ-அந்த / நாயகன்தான் என்ன நினைப்பானோ?

ஆனால் காலம் செய்த சதியால் அவரது மனோரதம் முழுமையாக நிறைவேறவில்லை.

அவருடைய கவிதைகள், திரைப்பாடல்கள் மட்டும் இலக்கிய நயத்தோடு மிளிரவில்லை. அவரது உரைநடையும் இலக்கியச்சுவை மிகுந்ததாக இருந்தது. பலதரப்பட்ட உரைநடைகளை அவர் கையாண்டார். சிவகங்கைச் சீமை, இல்லறஜோதி போன்ற படங்களுக்கு அவர் எழுதிய வசனம் இலக்கிய நடையில் அமைந்தது.

தி.மு.க.விலிருந்து விலகும் கட்டத்தில் 'போய்வருகிறேன்', 'முடிவின் தொடக்கம்', 'பாவமன்னிப்பு' என்ற தலைப்புகளில் அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் விவிலிய நடையை வென்றன. விவிலியத் தமிழைப் புதுமையாகக் கையாண்டு எல்லோரின் உள்ளங்களையும் தொட்டார்.

அதற்கு மறுப்பு எழுதச் சிலர் முற்பட்டபொழுது அறிஞர் அண்ணா அவர்களைத் தடுத்துவிட்டார். 'இந்த மாதிரி முயற்சியும் பாணியும் உங்களில் யாருக்கும் வராது. அது அவனுக்கு மட்டுமே ஆகிவந்த கலை' என்றாராம்.

இதைத் தொடர்ந்து வனவாசம், மனவாசம் என்ற தலைப்புகளில் தனது வாழ்க்கை வரலாற்றை ஒளிவுமறைவின்றி அவர் எழுத ஆரம்பித்தபொழுது தமிழகம் திகைத்தது. அவரது எதிரிகள்கூட அந்தப் புதுமையான நடைக்காக அதை வாங்கிப் படித்தார்கள். இதற்கு முன்னாலும் அதற்குப் பின்னாலும் இன்று வரை யாராலும் அந்தப் புதிய பாணியில் எழுத முடியவில்லை. முயன்று பார்த்தவர்கள் தோல்வியையே சந்தித்தனர்.

தனது வாழ்வையே தனக்கு ஆசானாகக் கொண்ட அற்புத மனிதர் அவர். ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன் / காற்றில் பறந்தேன் கல்லில் நடந்தேன் / ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன் / மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன் / பார்த்தது கோடி பட்டது கோடி / சேர்ந்தது என்ன? சிறந்த அனுபவம் என்று பாடியவர் கவியரசர்.

கவிதை, உரைநடை, பேச்சு ஆகிய மூன்று துறைகளிலும் ஆற்றல் மிக்கவராக கவியரசர் விளங்கினார். கவிதை புனைவதில் சிறந்தவருக்குப் பேசத் தெரியாது. அல்லது உரைநடை சிறப்பாக வராது. ஆனால் கவியரசர் கவிதை எழுதும் ஆற்றலையும், படிப்போரைத் துடித்தெழ வைக்கும் உரைநடைத் திறனையும், பண்டிதரையும் பாமரரையும் கவர்ந்திழுக்கும் பேச்சு வன்மையும் ஒருங்கே கொண்டிருந்தார். இந்த மூன்று ஆற்றல்களும் ஒருங்கே அமைந்த கவிஞர் அவர் ஒருவர் மட்டுமே.

வள்ளுவனுக்கும் இளங்கோவுக்கும் கம்பனுக்கும் பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் இறப்பு என்பது இல்லை. அவர்கள் சாகாவரம் பெற்றவர்கள். அவர்களைப் போலவே கவியரசர் கண்ணதாசனும் அமரத்துவம் பெற்றவர். கன்னித் தமிழ் இருக்கும் வரை கண்ணதாசனின் பெயரும் நிலைத்திருக்கும். தண்டமிழ்ச் சோலையில் கண்ணதாசக் குயிலின் பாடல்கள் என்றும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். மறத் தமிழரை மகிழ்வித்துக் கொண்டேயிருக்கும்.

மனிதநேய மிக்க அந்த மாபெரும் கவிஞரை நினைக்கும்தோறும் என்னெஞ்சம் நெக்குருகிறது. மாணவனாக நான் இருந்தபொழுது என்னை எழுத்தாளனாக நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் கவியரசர். அவரைப் பின் தொடர்ந்து அரசியலிலும் அடியெடுத்து வைத்தேன். அரசியல் களங்களில் அவரும் நானும் தோளோடு தோள் நின்று ஒன்றாகப் போராடியிருக்கிறோம். பல்வேறு கட்டங்களில் எனக்குக் காவலராக, கவசமாக நின்று காத்தவர் அவர். அரசியலில் நான் உயர வேண்டும் என உளமாற விரும்பி அதற்காக அரும்பாடு பட்டவர்.

தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அவரது நட்பை பொன்னேபோல போற்றிப் பாதுகாத்தேன். அரசியலில் இருவேறு முகாம்களில் நாங்கள் பிரிந்து நிற்க நேர்ந்த காலத்திலும் எங்கள் உறவு பாதிக்கப்பட்டதே இல்லை. மேலும் மேலும் வளர்ந்து வலுவடைந்ததே தவிர நலிவடைந்ததில்லை. அதனால்தான் மீண்டும் நாங்கள் இணைந்து பணியாற்ற முடிந்தது.

அந்த மாபெரும் கவிஞனின் குழந்தையுள்ளத்தில் எனக்குமொரு சிறு இடம் நிரந்தரமாகக் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறது அவர் நினைவு.

(கவிஞர் கண்ணதாசன் பற்றி அவருடைய நெருங்கிய நண்பரும் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவருமான பழ. நெடுமாறன் எழுதியுள்ள 'கவியரசர் என் காவலர்' என்ற நூலில் இடம் பெற்றுள்ள அவருடைய காணிக்கையுரையிலிருந்து...)

summary

From the dedication in the book 'Kaviyarasar En Kaavalar' [The Poet-King, My Guardian], written about the poet Kannadasan by his close friend Pazha. Nedumaran, President of the World Tamil Federation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.