FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மகாகவியும், கவியரசும்! கண்ணதாசன் நூற்றாண்டுத் தொடர் - 20

மகாகவி பாரதிக்கும் கவியரசு கண்ணதாசனுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியும், பண்டைய புலவர்களின் பாடல்களை எளிமையாக கண்ணதாசன் பிரதிபலித்தது பற்றியும்...

3 நவம்பர் 2026, 7:50 pm
கண்ணதாசன் - ஏஐ
பகிர்:

மகாகவி பாரதிக்கும், கவியரசு கண்ணதாசனுக்கு இடையில் ஏதாவது தொடர்பிருக்க முடியுமா? முடியும். ஏன் முடியாது?

சிறந்த மனிதர்கள் ஒரேமாதிரியாக சிந்திப்பார்கள் என்பதைப்போல கவிதையுலகில் பாரதிக்கும், கண்ணதாசனுக்கும் சிலபல தொடர்புகள் இருக்கத்தான் செய்யும். இல்லையா?

1917ஆம் ஆண்டு மகத்தான ரஷியப் புரட்சி நடந்தபோது, ’ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி, கொடுங்காலன் அலறி விழுந்தான்’ என்று அதை பாட்டாகப் பதிவு செய்தார் பாரதியார். அது அவரது காலம். அதேநேரம் ரஷியா, சோவியத் ஒன்றியமாக மாறி முதன்முதலாக அந்த நாடு மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய நேரம், அதை பச்சை விளக்கு என்ற படத்தில் பாடலாகப் பதிவு செய்தார் கவியரசர்.

Advertisement

Advertisement

‘கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதில் கிடைத்தது இன்று’ என்று தொடங்கும் அந்தப் பாடலில் ‘வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா? மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா? என்றொரு காலம் ஏங்கியதுண்டு இன்று கிடைத்தது பதில் ஒன்று, ஞானம் பிறந்து வானில் பறந்து மீண்டு வந்தான் உயிர்கொண்டு’ என எழுதினார் கவியரசர்.

‘மண்ணில் தெரியுது வானம், அது நம் வசப்படலாகாதோ?’ என்றார் மகாகவி. ரகசிய போலீஸ் 115 என்ற திரைப்படத்தில், ‘கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ துள்ளி திரிகிற மேகம் தொட்டு தழுவாதோ,’ என்று பாடல் எழுதினார் கவியரசர்.

‘நோய் இல்லை என்று உறுதி செய்து கொள். மனம் போல் உடல்’ என்றார் மகாகவி. பழனி என்ற திரைப்படத்தில் ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ என்ற பாடலில், ‘மனித ஜாதியின் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா’ என எழுதினார் கவியரசர்.

இப்படி மகாகவிக்கும், கவியரசுக்கும் இடையில் மகத்தான சில தொடர்புகள் இருக்கின்றன.

*

இரங்கல் பாக்கள், நீத்தாரை நினைவு கொள்ள வைக்கும் கையறு நிலை பாடல்கள் தமிழில் ஏராளம்.

புறநானூறு 242 ஆவது பாடல் குடவாயிற் கீரத்தனார் எழுதியது. வல்வேல் சாத்தன் என்பவரின் மறைவைக் குறிக்கும் பாடல் அது.

வல்வேல் சாத்தன் இறந்துவிட்டபிறகு ஒல்லையூர் நாட்டு முல்லைப்பூவே, நீ ஏன் பூத்தாய்? உன்னை யாரும் சூடிக் கொள்ளப் போவதில்லையே’ என்ற அர்த்தத்தில் அந்த பாடலை எழுதியிருப்பார் கீரத்தனார்.

ரோஜாவின் ராஜா பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் மறைந்துபோது இதேப்போன்ற ஓர் இரங்கல் கவிதையை எழுதினார் கண்ணதாசன். ‘ரோஜா மலரே நீ ஏன் மலர்ந்தாய்? எங்கள் ராஜா இல்லையே? மார்பினில் சூட’ என்ற வரி அந்த இரங்கல் கவிதையில் இடம்பிடித்தது. இது கிட்டத்தட்ட குடவாயிற் கீரத்தனார் எழுதிய இரங்கற்பாவுக்கு நிகரான பாடல்.

அது மட்டுமா? ‘போதிமர புத்தன் போய்விட்டான் என்றிருந்தோம். பாதிவழி போன அவன் பண்டிதராய் திரும்ப வந்தான்’. ’சீரிய நெற்றி எங்கே? சிவந்தநல் இதழ்கள் எங்கே? கூரிய விழிகள் எங்கே? குறுநகை போனதெங்கே?’ என்றும் பண்டித நேருவுக்கு இரங்கல் கவிதை வரிகளைப் படைத்தார் கண்ணதாசன்.

*

கண்ணே பாப்பா என்று ஒரு திரைப்படம். 1969 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அது. அந்தப் படத்தில் கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாட்டத்தைக் குறித்து ஒரு பாடல் வரும்.

‘சத்திய முத்திரை கட்டளையிட்டது நாயகன் ஏசுவின் வேதம்’ என்று அந்த பாடல் தொடங்கும். அதில், ‘மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில், மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்’ என்பது ஒருவரி. ‘மேரி மாதா தேவ மகனை காப்பது எப்படியோ? தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே’ என்பது இன்னொரு வரி.

‘வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம், வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளிபொங்கும், தேவ வாழ்வு ராஜ அமைதி தோன்றும் சிலுவையிலே நாளை அந்த தேவன் கருணை இன்றே கைகளிலே என்பது மற்றொரு வரி.

‘அவன் ஆலயம் என்பது நம்வீடு, மணியோசையைக் கேட்பது பண்பாடு’, ‘அவன் பாதங்கள் கண்டால் அன்போடு, ஒரு பாவமும் நம்மை அணுகாது’ என்பதெல்லாம் இதர வரிகள்.

கிறிஸ்துவ மதத்தின் சாரத்தை இப்படி மிகச்சுருக்கமாக, தெளிவாக ஒரு திரைப்படப்பாடலில் வடித்திருப்பார் கண்ணதாசன். ஒரு கிறிஸ்துவரே எழுதியிருந்தால் கூட இவ்வளவு தெளிவாக அழகாக எழுதியிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

ஆம். அர்த்தமுள்ள இந்துமதம் படைத்த கவியரசர், இயேசு காவியத்தையும் எழுதியவர் அல்லவா? ஆகவே அவரது வரிகள் அப்படித்தான் இருக்கும்.

*

தமிழில் காய்கறிகளின் பெயர் கொண்ட சில பாடல்கள் உள்ளன. அதில், ‘வெள்ளரிக்காயா விரும்புவரைக்காயா, உள்ளமிளகாயா, ஒருபேச்சுரைக்காயா’ என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டுப் பாடலின் வரி. அந்த வரியில், வெள்ளரிக்காய், அவரைக்காய், மிளகாய், சுரைக்காய் எல்லாம் இடம்பெற்றிருக்கும். ஆனால், அந்தப் பாடலின் உள்ளர்த்தம் வேறுமாதிரியானது.

‘உள்ளமிளகாயா’ என்பது ‘உன் உள்ளம் இளகாதா?’ என்று அர்த்தப்படும். ‘ஒரு பேச்சுரைக்காயா?’ என்பதில், ‘ஒரு வார்த்தை நீ கூற மாட்டாயா? என்ற அர்த்தம் தொனிக்கும்.

இதேப்போல காளமேகப் புலவர் பாடிய ஒரு காய்கறி சமையல் பாடல் உண்டு.

‘கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காய் தீத்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்- உருக்கமுள்ள

அப்பைக்காய் நெய்துவட்ட லாக்கினாள் அத்தை மகள்

உப்புக்காண் சீச்சீ உமி’

எல்லாமே தெரியாத காய்கறி பெயர்களாக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள்.

கரிக்காய்-அத்திக்காய், கன்னிக்காய்-வாழைக்காய், பரிக்காய்-மாங்காய், அப்பைக்காய்-கத்தரிக்காய்.

இந்த காய்களின் பெயர்களை மனதில் கொண்டு கவியரசர் கண்ணதாசன் ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் அழகிய பாடல் ஒன்றை எழுதினார். ‘அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே’ என அந்தப் பாடல் தொடங்கும். ‘காய், காய்’ என முடியும் அந்தப் பாடலின் ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு வகை அர்த்தம் மிளிரும்.

அந்தப் பாடலில் மட்டும், அத்திக்காய், ஆலங்காய், பாவைக்காய், அவரைக்காய், கோவைக்காய், மாதுளங்காய், ஏலக்காய், வாழைக்காய், சாதிக்காய், விளங்காய், தூதுவளங்காய், மிளகாய், சுரைக்காய், கொத்தவரங்காய் எல்லாம் வந்துவிடும். இப்படி வந்த காய்களில் ஏலக்காய் தவிர மற்ற அனைத்து காய்களுக்கும் கவியரரிசன் கைவண்ணத்தில் தனியானதொரு அர்த்தமும் வந்துவிடுவது அழகு.

கவியரசர் என்றால் சும்மாவா?

summary

The Great Poet and the Poet Laureate Kavignar Kannadasan Centenary Series - 20

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.