FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

ஏமாற்றமாகிறதா மாற்றம்?

ஜென் ஸீ இளைஞர்கள் போராட்டமும், ஆட்சி மாற்றமும் நேபாளத்தில் அமைதியை ஏற்படுத்தவில்லை.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 6:15 am IST
பாலேந்திர ஷா - கோப்புப் படம்
பகிர்:

நேபாளத்தில் பிரதமர் பாலன் என்கிற பாலேந்திர ஷா தலைமையிலான ஆட்சி நூறு நாள்களைக் கடந்து விட்டது. முந்தைய கே.பி. சர்மா ஓலி ஆட்சிக்கு எதிராக நடந்த இளைஞர்கள் போராட்டத்தின் விளைவாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது உயர்ந்த நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக அகன்று, ஆங்காங்கே அதிருப்தி அலை பரவி வருவது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

கடந்த ஜூலை 26 முதல் நேபாளத்தின் பல பகுதிகளில் வகுப்புக் கலவரங்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி இருக்கின்றன. சுன்சாரியில், ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு, வன்முறையிலும் கலவரத்திலும் முடிந்தது. துப்பாக்கிச் சூடு நடத்தித்தான் அந்தக் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. அடுத்த ஒரு வாரத்தில் நேபாளம் முழுவதும் வகுப்புக் கலவரம் பரவத் தொடங்கி, இந்தியாவை ஒட்டிய மாதேசிகள் வசிக்கும் பகுதிவரை எட்டியது.

பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கலவரங்களைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை வரவழைக்க வேண்டிய கட்டாயம் சில இடங்களில் ஏற்பட்டிருக்கிறது. நிலைமையை இடைக்காலமாகக் கட்டுக்குள் கொண்டுவருவதுடன் சுன்சாரியில் எழுந்த வகுப்புக் கலவரப் பிரச்னை முடிந்து விடாது.

Advertisement

Advertisement

முந்தைய கே.பி. சர்மா ஓலி அரசுக்கு எதிராகக் காணப்பட்ட அதிருப்தி அலையில் ஊழல் இல்லாத அரசு, திறமையான நிர்வாகம், விரைவான சீர்திருத்தம் மூன்றையும் முன்வைத்து பாலேந்திர ஷா ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால், முதல் நூறு நாள்களில் நூறு வாக்குறுதிகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

முன்னாள் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சராக இருந்தவருமான ராபி லாமிச்சானேயின் கட்டுப்பாட்டில் இருக்கிறது ஆளும் ராஷ்ட்ரீய சுதந்திரா கட்சி. அவர் மீது பல நீதிமன்ற வழக்குகள் இருப்பதால் அமைச்சரவையில் இணைய முடியவில்லையே தவிர பெரும்பாலான அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரது விசுவாசிகளாகத் தொடர்கின்றனர்.

கட்சியிலும், நாடாளுமன்றத்திலும் ராபி லாமிச்சானேவுக்குப் பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும், ராப் பாடகரான பாலேந்திர ஷாவின் இளைஞர்கள் மத்தியிலான செல்வாக்கு தேர்தல் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்பதில் சந்தேகமில்லை. ராபி, பாலன் என்கிற இரண்டு இளைஞர்களுக்கு இடையேயான கருத்து வேற்றுமையுடன்தான் ஆட்சி தொடர்கிறது. அதனால் ஏற்படும் உள்கட்சி மோதல்கள், ராஷ்ட்ரீய சுதந்திரா கட்சியின் செல்வாக்கை கணிசமாகப் பாதித்திருக்கிறது.

தனது பதவியையும், அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள அதிபர் பாலேந்திர ஷா கட்சித் தலைவர் ராபி லாமிச்சானேவை அடிக்கடி சந்தித்து கலந்தாலோசிக்காமல் இல்லை. அவர்களது மனைவியரான சபீனா பாலேந்திர ஷாவும், நிகிதா ராபியும் நெருங்கிய தோழிகளாக இருப்பது, கருத்து மோதலை சமரசம் செய்து கொள்ள வசதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆட்சி அதிகாரத்தை பாலேந்திர ஷா கைப்பற்றினாலும்கூட, கட்சியில் ராபியின் செல்வாக்குத்தான் கொடிகட்டிப் பறக்கிறது. கடந்த ஜூன் மாதம் சித்வான் நகரில் நடைபெற்ற கட்சி மாநாடு அதற்கு எடுத்துக்காட்டு. உள்நாட்டுப் பிரச்னைகளைக் கையாள்வதற்காக, வெளிநாடு செல்வதை பிரதமர் பாலேந்திர ஷா ஒத்திப்போட்டது, அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. ராபி லாமிச்சானேவுக்கு தில்லியில் சிவப்புக் கம்பளம் விரிக்காத குறையாகத் தரப்பட்ட வரவேற்பும், விரைவில் அவர் சீனாவுக்கு அழைக்கப்பட்டிருப்பதும் அவர் மீது கவனக் குவிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்துக்கு நியூயார்க் செல்வதற்கு முன்பு தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேபாள பிரதமர் பாலேந்திர ஷா சந்திப்பது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. "பிரிக்ஸ்' மாநாட்டுக்கு அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். ஆட்சிப் பொறுப்பேற்று நூறு நாள்களாகியும் பாலேந்திர ஷா தில்லிக்கும், பெய்ஜிங்குக்கும் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளாதது விவாதப் பொருளாகி இருப்பதில் வியப்பில்லை.

நவீன நேபாளத்தை கட்டமைக்க அரசர் பிருத்வி நாராயண் ஷா, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமநோக்கு உறவாடு முறைமையை (பாலன்ஸ்ட் டிப்ளோமேடிக் ரிலேஷன்ஸ்) கையாளும் ராஜதந்திர உத்தியை உருவாக்கினார். கடந்த 250 ஆண்டுகளாக அது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், புவியியல் ரீதியாகவும், மத ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் நேபாளம் எப்போதுமே சீனாவைவிட இந்தியாவை கூடுதலாகச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க முடியாது.

இப்போது இந்தியாவும், சீனாவும் மட்டுமல்லாமல் மூன்றாவதாக நேபாள அரசியலில் அமெரிக்காவும் மூக்கை நுழைத்திருக்கிறது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இளைஞர்களைத் திரட்டி, சீனாவுக்கு சாதகமாக இருந்த கே.பி. சர்மா ஓலி அரசுக்கு எதிரான போராட்டத்தைக் கட்டமைத்ததில் அமெரிக்காவின் பங்கு இருப்பதாகத் தெரிகிறது.

"ஜென் ஸீ' இளைஞர்கள் போராட்டமும், ஆட்சி மாற்றமும் நேபாளத்தில் அமைதியை ஏற்படுத்தவில்லை. மாறாக மதக் கலவரங்கள், பதவிப் போட்டி உள்ளிட்ட நிலையற்ற தன்மையை உருவாக்கி இருப்பதைத்தான் பாலேந்திர ஷாவின் 100 நாள் ஆட்சி உணர்த்துகிறது.

எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாம் கேடு.

எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.

திருக்குறள் (எண் 889) அதிகாரம்: உட்பகை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments