FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

தற்சார்பு மட்டுமே தீர்வல்ல!

தேசிய முதலீட்டுக் கொள்கை - 2026 குறித்த தலையங்கம்....

Updated On : 21 ஜூலை 2026, 6:00 am IST
யூரியா - கோப்புப் படம்
பகிர்:

மத்திய அரசு அண்மையில் அறிவித்திருக்கும் தேசிய முதலீட்டுக் கொள்கை - 2026, ஒரு கோடி டன் கூடுதல் யூரியா உற்பத்தியை இலக்காக்கி இருக்கிறது. இதன்மூலம் கூடுதலாகப் பத்து மில்லியன் டன் (ஒரு கோடி டன்) யூரியா உற்பத்தி செய்ய புதிய தொழிற்சாலைகள் நிறுவ வழிகோலப்பட்டிருக்கிறது. அதன்மூலம் யூரியா உற்பத்தியில் தன்னிறைவு அடைய முடியும் என்பது அரசின் எதிர்பார்ப்பு.

இப்போதைய யூரியா தேவை சுமார் 40 மில்லியன் டன். அதில் 30 மில்லியன் டன் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் புதிதாக 6 யூரியா தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதால், இந்தியாவின் இறக்குமதிச் சார்புத்தன்மை கணிசமாக குறைகிறது என்றாலும்கூட, நமது தேவைக்கான யூரியாவை முழுமையாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நிலையை நாம் அடையவில்லை.

ஆண்டுதோறும் யூரியாவுக்கான தேவை சுமார் 5% அளவில் அதிகரித்து வருகிறது. அதையும் கருத்தில் கொண்டு, புதிய யூரியா தொழிற்சாலைகளை அமைத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. புதிதாக அமைக்கப்படும் யூரியா தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கினால், ஒவ்வொரு தொழிற்சாலையும் சுமார் ரூ.250 கோடியை அரசுக்கு மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்தியாவில் தற்போது 26.94 மில்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்ட 33 யூரியா தொழிற்சாலைகள் இருக்கின்றன. முன்பே கூறியிருந்ததுபோல, அவற்றில் 6 தொழிற்சாலைகள் கடந்த பத்தாண்டுகளில் நிறுவப்பட்டன. புதிய ஆலையை நிறுவி யூரியா உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் உரத் தட்டுப்பாடுகளைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், அண்மையில் ஏற்பட்ட ஹோர்முஸ் நீரிணைப் பிரச்னை போன்று கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும்கூட விவசாயம் தடைபடாமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.

அளவுக்கு அதிகமாக யூரியாவின் தேவை அதிகரித்து வருகிறது. 2023-24 இல் 4.4 மில்லியன் டன்னாக இருந்த யூரியா பற்றாக்குறை, 2025-26 இல் 10 மில்லியன் டன்னாக அதிகரித்திருக்கிறது. இதனால், 2024-25 இல் 5.6 மில்லியன் டன்னாக இருந்த நமது யூரியா இறக்குமதி, 2025-26 இல் 10 மில்லியன் டன்னாக 80% அதிகரித்தது.

எழுபதுகளில் அன்றைய இந்திரா காந்தி அரசு பசுமைப் புரட்சியின் மூலம் முன்னெடுத்த முனைப்புக் காரணமாக இந்தியா உணவு உற்பத்தியில் கணிசமாக முன்னேற்றம் அடைந்தது. அதற்குப் பின்னால் அமைந்த அரசுகளின் முயற்சியால் இப்போது ஓரளவுக்கு தன்னிறைவு பெற்றது மட்டுமல்ல, அரிசி ஏற்றுமதியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். அதேநேரத்தில், ரசாயன உரங்கள் சார்ந்த உற்பத்தியாக மாறி இருப்பதால், கணிசமான அளவு உரங்கள் அவசியமாகிறது. உலகிலேயே ரசாயன உர பயன்பாட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம்.

1960-61-இல் வெறும் 0.295 மில்லியன் டன் ரசாயன உரம் மட்டுமே பயன்படுத்தி வந்ததுபோய், 2024-25 நிலவரப்படி, நமது மொத்த ரசாயன உரத் தேவை 32.93 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 1.92 கிலோ இருந்த இடத்தில் இப்போது நமது விவசாயிகள் சராசரியாக 150.11 கிலோ ரசாயன உரம் (78 மடங்கு அதிகரிப்பு) பயன்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ரசாயன உரங்கள் என்பதில் நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ் ஆகிய மூன்றும் பெரும் பங்கு வகிக்கின்றன. அதில் குறிப்பாக பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜன் 80% யூரியா மூலம்தான் பெறப்படுகிறது. நைட்ரஜன்: பாஸ்பேட்: பொட்டாஷ் மூன்றும் 4:2:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் பரிந்துரைக்கப்பட்ட உரப் பயன்பாடு. ஆனால், இந்தியாவில் அது 9.8:3:1 என்ற விகிதத்தில் நமது விவசாயிகளால் கையாளப்படுகிறது.

இதனால் விளைநிலம் மலட்டுத்தன்மை அடைகிறது என்பதும், சாகுபடிக்கு சாகுபடி ரசாயன உரத்தின் அளவை அதிகரிப்பதன் மூலம்தான் மகசூல் குறையாமல் இருக்கும் கட்டாய சூழ்நிலை ஏற்படும் என்பதை விவசாயிகளுக்குப் புரிய வைக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன. அதற்கு முக்கியமான காரணம் நமது உர மானியக் கொள்கை என்றுதான் கூற வேண்டும்.

பாஸ்பேட், பொட்டாஷியம் உரங்கள் அவற்றின் பங்கு அடிப்படையில் மானியம் பெறும்போது யூரியாவுக்கு மட்டும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மானியமாக வழங்கப்படுகிறது.

இப்போது 45 கிலோ யூரியா சுமார் ரூ.242-க்கு விவசாயிக்கு வழங்கப்படும்போது, அதற்கான அரசின் மானிய இழப்பு ரூ.2,200 முதல் ரூ.4,000. உள்நாட்டு உற்பத்தி மூலமா?, இல்லை இறக்குமதியா? என்பதைப் பொருத்து இது அமைகிறது.

யூரியாவுக்கான மானியம் நிகழ் நிதியாண்டில் ரூ.1.71 ட்ரில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டில் புதிய யூரியா தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தியை அதிகரிப்பது, நமது யூரியா இறக்குமதியைக் குறைத்து, அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதுவே பிரச்னைக்குத் தீர்வாகிவிடாது.

விவசாயிகளின் அதிகரித்த யூரியா பயன்பாட்டைக் குறைத்தாக (தடுத்தாக) வேண்டும். அவர்களுக்கு நாம் இறக்குமதி செய்து மானிய விலையில் வழங்கும் யூரியா அண்டை நாடுகளுக்குக் கடத்தப்படுகிறது என்கிற கசப்பான உண்மையை இங்கே வருத்தத்துடன் பதிவு செய்யத் தோன்றுகிறது.

அரசியல் ரீதியாக தர்மசங்கடமான முடிவுதான் என்றாலும், விவசாயிகளின் யூரியா பயன்பாடுகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதைத் தள்ளிப் போடக் கூடாது!

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து

உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்ய வேண்டும்.

திருக்குறள் (எண் 948) அதிகாரம்: மருந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments