FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

அவசரப்படக் கூடாது!

மேற்காசியப் போர் கச்சா எண்ணெய்க்கு மாற்று எரிசக்தியை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியாவைத் தள்ளியிருக்கிறது.

Updated On : 30 ஜூலை 2026, 6:00 am IST
கச்சா எண்ணெய் - கோப்புப் படம்
பகிர்:

மேற்காசியப் போர் கச்சா எண்ணெய்க்கு மாற்று எரிசக்தியை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியாவைத் தள்ளியிருக்கிறது. மின் வாகனங்கள் ஒருபுறம் ஊக்குவிக்கப்பட்டாலும் ஏற்கெனவே பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் புதை படிம எரிசக்தியைக் குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

வாகனங்களின் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைப்பதற்கு வளர்ச்சியடைந்த பல நாடுகள் எத்தனால் கலப்பை முன்னெடுத்திருக்கின்றன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. அதற்கு வரவேற்பைப் போலவே, விமர்சனங்களும் எழுகின்றன என்பதுதான் நாடு தழுவிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.

"எத்தனால் பெட்ரோல் கார்களின் இயந்திரங்களைப் பாதிக்கிறது என்பதுடன் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பயணிக்கும் தொலைவும் குறைகிறது; இதனால் செலவு அதிகரிக்கிறது' என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கும்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்கிற அபாயக் குரலும் எழுப்பப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்தியாவில் எத்தனால் தயாரிக்க வளர்ந்த நாடுகளைப் போல வேளாண் பயிர் மற்றும் மரக் கழிவுகளைப் பயன்படுத்தாமல் முதன்மையான பயிர்களான நெல், கரும்பு, சோளம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கத் தொடங்கியதிலிருந்து நெல், கரும்பு, மக்காசோள உற்பத்தி அதிகரித்து வருகிறது; இங்கேதான் சிக்கல் எழுகிறது.

நாட்டில் ஆண்டுக்கு சுமார் 15 கோடி டன் நெல்லும், 4.30 கோடி டன் மக்காச் சோளமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் எத்தனால் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு கடந்த 2024-25-இல் 31.11 லட்சம் டன்னாக இருந்த அரிசி ஒதுக்கீடு 2025-26 ஜூன் இறுதி வரையில் 39.28 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதேபோல், கடந்த 2024-25இல் 1.31 கோடி டன்னாக இருந்த மக்காச்சோள ஒதுக்கீடு கடந்த 2025-26-இல் 67.87 லட்சம் டன்னாக குறைந்துள்ளது என்றாலும், பிரதான உணவுப் பொருளான அரிசி ஒதுக்கீடு உயர்ந்துள்ளது.

எத்தனால் கலப்பைக் குறைக்கும் திட்டமில்லை என்றும், அதேநேரத்தில் பெட்ரோலில் 20 சதவீதத்துக்கும் அதிகமாக எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி மாநிலங்களவையில் அண்மையில் அறிவித்துள்ளார். எத்தனால் கலப்பைக் குறைக்கும் திட்டம் இல்லை என்று அமைச்சர் உறுதிபடக் கூறிவிட்டதால் அதன் உற்பத்தி அதிகரிப்புக்கு ஏற்ப உணவு தானியங்களின் ஒதுக்கீடும் இனிவரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு. எத்தனால் தயாரிப்புக்கு உணவு தானியங்களை மடைமாற்றம் செய்வதால் பொதுவிநியோகத்தில் எவ்விதப் பிரச்னையும் வராது என அமைச்சர் கூறினாலும், தற்போது அரிசியின் விலை உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலில் 67 சதவீதம், அரிசி மற்றும் மக்காச்சோளத்திலிருந்து பெறப்படுகிறது; எஞ்சிய 33 சதவீதம் கரும்புச்சாறு மற்றும் அதன் அடர் கழிவுப்பாகான மொலாசஸ்ஸிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. எத்தனால் உற்பத்திக்கு இந்த அளவுக்கு உணவுப் பொருள்களை மடைமாற்றம் செய்வது எதிர்காலத்தில் மக்களுக்கான உணவு விநியோகத்தைப் பாதிக்காதா என்ற கேள்வி எழுகிறது.

நாட்டில் உள்ள நீர்வளத்தில் சுமார் 85 சதவீதம் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது. நெல், கரும்புக்கு அதிகமான தண்ணீர் தேவை. ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு பயிரிடப்படும் நிலத்தைப் பொருத்து சுமார் 3,000 முதல் 5,000 லிட்டர் தண்ணீர் தேவை. ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 2.5 முதல் 3 கிலோ அரிசி தேவை. எனவே, ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க சராசரியாக சுமார் 11,250 லிட்டர் தண்ணீர் தேவை. கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு லிட்டர் எத்தனாலுக்கு 3,630 லிட்டர் தண்ணீரும், மக்காச்சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு லிட்டர் எத்தனாலுக்கு 4,670 லிட்டர் தண்ணீரும் தேவை.

எத்தனால் உற்பத்திக்கு உறுதியான சந்தை வாய்ப்பு இருப்பதாலும், அதன் தேவை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாலும் அது சர்க்கரை ஆலைகளுக்கும், உணவு தானிய வியாபாரிகளுக்கும் ஊக்கத்தை ஏற்படுத்தும். அதன் எதிரொலியாக அவற்றின் சாகுபடியை அதிகரிக்க விவசாயிகள் முயற்சிக்கும்போது அது தண்ணீர் தேவை அதிகரிப்பில்தான் முடியும்.

பசிபிக் பெருங்கடலின் மேல் பகுதியில் அதிகரிக்கும் வெப்பத்தால் உருவாகும் எல் நினோ பாதிப்பு நிகழாண்டு இந்தியாவில் தென்மேற்குப் பருவமழைப் பொழிவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டில் என்னதான் தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் வேளாண்மையின் பங்கு அதிகம். பருவமழை குறைந்தால் அதன் தாக்கம் வேளாண்மையில் மட்டுமல்லாது, அதைச் சுற்றிச் சுழலும் தொழில்துறையையும் பாதிக்கும்.

நிகழாண்டு தென் மேற்குப் பருவமழை பற்றாக்குறையால் நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. எனவே, நிலத்தடி நீர் பயன்பாடு இப்போதுள்ளதைவிட மேலும் அதிகரிக்கும். இது எதிர்காலத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை அதலபாதாளத்துக்கு கொண்டு சென்றுவிடும்.

நாட்டின் நீர்வளத்தையும், அதன் எதிர்காலத் தேவையையும் கருத்தில் கொண்டு முறையான திட்டமிடலுடன் செயலாற்ற வேண்டியது அவசியம். எத்தனால் முனைப்பு நாட்டின் நீர்வளத்தைப் பாதித்து உணவுப் பொருள் உற்பத்தி அளவைக் குறைக்குமானால், அது கண்ணை விற்று சித்திரம் வாங்கும் பேதைமை!

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளா

தவனுடைய வாழ்க்கை நெருப்பின்முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

திருக்குறள் (எண் 435) அதிகாரம்: குற்றம் கடிதல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments