பேரிடரும் ஆறுதலும்...
காவிரி நீருக்காக தமிழ்நாடும், கர்நாடகமும் மாறிமாறி நீதிமன்றங்களை அணுகி வருகின்றனவே தவிர கருகி வரும் பயிர்களுக்கும், வாடி நிற்கும் விவசாயிகளுக்கும் பதில் இல்லை.

இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் எல்-நினோவின் தாக்கம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் கடுமையாக இருக்கும் என்றும், ஏப்ரல் முதல் ஜூனுக்குள் இயல்புநிலை திரும்பலாம் என்றும் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. எனினும், முதல்கட்டமாக, அண்மையில் நிறைவடைந்த காரீப் பருவத்தில் எல்-நினோ ஏற்படுத்திய தாக்கம் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் சில நல்ல தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
ஆய்வுகள் இன்னும் முடிவடையவில்லை என்றாலும், இதுவரையில் கிடைத்துள்ள முடிவுகளின்படி எல்-நினோவால் தென் மாநிலங்களான கர்நாடகம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகியவற்றில் வேளாண் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் வேளாண் பயிர்களின் விளைச்சல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கண்டறிந்துள்ளது. எல்-நினோ தாக்கம் என்பது நாடு தழுவிய ஒன்றாக இல்லாமல் சில மண்டலங்களில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.
கர்நாடகத்தில் பட்டாணி, துவரை, கேப்பை (ராகி), எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில மண்டலங்களில் நெல் பயிரிடும் பரப்பளவும் குறைந்துள்ளது. மொத்த வேளாண் பயிர்களின் சேத மதிப்பு சுமார் ரூ. 18,000 கோடியை எட்டும் என அந்த மாநில அரசு முதல் கட்டமாக மதிப்பீடு செய்துள்ளது.
Advertisement
Advertisement
தெலங்கானாவில் 31 மாவட்டங்களில் உள்ள 365 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன; நெல் சாகுபடி பரப்பளவு 18 சதவீதம் குறைந்துள்ளது; பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது; ஒட்டுமொத்த இழப்பு சுமார் ரூ. 20,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு காவிரி வடிநிலப் பகுதியின் மூலாதாரமான மேட்டூர் அணை வழக்கமான ஜூன் 12-இல் திறக்கப்படவில்லை. மாறாக, செப்டம்பர் 1-இல் திறக்கப்பட்டு அக்டோபர் 23-இல் மூடப்பட்டு விட்டது. குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதுடன், தற்போது சுமார் 7 லட்சம் ஏக்கரில் சம்பாவும், தாளடி பயிர்களும் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன.
டெல்டாவை வறட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். காவிரி நீருக்காக தமிழ்நாடும், கர்நாடகமும் மாறிமாறி நீதிமன்றங்களை அணுகி வருகின்றனவே தவிர கருகி வரும் பயிர்களுக்கும், வாடி நிற்கும் விவசாயிகளுக்கும் பதில் இல்லை.
மாநிலம் முழுவதும் சுமார் 23,000 ஹெக்டேரில் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசின் முதல்கட்ட கணக்கீடு தெரிவிக்கிறது. இதில் சுமார் 8,700 ஹெக்டேரில் எண்ணெய் வித்து பயிர்களும், 5,970 ஹெக்டேரில் சிறு தானியங்களும், 5,463 ஹெக்டேரில் நெல் பயிரும், 2,245 ஹெக்டேரில் பருப்பு வகை பயிர்களும், 753 ஹெக்டேரில் கரும்பும், 161 ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர்களும், 17 ஹெக்டேரில் பருத்தியும் அடங்கும். மொத்த இழப்பை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அதேவேளையில் பஞ்சாபிலும், அண்டை மாநிலமான ஹரியாணாவிலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நெல் உள்ளிட்ட சில பயிர்களின் விளைச்சல் சற்று அதிகரித்துள்ளது. அவற்றை முழுமையாகக் கணக்கிடும் பணியில் வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஈடுபட்டுள்ளது. இந்த மாநிலங்களில் மழை குறைவு என்றாலும் நிலத்தடி நீரைக் கொண்டு வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாதிப்பு ஏற்படவில்லை.
இதற்கு முந்தைய எல்-நினோ காலத்திலும் (1982 முதல் 2023 வரையில் இடையிடையே 6 ஆண்டுகள்) இதுதான் நிலைமை. தொடர்ந்து நிலத்தடி நீரை பெருமளவில் உறிஞ்சுவது பிற்காலத்தில் ஈடுகட்ட முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனினும், ஆபத்துக்கு பாவமில்லை என்று நிலத்தடி நீர் மூலம் நல்ல மகசூலை அடைந்துள்ளனர்.
நாட்டில் முன்னேறி வரும் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே கணிக்கும் நவீன அமைப்புகள், விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, அதனால் பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னரே தயாராகி கொள்ளுதல், மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு போன்றவையே உலகின் மற்ற நாடுகளைவிட இந்தியா காலநிலை மாற்றம் மற்றும் எல்-நினோ தாக்கத்தை தாங்கும் சக்தியை பெற்றுள்ளதாக எடுத்துக் கொள்ளலாம். கடந்த சவாலான காலங்களைப்போல அல்லாமல் தற்போது ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் தற்போது காலநிலை மாற்றத்தை தாங்கும் சுமார் 3,000 பயிர் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. மேலும், வறட்சியை தாங்கும் பாரம்பரிய நெல் ரகங்களை மீண்டும் விவசாயிகளிடம் அறிமுகம் செய்து அவற்றைப் பரவலாக்க வேண்டும். அதற்காக தேசிய பாரம்பரிய நெல் இயக்கத்தைத் தொடங்குவதுடன் அடுத்த நிதியாண்டின் வரவு-செலவு திட்டத்தில் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என அண்மையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை முன்னோட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சரிடம் வேளாண் துறை நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளதை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.
எல்-நினோ பாதிப்பு, மழை பற்றாக்குறை, வறட்சி, இடுபொருள்கள் விலை உயர்வு என பலமுனை தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் இந்திய வேளாண் துறையானது அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு படிப்படியாக தாங்கும் சக்தியை அடைந்து வருவது நம்பிக்கை அளிக்கிறது. இந்த அனுபவம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கூடுதல் சவால்களையும் சமாளித்து வேளாண் தொழிலில் நாடு நீடித்து நிலைத்து நிற்க உதவும் என நம்பலாம்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்கவல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
திருக்குறள் (எண் 15) அதிகாரம்: வான் சிறப்பு