FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒர்னாப் புயலில் எண்ணெய் ஊற்றியதா எல் நினோ? இத்தனை வேகம் ஏன்?

எரிந்து கொண்டிருந்த ஒர்னாப் புயலில் எண்ணெய் ஊற்றுவது போல எல் நினோ தாக்கம் பற்றி..

எல்-நினோ நிகழ்வின் தாக்கம் குறித்து... - பிரதிப் படம்
பகிர்:

வங்கக் கடலில் உருவான ‘ஒர்னாப்’ புயல், ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கரையைக் கடக்கத் தொடங்கி அதிகாலையில் கரையைக் கடந்தது. இதனால் ஆந்திர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டில் பசிபிக் பெருங்கடலில் கடல் நீர் அசாதாரணமான வெப்ப நிலையை எட்டும் 'எல் நினோ' நிகழ்வு தீவிரமடைந்திருந்த நிலையில், வங்கக் கடலில் உருவான ஒர்னாப் புயல், வழக்கமான புயல்களைப் போல் அல்லாமல் முன் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி, அதன் போக்கில் போக்குக் காட்டியது.

இதுவரை, மழை, வெய்யிலில் மட்டும்தான் தன்னுடைய கோர முகத்தை வெளிப்படுத்தும் என்று கருதி வந்த எல் நினோ, தற்போது புயல் சின்னம் உருவாகி, கரையைக் கடப்பதிலும் தலையை நீட்டியிருக்கிறது. புயல் சின்னம் உருவாகி, அதி தீவிரமடைந்தது, மிக விரைவாக கரையைக் கடக்கும் நிகழ்வில் எல் நினோவின் தாக்கம் இருப்பதை வானிலை ஆய்வுகள் உறுதி செய்து வருகின்றன.

Advertisement

Advertisement

ஒர்னாப் புயல் காரணமாக ஆந்திரத்தின் பல மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பதிவாகியிருக்கிறது. ஏனாம் - ஆந்திரம் இடையே அதி தீவிர புயலாக மாறி கரையைக் கடந்துள்ள ஒர்னாப் தற்போது தீவிரப் புயலாக வலுவிழந்து நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஆந்திரத்தில் ஏராளமான மரங்கள் வேரோடு கவிழ்ந்தது. எண்ணற்ற மின் கம்பங்கள் விழுந்ததால் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே 1.80 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, மிகத் தீவிர புயலாக வலுப்பெற்ற ‘ஒனாப்’ புயல், ஆந்திர மாநிலம், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்துக்கு இடையே உள்ள ஏனாம் (புதுச்சேரி நிா்வாகத்துக்கு உள்பட்ட பகுதி) அருகே புதன்கிழமை முற்பகலுக்குள் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால், முன்கூட்டியே நேற்று நள்ளிரவிலேயே கரையைக் கடக்கத் தொடங்கியது. புயல் கரையைக் கடக்கும்போது, அதிகபட்சம் மணிக்கு 125 கி.மீ. முதல் 135 கி.மீ. வரை பலத்த காற்று வீசியது. புயல் கரையைக் கடக்கத் தொடங்கிய உச்ச நேரத்தில் காற்றின் வேகம் 150 கி.மீ. வரை அதிகரித்திருந்தது.

ஒர்னாப் புயலும் எல் நினோவின் தாக்கமும்

இந்தியாவைப் பொருத்தவரை, 2026-ஆம் ஆண்டில் உருவான முதல் புயல் 'ஒர்னாப்'. அக்டோபர் 23ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தப் பகுதியாகத் தொடங்கி, அக். 26-க்குள் 'ஒர்னாப்' புயலாக வலுப்பெற்றது. அடுத்த நாள் நள்ளிரவே கரையையும் கடக்கத் தொடங்கி, இன்று கடந்தே விட்டது. இதில் ஒரே ஒரு ஆறுதல்தான், இன்னும் தாமதமாகக் கரையைக் கடந்திருந்தால், மேலும் வலுப்பெற்று சேதங்கள் கடுமையாகியிருக்குமோ, அது தப்பியதோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி, இந்த புயலானது மிக விரைவாக வலுப்பெற்று முன்னேறியது.

ஒர்னாப் புயலானது இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மிக வேகமாகக் கரையை நோக்கி நகர்ந்தது. செவ்வாய் நள்ளிரவில், புயல் கரையை கடக்கும் நேரம் மாற்றப்பட்டது. புதன்கிழமை முற்பகல் என்று கணிக்கப்பட்டிருந்தது, புதன்கிழமை அதிகாலையே கரையைக் கடக்கும் என மாற்றப்பட்டது. ஒர்னாப் புயலாக உருவாகி வெறும் 18 மணி நேரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கியதும் எதிர்பாராத நிகழ்வாக இருந்தது.

புதன்கிழமை அதிகாலை 1 மணி அளவில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில், மிக தீவிரமான புயலாக கடுமையான காற்று வேகத்துடன் கரையைத் தொட்டது.

புயலின் மையப் பகுதி எனப்படும் கண் கடலிலிருந்து நிலப்பகுதிக்கு வருவது கரையைத் தொடும் நிகழ்வு எனப்படுகிறது. இந்த நிகழ்வின்போது, ​​காற்றின் வேகம் மணிக்கு 125-135 கி.மீ ஆகவும், அவ்வப்போது மணிக்கு 140 கி.மீ வேகத்திலான பலத்த காற்றும் வீசியது.

கரையைக் கடந்ததும் ஓர்னாப் ஓயவில்லை. நிலப்பகுதியை அடைந்த பிறகும், ஆறு மணிநேரம் வரை அதே தீவிரத்துடன் நீடித்தது. இது மிகவும் வித்தியாசமான நிகழ்வு. ஏனெனில், புயலானது தரைப் பகுதிக்கு வரும்போது மலை, கட்டடம், மரங்கள் போன்றவற்றால் வேகம் குறையும், ஆனால், ஒர்னாப் எங்குமே ஓயவில்லை.

அர்னாப் புயல் இன்று அதிகாலை 4 மணி முதல் நர்சாபூர் - ஏனாம் அருகில் ஒரே இடத்தில் நிலை கொண்டது; இதனால் நிலப்பகுதியை அடைவது தாமதமானது.

பொதுவாக, ஒரு புயல் நிலப்பகுதியைக் கடந்து செல்வதற்கு ஆறு மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் ஆகலாம்; இது புயலின் வேகம் மற்றும் அளவைப் பொறுத்தது.

ஆனால், இந்த தரவுகளை எல்லாம் மாற்றி, திருத்திச் சென்றிருக்கிறது ஒர்னாப் புயல். புயல் உருவாகி கரையைக் கடந்து இன்று நிலப்பரப்பில் சென்று கொண்டிருப்பது வரை எல் நினோவின் தாக்கம் நேரடியாகவே வெளிப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments