சுற்றுப்புறத் தூய்மையும் தேவை!
சபரிமலை செல்லும் பக்தர்களும் பொருள்களை ஆங்காங்கே வீசி எறிவது, உணவுக் கழிவுகளைக் கொட்டுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி...
சபரிமலை தீர்த்தாடன காலம் தொடங்கி விட்டது. எல்லாக் கோயில்களிலும் ஐயப்ப பக்தர்கள் நிறைந்து காணப்படுகிறார்கள். வழக்கம்போல, சபரிமலையில் இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், உலகின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் நாள்தோறும் வரிசைகட்டி மலை ஏறிக்கொண்டிருக்கிறார்கள்.
சபரிமலையில் ஐயப்பன்மார்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து பாராட்டுகளும், விமர்சனங்களும் ஒருபுறம் இருக்கட்டும். அதைவிட முக்கியமான இன்னொரு பிரச்னை குறித்து நாம் கவனித்தாக வேண்டும். சபரிமலைக்குப் போகும் நிலக்கல்-பம்பை வழித்தடம், அடர்ந்த வனப்பகுதி வழியாகச் செல்கிறது.
யானைகள், சிறுத்தைகள் மட்டுமல்லாமல், ஏராளமான வன விலங்குகளும், பூச்சி, பறவைகளும் வாழும் பல்லுயிர்ப் பெருக்க மையங்களில் சபரிமலையும் அடங்கும். நீலகிரி லங்கூர் உள்ளிட்ட அரியவகைக் குரங்குகளும், ஏராளமான பாம்பு இனங்களும், முயல்கள், அணில்கள், ஓணான்கள் உள்ளிட்டவையும் காணப்படும் பகுதி. கேரள வனத் துறை வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு நம்மை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது.
Advertisement
Advertisement
நிலக்கல்-பம்பை வழித்தடத்தில் வாகனத்தில் பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் தயவு கூர்ந்து உணவுக் கழிவுகளையோ, நெகிழிப் பொருள்களையோ வனப்பகுதியில் வீசிச் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறது கேரள வனத் துறை. ஐயப்பன் கோயிலுக்கு வாகனங்களில் பயணிக்கும் பக்தர்கள் நிலக்கல்-பம்பை இடையேயான அடர்ந்த வனப்பகுதிகளில் உணவுக் கழிவுகள், நெகிழிப் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை வீசிச் செல்கிறார்கள். உணவுப் பொருள்களைச் சாப்பிட விரைந்தோடி வரும் பல குரங்குகள் வாகனங்கள் மோதி உயிரிழக்கின்றன.
அது மட்டுமல்லாமல், அடர்ந்த காட்டின் சுற்றுச்சூழலை நெகிழிக் கழிவுகள் பாதிக்கும் என்று வனத் துறை விடுத்திருக்கும் எச்சரிக்கையைப் புறந்தள்ளி விட முடியாது. இந்த ஆண்டின் மண்டலம்-மகர விளக்குப் புனித யாத்திரை தொடங்குவதற்கு முன்னால், சபரிமலை சந்நிதானத்தில் மட்டுமல்லாமல், பக்தர்கள் வரும் பாதையை எல்லாம் முன்கூட்டியே சுத்தப்படுத்தும் முயற்சியில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு இறங்கியது.
முதன்முறையாக, நிலக்கலில் தொடங்கி சந்நிதானம் (ஐயப்பன் கோயில் இருக்கும் இடம்) வரையில் உள்ள பகுதிகளில் உள்ள திடக் கழிவுகளை அகற்றும் பணி 'க்ளீன் கேரளம்' என்கிற நிறுவனத்திடம் தரப்பட்டது அல்லது அந்த நிறுவனத்தால் பெறப்பட்டது. பம்பை ஆற்றைக் கடப்பதற்கு முன்பாக நிலக்கல் என்கிற பகுதியில்தான் வாகனங்கள் நிறுத்துமிடமும், கேரள மாநில போக்குவரத்துக் கழகத்தின் வாகன நிறுத்துமிடமும் அமைந்திருக்கின்றன.
அதனருகில் ஹெலிகாப்டர் தளம் ஒன்றும் நிறுவப்பட்டிருக்கிறது. நிலக்கல் ஹெலிபேட் பகுதியில் இருந்து மட்டும் 'க்ளீன் கேரளம்' நிறுவனம் 1,29,520 கிலோ துணிக்கழிவுகளை அகற்றி இருக்கிறது என்கிற தகவல் மலைப்பை ஏற்படுத்துகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பம்பையில் குளித்துவிட்டுத் தாங்கள் உடுத்தியிருந்த 'வஸ்திரங்களை' (கறுப்பு உடைகளை) ஆற்றில் விட்டு விடுவது வழக்கம்.
அவற்றை அகற்ற ஒவ்வொரு ஆண்டும், தேவஸ்வம் போர்டு ஒப்பந்தப்புள்ளி மூலம் ஏலம் விடுகிறது. அதிலிருந்து கிடைக்கும் நல்ல வஸ்திரங்களை எடுத்துக் கொண்டு, மற்றவற்றை ஹெலிபேடின் பின்னால் உள்ள கோசாலைப் பகுதியில் ஒப்பந்தப்புள்ளி எடுத்தவர்கள் கொட்டிவிட்டுச் சென்று விடுகிறார்கள் என்று தெரிகிறது. புதிதாகக் கழிவுகளை அகற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் 'க்ளீன் கேரளம்' நிறுவனம், இந்த ஆண்டு அங்கே பல ஆண்டுகளாக மலைபோலக் குவிந்து கிடந்த துணிகளை அகற்றி இருக்கிறது.
மண்ணிலும், சகதியிலும் புதைந்து கிடந்த துணிக் கழிவுகள் அந்த நிறுவனத்தின் ஆர்.டி.எஃப். (ரெஃப்யூஸ் டிரைவ்ட் ஃபியூயல்) தொழில்நுட்பத்தின் மூலம் நிலக்கரி போன்ற எரிபொருளாக மாற்றப்படுகிறது. அவை சிமென்ட் ஆலைகளுக்கு விற்கப்படுகின்றன. கடந்த ஒரு மாதத்தில் சந்நிதானம், பம்பை, நிலக்கல், பம்பையில் இருந்து சந்நிதானத்துக்குச் செல்லும் நீலிமலை, அப்பாச்சி மேடை, மரக்கூட்டம், சரம்குத்தி பகுதிகளில் இருந்து சுமார் 2,39,389 கிலோ திடக் கழிவுகள் அகற்றப்பட்டிருக்கின்றன.
சபரிமலை என்பது காட்டுக்கு நடுவில் அமைந்த ஆலயம். அதில் இதுபோன்ற கழிவுகளைப் போட்டு, ஒட்டுமொத்த சூழலையும், பல்லுயிர் பெருக்கத்தையும் பாதிப்படையச் செய்வது பக்தர்களுக்கு அழகல்ல. சபரிமலை சந்நிதானம் பகுதியில் மட்டுமே இன்னும்கூட 30 டன்னுக்கும் அதிகமான கழிவுகள் அகற்றப்பட இருக்கின்றன. அதற்குள் மண்டல பூஜைக்கான பக்தர்களின் வரவால், 'க்ளீன் கேரளம்' நிறுவனப் பணிகள் இடைக்காலமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.
கழிவுகளை அவ்வப்போது அகற்றி, திருப்பதியில் காணப்படுவதுபோல சபரிமலையை முற்றிலும் சுத்தமாக வைத்திருப்பது எளிதல்ல. காட்டுக்கு நடுவே இருப்பதால் இலைதழைகள் உள்பட இதர குப்பைகளும் சேரும். தேவஸ்வம் போர்டு நிர்வாகமும், வர்த்தகர்களும் கழிவுகள் ஏற்படாமலும், அதிகரிக்காமலும் பார்த்துக் கொண்டால் மட்டும் போதாது.
சபரிமலை செல்லும் பக்தர்களும் பொருள்களை ஆங்காங்கே வீசி எறிவது, உணவுக் கழிவுகளைக் கொட்டுவது போன்றவற்றைத் தவிர்த்தால்தான், சபரிமலையின் தூய்மையைப் பாதுகாக்க முடியும். அகத் தூய்மையையும், உடல் தூய்மையையும் மட்டுமல்ல, சுற்றுப்புறத் தூய்மையையும் ஐயப்ப பக்தர்கள் தங்கள் பக்தியில் இணைக்க வேண்டும்.
****
திருக்குறள் (எண் 1028) அதிகாரம்: குடிசெயல் வகை
குடிசெய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து
மானம் கருதக் கெடும்.
குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை. சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமை கெடும்.