FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒரேயொரு லட்சியம் சபரி மாமலை!

சபரிமலைக்குப் புனிதப் பயணம் பற்றிய தலையங்கம்....

19 நவம்பர் 2026, 5:33 am
சபரிமலை ஐயப்பன் கோயில்.
பகிர்:

ஆண்டுதோறும் மாலையணிந்து சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கேரளத்திலும் தென்னிந்திய மாநிலங்களிலும் மட்டுமல்லாமல், வட மாநிலங்கள், அண்டை நாடுகள் என்பதைக் கடந்து உலகளாவிய அளவில் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் பார்க்க முடிகிறது.

கார்த்திகை மாதம் மாலையணிந்து, கருப்பு வஸ்திரம் தரித்து, திருநீறும், சந்தனமும் பூசி, "சுவாமியே சரணமய்யப்பா' என்கிற கோஷத்துடன் ஒருவரையொருவர் ஜாதி, மத, இன, மொழி பேதமில்லாமல் "சுவாமி' என்று அழைத்து "அத்வைத' தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் பக்தி மார்க்கத்தைவிட சமூக நல்லிணக்கத்தையும், சமதர்ம, சமத்துவ சிந்தனையையும் உயர்த்திப் பிடிக்கும் அற்புதத்தை வேறெங்கு நாம் காண முடியும்?

Advertisement

Advertisement

மண்டல, மகரவிளக்கு தீர்த்தாடனக் காலத்தில், விரதமிருந்து சபரிமலை தர்ம சாஸ்தாவுக்கு நெய்யபிஷேகம் நடத்தி வழிபடத் தொலைதூரங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களின் ஒரே ஒரு கோரிக்கை அதிக நேரம் வரிசையில் காத்திருக்காமல், பதினெட்டாம் படியேறி ஐயப்ப தரிசனம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

கடந்த பத்தாண்டுகளாக, இறை நம்பிக்கை இல்லாத இடதுசாரி அரசு ஆட்சியில் பக்திக்கும், பக்தர்களின் வழிபாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், சபரிமலை யாத்திரையும், வழிபாடுகளும் நிர்வாக ரீதியிலான சடங்காக மட்டுமே பார்க்கப்பட்டது. இப்போது நிலைமை மாறிவிட்டது. ஐயப்ப பக்தர்களான முதல்வர் வி.டி.சதீசனும், உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவும், அறநிலையத் துறை (தேவஸ்வம்) அமைச்சர் கே. முரளீதரனும் சபரிமலைக்கே சென்று நேரடியாக ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டதால், போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது.

பக்தர்களுக்கான எல்லா வசதிகளையும் தங்களால் இயன்ற அளவு செய்திருப்பதாக கேரள மாநில அரசும், தேவஸ்வம் போர்டும் தெரிவிக்கிறது. நாள்தோறும் 66,000 பக்தர்களுக்கு "வெர்ச்சுவல் க்யூ' வழியாகவும், 14,000 பக்தர்களுக்கு "ஸ்பாட் புக்கிங்' மூலமும் இந்த முறை தரிசனத்துக்கு வழிகோலப்பட்டிருக்கிறது. "வெர்ச்சுவல் க்யூ' தொடங்கிய முதல் நாளிலேயே, ஐந்து லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். அதைப் பார்க்கும்போது, மண்டலக் காலத்திலேயே மிகப் பெரிய அளவில் பக்தர்கள் வரக்கூடும் என்று தோன்றுகிறது.

லட்சக்கணக்கான பக்தர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் சபரிமலையில் குவியப் போகிறார்கள் என்பதால், கூட்டத்தை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் போதிய முன்னேற்பாடுகளை அரசு செய்தாக வேண்டும். பக்தர்கள் அதிகமாக வரும் நாள்களை முன்கூட்டியே தீர்மானித்து, அதற்கேற்ற வசதிகளையும், ஒழுங்குபடுத்தலையும் உறுதிப்படுத்துவது அவசியம்.

அதற்கேற்ப காவல் துறையினரைப் பணியில் அமர்த்துவது அதைவிட அவசியம்.

வரிசையில் நிற்கும் பக்தர்களானாலும், பதினெட்டாம் படியில் ஏறக் காத்திருக்கும் ஐயப்பமார்களானாலும் அதிக நேரம் காத்திருக்காமல் நகர வேண்டும். தரிசனத்துக்காக தினந்தோறும் சபரிமலை சந்நிதானம் 18 மணிநேரம் திறந்திருக்கும். ஒவ்வொரு நிமிஷமும் 75 பக்தர்களாவது பதினெட்டாம் படியில் ஏறினால்தான், வரிசையின் நீளத்தைக் குறைக்க முடியும். பதினெட்டாம் படியில் பணியில் இருக்கும் காவல் துறையினரின் சாமர்த்தியத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

பக்தர்களின் தேவைக்கேற்ப சபரிமலைப் பிரசாதங்களான அப்பமும், அரவணப் பாயசமும் கிடைப்பதை தேவஸ்வம் போர்டு உறுதி செய்யும் என்று அமைச்சர் முரளீதரன் தெரிவித்திருக்கிறார். நாள்தோறும் 3.5 லட்சம் டின்கள் அரவணப் பாயசம் தயாராகிறது என்றால், கையிருப்பில் 80 லட்சம் டின்கள் வைத்திருப்பதாகவும் தேவஸ்வம் போர்டின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வரும் ஐயப்ப பக்தர்களுக்கான மருத்துவ வசதிகளில் முன்னேற்றம் ஏற்படுவது வரவேற்புக்குரியது. பத்தனம்திட்டை பொது மருத்துவமனையில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், கோணி, கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் உள்ள எல்லா மருத்துவமனைகளும், அனைத்துவித அவசரகால உதவிக்கும் தயாராக இருப்பதாக அரசு தெரிவிக்கிறது.

சாலக்கயம்}பம்பை இடையேயான வனப் பகுதி வழியாகச் செல்லும் சாலை, மிகக் குறைந்த நாள்களில் செப்பனிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டதற்கு அரசைப் பாராட்ட வேண்டும். அதேபோல, நிலக்கலில் வழக்கமாக ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கும் இப்போது, விடை காணப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. நிலக்கல் வாகனம் நிறுத்துமிடம் செப்பனிடப்பட்டு, செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது மிகப் பெரிய ஆறுதல்.

எந்தவொரு பக்தருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல், வெற்றிகரமாக சபரிமலை தரிசனம் நடக்க வேண்டும் என்பதுதான் நமது பிரார்த்தனை. அந்த ஒரு விநாடி ஐயப்ப தரிசனத்திலும், "சுவாமியே சரணமய்யப்பா' என்கிற உணர்வுபூர்வமான பக்திக் கோஷத்திலும் எல்லா சிரமங்களையும் மறந்துவிடும் அந்த பக்தனின் புனித யாத்திரை பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை கேரள அரசுக்கும், தேவஸ்வம் போர்டுக்கும் உண்டு.

அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

திருக்குறள் (எண் 611) அதிகாரம்: ஆள்வினை உடைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.