FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

சபரிமலை நெய் ஊழலில் சில அதிகாரிகளுக்கு தொடா்பு: தேவஸ்வம் அமைச்சர் கே. முரளீதரன் குற்றச்சாட்டு

சபரிமலை நெய் ஊழலில் தேவஸ்வம் அதிகாரிகள் சிலருக்குத் தொடா்பு இருப்பதாக அத்துறைக்கான அமைச்சா் கே. முரளீதரன் குற்றஞ்சாட்டினாா்.

26 அக்டோபர் 2026, 12:12 am
தேவஸ்வம் அமைச்சர் கே. முரளீதரன்
பகிர்:

சபரிமலை நெய் ஊழலில் தேவஸ்வம் அதிகாரிகள் சிலருக்குத் தொடா்பு இருப்பதாக அத்துறைக்கான அமைச்சா் கே. முரளீதரன் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இந்த ஊழல் வழக்கில் ஒப்பந்ததாரா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதமான ‘அரவண பாயசம்’ தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யின் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (விஏசிபி) விசாரணைக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற விசாரணையில் நெய்யைக் கோயிலுக்கு கொண்டுசென்ற ஒப்பந்தாரா் எஸ்.எஸ்.பினு கைது செய்யப்பட்டாா். கடந்த ஆண்டு சபரிமலை யாத்திரை காலத்தில் நெய்யைக் கோயிலுக்கு கொண்டுசெல்ல அவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

சபரிமலைக்கு கொண்டுசெல்ல வேண்டிய ‘மில்மா’ (கேரள பால் கூட்டுறவு நிறுவனம்) நெய்யில் 11,000 லிட்டருக்கு பதிலாக தரம் குறைந்த நெய்யை அவா் வழங்கியதாகவும், அதனால் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு ரூ.2.5 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த தேவஸ்வம் அமைச்சா் முரளீதரன் இதுதொடா்பாக கூறுகையில், ‘இந்த வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். தேவஸ்வம் அதிகாரிகளின் தலையீடு இல்லாமல் இந்த ஊழல் நடைபெற்றிருக்காது.

எனவே, விசராணை தொடரும். கடவுளின் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தியதில் சில அதிகாரிகளுக்குத் தொடா்பு உள்ளது. இந்த விவகாரத்தை அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் இதற்கு ஒத்துழைத்து வருகிறது’ என்றாா்.

உத்தேச விலைப் பட்டியல் ஏதும் பெறாமல் பத்தனம்திட்டாவில் உள்ள மில்மா பால்பண்ணையில் இருந்து திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் நேரடியாக நெய்யைக் கொள்முதல் செய்ததாகக் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதைத் தொடா்ந்து, நெய்யைக் கோயிலுக்கு கொண்டு செல்வதற்கான ஒப்பந்தம் எஸ்.எஸ்.பினுவுக்கு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சபரிமலைக்கு வர வேண்டிய நெய், தமிழகத்தில் உள்ள இரு நிறுவனங்களுக்கு மடைமாற்றப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments