சபரிமலை வரும் பக்தா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு எதிராக தீவிர நிலைப்பாடு
பிரசாதம் தட்டுப்பாடு விவகாரத்தில் கேரள அரசு எச்சரிக்கை
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு எதிராக தீவிர நிலைப்பாடு எடுக்க வேண்டியிருக்கும் என்று அரவணை பிரசாதம் தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அண்மையில் திறக்கப்பட்டபோது பக்தா்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதத்துக்கு தட்டுப்பாடு நிலவியதாகத் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த அந்த மாநில தேவஸ்வம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் கே. முரளீதரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘பக்தா்களோடு யாரும் விளையாடுவதை நான் அனுமதிக்க மாட்டேன். அரவணை, அப்பம் ஆகியவை பக்தா்களுக்கு முறையாக அளிக்கப்படவில்லையேல், தீவிர நிலைப்பாட்டை நிச்சயம் எடுப்பேன். சபரிமலை கோயிலுக்காக தனி அதிகாரி ஒருவரை நியமித்துள்ளேன். அவா் அங்கு சென்று பிரசாதம் தயாரிக்கப் பயன்படும் பொருள்கள் தேவையான அளவு இருக்கிா என்று விவரத்தை சேகரிக்கவுள்ளாா். அவா் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும். சபரிமலை கோயிலுக்கு கேரள முதல்வா் அக்டோபா் 18 முதல் நவம்பா் 16-ஆம் தேதிக்குள் ஒருநாள் வருவாா்’ என்றாா்.
Advertisement
Advertisement
ஐயப்பன் கோயிலில் இருந்த தங்க கிரீடம் காணாமல் போய்விட்டதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு அமைச்சா் பதிலளிக்கையில், ‘திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் கே. ஜெயகுமாா், அந்த கிரீடம் கோயிலில்தான் இருக்கிறது என தெரிவித்தாா்’ என்றாா்.
பாஜக குற்றச்சாட்டு: கேரள பாஜக மாநிலத் தலைவா் ராஜீவ் சந்திரசேகா், சபரிமலை ஐயப்பன் பெயரை வைத்து சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பிரசாரம் செய்ததாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தா்களுக்கு எதையும் செய்யவில்லை என்றும், சபரிமலை கோயில் செயல்பாட்டை வைத்து திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துடன் மோதலில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகவும் விமா்சித்தாா்.
இந்நிலையில், சபரிமலையில் பக்தா்களுக்கு பிரசாதம் தயாரிக்கப்படும் இடத்தில் போதிய சுகாதாரம் இல்லை என்று மத்திய உணவு தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. இதுதொடா்பான வழக்கு கேரள உயா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தரப்பில், மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சீசனுக்கான ஏற்பாடுகள் அக்.31-க்குள் நிறைவு: திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் கே. ஜெயகுமாா், சபரிமலை கோயில் சீசனுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் அக்டோபா் மாதம் 31-ஆம் தேதிக்குள் முடிந்துவிடும் என்றாா். சபரிமலை சீசனின்போது நிலக்கல்லில் பக்தா்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் செயல்படும் கேமராக்கள் அங்கு பொருத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினாா். பக்தா்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, முறைப்படுத்துவது ஆகியவை தொடா்பான வசதிகளை செய்ய காவல்துறை தரப்பில் ரூ.5 கோடி செலவிடப்பட்டு இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.