விமானியின் விவேகம்!
நடுவானில் சக விமானியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்த நிலையிலும், விமானத்தை வீழ்த்தும் முயற்சியை முறியடித்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரைப் பற்றி...
நடுவானில் சக விமானியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்த நிலையிலும், விமானத்தை வீழ்த்தும் முயற்சியை முறியடித்த இந்திய விமானி ஸ்மித் மச்சார், பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருப்பதுபோல, உலக அரங்கில் இந்தியாவின் கெüரவத்தை உயர்த்தி இருக்கிறார்.
துபையில் வசிக்கும் 39 வயது மச்சார் விமானம் ஓட்டுவதில் 13 ஆண்டு அனுபவசாலி என்றாலும்கூட, இதுபோன்ற ஒரு அசாதாரணமான சூழ்நிலையிலும் சமயோசிதமாக செயல்பட்டு, விமானத்தில் இருந்த பயணிகளைக் காப்பாற்றியதற்காக இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்க்கு 27 குழந்தைகள் உள்பட 174 பயணிகளுடன் புறப்பட்ட ஃப்ளைதுபை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.
ஜோர்டான் வான் பரப்பில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் விமானம் நுழைய இருந்தபோதுதான், அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. சற்றும் எதிர்பாராமல், ஓமன் குடிமகனான துணை விமானி, அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக விமானத்தின் 'காக்பிட்' எனப்படும் விமான ஓட்டியின் அறையில் வைக்கப்பட்டிருக்கும், முன்புறக் கண்ணாடியை உடைக்கும் 'க்ராஷ் ஆக்ஸ்' எனப்படும் சிறிய கோடரியால் தலைமை விமானி மச்சாரைத் தாக்க முற்பட்டார்.
Advertisement
Advertisement
அவரது வலது கையில் பலத்த காயத்துடன் ரத்தம் பீறிட்டுப் பாயும் நிலையிலும் துணை விமானியை எதிர்த்துப் போராடியபடியே, சமயோசிதமாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்ததுடன் சிறப்புப் பொத்தானை அழுத்தி, விமானிகளின் அறைக் கதவைத் திறந்துவிட்டார் மச்சார். விமானிகள் அறையில் இருந்து மச்சார் எழுப்பிய கூச்சலும், நடுவானில் விமானம் நிலைதடுமாறிப் பறக்கும் அவலமும் பயணிகளை அச்சத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது.
34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் அடுத்த சில நிமிஷங்களில் சுமார் 17,000 அடிக்கும் கீழே இறங்கி, நடுவானில் தள்ளாடியது. மச்சார் விமானிகள் அறையின் கதவைத் திறந்து விட்டதுதான் தாமதம், இஸ்ரேல் பயணி யானிவ் ஹ்யூன் துணிந்து அதற்குள் நுழைய முற்பட்டார். அவரை நுழையவிடாமல் தடுக்க முனைந்த துணை விமானியைத் தள்ளிவிட்டு, வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முற்பட்டபோது, அவரையும் தாக்க முற்பட்டார் ஓமன் துணை விமானி. அதற்குள் இஸ்ரேலைச் சேர்ந்த ஆசப் ராஜ்வான், ஸ்விக்கா மானெஸ், மூசாயேவ் ஷோட்டா ஆகியோர் அடுத்தடுத்து விமானிகள் அறைக்குள் நுழைந்து, துணை விமானியை மடக்கிப் பிடித்தனர்.
மத்திய ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக விமானங்களில் தயார் நிலையில் இரண்டு விமானிகள் பயணிகள் பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது வரப்பிரசாதமாக அமைந்தது. அவர்கள் விமானத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, சவூதி அரேபியாவின் தபூக் நகரில் பத்திரமாகத் தரையிறக்கினார்கள்.
சவூதி அரேபியாவின் பாதுகாப்புப் படை வீரர்கள் ஓமனைச் சேர்ந்த துணை விமானி ஹமாம்-அல் ஹமாமியைக் கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விமானி ஸ்மித் மச்சார் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஓமன் நாட்டவரான துணை விமானியின் எதிர்பாராத தாக்குதலின் பின்னணி குறித்து இன்னும் முழுமையான தெளிவு கிடைக்கவில்லை.
யாருடைய வழிகாட்டுதலில் அல்லது உத்தரவின்பேரில் அவர் இந்தச் செயலில் ஈடுபட்டார் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்றும், துப்புத் துலக்கி வருகிறோம் என்றும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த 9/11 தாக்குதல்போல, இஸ்ரேலில் உள்ள ஏதாவது கட்டடத்தில் மோதிப் பேரழிவை ஏற்படுத்தும் முயற்சியா என்பதும் தெரியவில்லை.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தித் தொடங்கி வைத்த மேற்காசியப் போர்ச் சூழலின் மூன்றாவது ஆண்டு நிறைவுக்குச் சில நாள்களே இருக்கும் நிலையில் நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் இது. சக விமானி ஒருவர் வெளியில் இருந்து எந்தவித ஆயுதமும் எடுத்துவராமல், விமானத்தின் 'காக்பிட்டில்' உள்ள கிராஷ் ஆக்ஸ் மூலம் தாக்குதல் நடத்துவார் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்? ஓமன் நாட்டைச் சேர்ந்தவரை சக விமானியாக இஸ்ரேல் செல்லும் விமானத்தில் இணைக்காமல் இருந்திருக்கலாம் என்பது இப்போது உயரும் கருத்து.
இந்த சம்பவம் குறித்த பல கேள்விகள் விசாரணைக்கு உரியவை. சக விமானி ஏன் தாக்குதல் நடத்தி, விமானத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர விழைந்தார்? அது திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதலா? அல்லது விமானத்தையும், பயணிகளையும் பிணைக் கைதியாக்கி ஏதாவது பேரம் நடத்த முற்பட்டாரா? இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் கொள்கை ரீதியிலான காரணம் ஏதாவது இருந்ததா? அல்லது தனிப்பட்ட காரணங்கள் உண்டா? சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஒருங்கிணைந்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொணர வேண்டும்.
அண்மைக்காலமாக விமானத்தின் பாதுகாப்பு தொடர்பான பல நிகழ்வுகள் வரிசை கட்டுகின்றன. விமானிகளின் பயங்கரவாதத் தொடர்பு, போதைப் பொருள் பயன்பாடு, வேலைப் பளு காரணமாக மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. இவை எதுவானாலும், பாதிக்கப்படுவது பயணிகள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பாதுகாப்பான விமானப் பயணத்தை உறுதி செய்வதில் உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை ஃப்ளைதுபை விமான நிகழ்வு உணர்த்துகிறது.
********
திருக்குறள் (எண் 662) அதிகாரம்: வினைத்திட்பம்
ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள்.
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல்; வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.