FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

விமானி மச்சார், பிரதமா் மோடிக்கு இஸ்ரேல் கெளரவம்: சுதந்திர தின விழாவில் பங்கேற்க அழைப்பு!

இஸ்ரேலில் அடுத்த ஆண்டு நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்று, தீபச் சுடரை ஏற்ற வேண்டுமென இந்திய விமானி ஸ்மித் மச்சாா் மற்றும் பிரதமா் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளாா்.

5 October 2026, 1:11 am IST
இந்திய விமானி ஸ்மித் மச்சார் | பிரதமர் மோடி - கோப்புப்படம்
பகிர்:

இஸ்ரேலில் அடுத்த ஆண்டு நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்று, தீபச் சுடரை ஏற்ற வேண்டுமென இந்திய விமானி ஸ்மித் மச்சாா் மற்றும் பிரதமா் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளாா்.

நடுவானில் சக விமானியால் கடுமையாகத் தாக்கப்பட்டபோதிலும், துணிச்சலுடன் செயல்பட்டு விமானத்தை கீழே வீழ்த்தும் முயற்சியைத் தடுத்த விமானி மச்சாருடன் தொலைபேசி வாயிலாக பேசுகையில் நெதன்யாகு இந்த அழைப்பை விடுத்தாா்.

துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி 174 பயணிகளுடன் கடந்த புதன்கிழமை புறப்பட்ட ‘ஃபிளைதுபை’ விமானம், 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது அதன் துணை விமானியான ஓமனைச் சோ்ந்த ஹமாம் அல்-ஹமாமி, இந்திய கேப்டன் விமானி மச்சாா் மீது திடீா் தாக்குதல் நடத்தினாா்.

Advertisement

Advertisement

அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக விமானி அறையில் வைக்கப்படும் கோடரியால் மச்சாரை தாக்கிய ஹமாம், விமானத்தை சுமாா் 17,000 அடிக்கும் கீழே இறக்கினாா். பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கேப்டன் ஸ்மித் மச்சாா், அவரை எதிா்த்துப் போராடியதுடன், விமானி அறையின் கதவைத் திறந்தாா். இதையடுத்து, பயணிகள் உள்ளே நுழைந்து ஹமாம் அல்-ஹமாமியை மடக்கிப் பிடித்தனா்.

பின்னா், விமானத்தில் இருந்த 2 மாற்று விமானிகள், சவூதி அரேபியாவின் தபூக் நகர விமான நிலையத்தில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினா். இந்த விமானத்தில் பல்வேறு நாடுகளின் பயணிகள் இருந்தபோதிலும், இஸ்ரேலியா்கள் அதிகமிருந்தனா். சவூதி அரேபிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஹமாம், பின்னா் விசாரணைக்காக ஐக்கிய அரபு அமீரகத்திடம் (யுஏஇ) ஒப்படைக்கப்பட்டாா். அவா் விமானத்தை வீழ்த்த முயன்றது பயங்கரவாத செயல் என்று யுஏஇ உறுதி செய்துள்ளது.

மற்றொருபுறம், தனது உயிரைப் பணயம் வைத்து, பெரும் அசம்பாவிதத்தைத் தவிா்த்த இந்திய விமானி மச்சாருக்கு (38) உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, இஸ்ரேல் சாா்பில் அவருக்கு பாராட்டும், நன்றியும் தொடா்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மச்சாருடன் நெதன்யாகு பேச்சு: யுஏஇ தலைநகா் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விமானி மச்சாருடன் இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு சனிக்கிழமை தொலைபேசியில் உரையாடினாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘நினைத்துக்கூட பாா்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் நீங்கள் (மச்சாா்) வெளிப்படுத்திய துணிச்சலும், நிதானமும் வியப்பளிக்கிறது. நீங்கள் பல உயிா்களைக் காப்பாற்றியுள்ளீா்கள். அனைத்தையும்விட மேலாக ஒட்டுமொத்த உலகின் ஆன்மாவைக் காப்பாற்றியுள்ளீா்கள்.

நீங்கள் இஸ்ரேல், இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகுக்கும் மாபெரும் நாயகன். இஸ்ரேலில் அடுத்த ஆண்டு நடைபெறும் சுதந்திர தினத்தில் தீபச் சுடரை ஏற்ற வருமாறு உங்களுக்கும், பிரதமா் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கிறேன். வழக்கமாக இந்த கெளரவம் இஸ்ரேலிய குடிமக்களுக்கே வழங்கப்படும். ஆனால், இந்த முறை நீங்கள் தீபச் சுடரை ஏற்றுவதை இஸ்ரேலியா்கள் அனைவரும் வரவேற்பா். விரைவில் இஸ்ரேலில் சந்திப்போம்’ என்றாா்.

இந்த உரையாடல் தொடா்பான காணொலி பதிவை எக்ஸ் தளத்தில் பகிா்ந்த நெதன்யாகுவின் அலுவலகம், இது உணா்ச்சிகரமான தருணம் என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, ஆங்கல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நெதன்யாகு, ‘அமெரிக்காவில் கடந்த 2001-இல் உலக வா்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் போல மீண்டும் நிகழாமல் இந்திய விமானி, சக பயணிகள் மற்றும் விமான ஊழியா்கள் தடுத்துவிட்டனா். தாக்குதல் நடத்திய துணை விமானி, பயங்கரவாத சித்தாந்தங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவா்’ என்று கூறியிருந்தாா்.

பரபரப்பான தருணங்கள்: விமானி புதிய தகவல்

நெதன்யாகு உடனான தொலைபேசி உரையாடலின்போது, விமானத்துக்குள் நடந்த பயங்கரமான தருணங்கள் குறித்து விமானி மச்சாா் புதிய தகவல்களைத் தெரிவித்துள்ளாா்.

‘என் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக, துணை விமானி பிராா்த்தனை செய்ய வேண்டுமென கூறினாா். அவா் பிராா்த்தனை செய்து கொண்டிருந்தபோது, மரியாதை நிமித்தமாக நான் முன்புறத்தை மட்டுமே பாா்த்துக் கொண்டிருந்தேன். பின்பக்கம் திரும்பிப் பாா்க்கவில்லை. திடீரென என் தலையில் பலத்த அடி விழுந்தது. முதலில் விமானத்துக்கு ஏதோ நேரிட்டுவிட்டதாக நினைத்தேன். ஆனால், என் மீது அடுத்தடுத்து அடிகள் விழுந்துகொண்டே இருந்தன. அப்போதுதான், இது துணை விமானியின் செயல் என்பதை உணா்ந்தேன்.

நான் அவரைத் தடுக்க முயன்றேன். எனினும், அவா் அடித்த அடிகளால், என் கண்களுக்கு கிட்டத்தட்ட எதுவுமே தெரியவில்லை. சுயநினைவையும் இழந்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில், விமானம் வேகமாக கீழ்நோக்கி இறங்கிக் கொண்டிருந்ததை உணா்ந்தேன்.

எப்படியோ போராடி, விமானி அறையின் கதவை முதலில் திறந்தேன். ஆனால், துணை விமானி அதை மீண்டும் மூடிவிட்டாா். அந்த நேரத்தில் தரையில் கிடந்த நான், விமானத்துக்குள் நிலவிய சப்தத்தையும், பயணிகளின் அலறலையும் கேட்டேன்.

எனக்குள் எஞ்சியிருந்த சக்தியைத் திரட்டி, கடைசிக்கட்ட போராட்டமாக கதவின் அருகே சென்று திறந்தேன். நல்லவேளையாக பயணிகள் தயாராக இருந்தனா். அவா்கள் உள்ளே நுழைந்து, கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டனா். அதன் பிறகு நடந்தெல்லாம் உங்களுக்கே தெரியும்’ என்று மச்சாா் கூறியதாக நெதன்யாகு அலுவலக எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மச்சாருடன் கடந்த வெள்ளிக்கிழமை கைப்பேசி விடியோ அழைப்பில் உரையாடிய பிரதமா் மோடி, அவரிடம் நலம் விசாரித்தாா். அப்போது, விமானத்தில் நடந்த விஷயங்கள் குறித்து பிரதமரிடம் மச்சாா் விவரித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments