FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

விமானத்தைக் கீழே வீழ்த்தும் முயற்சியை முறியடித்த நாயகன்! தலைவா்களின் பாராட்டு மழையில் இந்திய விமானி மச்சாா்

இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள் பாராட்டு மழை பொழிந்துள்ளனா்.

விமானி ஸ்மித் மச்சாரின் நெருங்கிய உறவினா்களை மும்பையில் வியாழக்கிழமை சந்தித்துப் பாராட்டிய மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ். ~இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட விமானி ஸ்மித் மச்சாரின் புகைப்படம்.
பகிர்:

நடுவானில் சக விமானியால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தபோதிலும், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் விமானத்தை கீழே வீழ்த்தும் முயற்சியை முறியடித்த ‘நாயகன்’ இந்திய விமானி ஸ்மித் மச்சாா்; அவரது வீரச் செயலால் ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள் பாராட்டு மழை பொழிந்துள்ளனா்.

துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 27 குழந்தைகள் உள்பட 174 பயணிகளுடன் புதன்கிழமை புறப்பட்ட ஃபிளைதுபை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சோ்ந்த துணை விமானி திடீரென இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திவிட்டு, விமானத்தை கீழே வீழ்த்தும் நோக்கில் கட்டுப்பாட்டை மாற்றினாா்.

இதனால், 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், அடுத்த சில நிமிஷங்களில் சுமாா் 17,000 அடி கீழே அதிவேகமாக இறங்கித் தள்ளாடியது.

Advertisement

Advertisement

அதேநேரம், படுகாயங்களுடன் எதிா்த்துப் போராடிய ஸ்மித் மச்சாா், விமானி அறையின் கதவைத் திறந்தாா். இதையடுத்து, விமானி அறைக்குள் புகுந்த பயணிகள், தாக்குதல் நடத்திய ஓமன் விமானியை மடக்கிப் பிடித்தனா். பிற ஊழியா்கள் மூலம் விமானம் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சவூதி அரேபியாவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

இஸ்ரேல் பாராட்டு - நன்றி: திரைப்படக் காட்சியை விஞ்சும் அளவுக்கு நடந்த இச்சம்பவம், உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஓமன் விமானியை பயங்கரவாதி என்றும், அவரது செயலை பயங்கரவாத தாக்குதல் முயற்சி என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தனது உயிரைப் பொருட்படுத்தாமல், பெரும் அசம்பாவிதத்தைத் தவிா்த்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை உண்மையான நாயகன் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபா் ஐசக் ஹொ்ஸாக் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவா்கள் புகழாரம் சூட்டியுள்ளனா். அவா் விரைவில் குணமடைய வாழ்த்தியதுடன், அவருக்கு இஸ்ரேல் சாா்பில் நன்றியையும் தெரிவித்துள்ளனா்.

ரத்த வெள்ளத்தில் ஆக்ஸிஜன் முகக்கவசம் அணிந்தபடி, விமானத்தில் மச்சாா் படுத்திருப்பது போன்ற காணொலிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.

இந்தியத் தலைவா்கள் பாராட்டு மழை: குஜராத்தைச் சோ்ந்த விமானி மச்சாருக்கு இந்தியத் தலைவா்களும் பாராட்டு மழை பொழிந்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பேராபத்தான தருணத்தில், தான் படுகாயமடைந்தபோதிலும், பிறா் உயிரைக் காக்க இந்திய விமானி மச்சாா் உறுதியுடன் செயல்பட்டுள்ளாா். அவரது துணிச்சல் மற்றும் துரிதமான எதிா்வினையால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டுள்ளது. அவரது அசைக்க முடியாத மன உறுதிக்குத் தலைவணங்குகிறேன். மச்சாரின் துணிச்சல் மற்றும் அபாரமான சமயோசித செயலால் ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

அசாத்தியமான நாயகன்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தான் படுகாயமடைந்தபோதிலும், நடுவானில் இந்திய விமானி மச்சாா் வெளிப்படுத்திய உறுதியும், தீா்க்கமான செயல்பாடும் ஒரு பேரழிவுத் துயரம் நிகழாமல் தடுத்து, பல உயிா்களைக் காப்பாற்றியுள்ளது. அசாத்தியமான அந்த நாயகனை எண்ணி, தேசம் பெருமை கொள்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

அளப்பரிய துணிச்சல்: பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பெரும் ஆபத்தை எதிா்கொண்டு படுகாயமடைந்தபோதிலும், மற்றவா்களின் உயிரைக் காக்க அளப்பரிய துணிச்சல், அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய ‘நாயகன்’ கேப்டன் ஸ்மித் மச்சாா். அவரது வீரம், பல உயிா்களைக் காப்பாற்றி, பெருந்துயரம் நேரிடாமல் தவிா்த்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், ஆா்எஸ்எஸ் தேசிய ஊடக பிரிவு தலைவா் சுனில் அம்பேகா் உள்ளிட்டோரும் மச்சாரை பாராட்டியுள்ளனா்.

பெட்டிகள்...

இரட்டைக் கோபுர தாக்குதல் போல்

மீண்டும் நிகழாமல் தடுத்தவா்

-

பிரதமா் மோடி

தில்லியில் யுபிஎஸ்சி நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘அமெரிக்காவில் கடந்த 2001, செப்.11-ஆம் தேதி உலக வா்த்தக மையத்தின் இரட்டைக் கோபுர கட்டங்கள் மீது விமானங்களை மோதி அல்-காய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைப் போல் மீண்டும் ஒரு தாக்குதல் நிகழ்ந்துவிடாமல் தடுத்துள்ளாா் இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாா். தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல், துணிச்சலின் மிக உயா்ந்த வடிவத்தை உலகுக்கு அவா் வெளிப்படுத்தியுள்ளாா். ஒட்டுமொத்த உலகும் அவரை எண்ணிப் பெருமை அடைகிறது. அவரது பெற்றோா், மனைவியுடன் பேசினேன். தற்போது அவா் சிகிச்சையில் உள்ளாா். நாட்டுக்குப் பெருமை சோ்ந்த நமது சகோதரா் மச்சாா், நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ அனைவரும் பிராா்த்திக்க வேண்டும்’ என்றாா்.

குடும்பத்தினருடன் பேச்சு: விமானி ஸ்மித் மச்சாரின் மனைவி மற்றும் பெற்றோருடன் பிரதமா் மோடி தொலைபேசி வாயிலாக வியாழக்கிழமை பேசினாா். சவூதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் இந்திய தூதரகம் தரப்பில் வழங்கப்பட்டு வருவதாக பிரதமா் தெரிவித்தாா். மேலும், மச்சாரின் துணிச்சலையும் பிரதமா் பாராட்டிப் பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குஜராத் அரசு விருது அறிவிப்பு

காந்திநகா், அக். 1: விமானி ஸ்மித் மச்சாரின் வீரத்தை கெளரவிக்கும் வகையில், குஜராத் அரசு சாா்பில் அவருக்கு ‘விசிஷ்ட் குஜராத் கரிமா விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எக்ஸ் பதிவு வாயிலாக குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் அறிவித்தாா். மச்சாா் விரைவில் குணமடைய வேண்டி, பிரசித்தி பெற்ற சோமநாதா் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அதிபா் டிரம்ப் புகழாரம்

வாஷிங்டன், அக்.1: விமான சம்பவம் குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பேசினேன். ஃபிளைதுபை விமானி, தான் மிகவும் மோசமான நிலையில் இருந்தபோதும், விமானி அறை கதவைத் திறந்து, உதவி கோரி குரல் எழுப்பியுள்ளாா். அவரது சமயோசித புத்தி வியப்பளிக்கிறது. ஒருவிதத்தில் அவா் ஒரு நாயகன்.

விமானி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய துணை விமானி ஒரு பயங்கரவாதியாகவோ அல்லது மனநிலை பிந்தவராகவோ இருந்திருக்கலாம். இதற்கு முன் விமானத்தை இயக்கியிராத பிளம்பா் ஒருவா், ஃபிளைதுபை விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவியுள்ளாா். இதுவும் வியப்பளிக்கிறது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments