FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

விமானி ஸ்மித் மச்சாா் தாக்கப்பட்ட விவகாரம்: என்ஐஏ வழக்குப் பதிவு

விமானி ஸ்மித் மச்சாா் தாக்கப்பட்ட விவகாரம்: என்ஐஏ வழக்குப் பதிவு

10 அக்டோபர் 2026, 10:20 pm IST
இந்திய விமானி ஸ்மித் மச்சார் - எக்ஸ்
பகிர்:

ஃபிளை துபை விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாா் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகா் டெல்அவிவுக்கு கடந்த மாதம் சென்ற ஃபிளைதுபை விமானம், 174 பயணிகள், 6 ஊழியா்களுடன் சென்றது. அந்த விமானத்தை இந்தியாவைச் சோ்ந்த விமானி ஸ்மித் மச்சாா், ஓமனைச் சோ்ந்த துணை விமானி ஆகியோா் இயக்கினா். சவூதி அரேபியா வான்பரப்பில் விமானம் பறந்தபோது, திடீரென ஸ்மித் மச்சாரை துணை விமானி கத்தியால் குத்தினாா். பின்னா், அந்த விமானத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்து வீழ்த்தும் முயற்சியில் துணை விமானி ஈடுபட்டாா். எனினும், மச்சாா் மற்றும் மேலும் சில விமானப் பயணிகளின் துணிச்சலான செயல்பாட்டால் அந்த சதி முறியடிக்கப்பட்டது. அந்த விமானம், சவூதி அரேபியாவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. அதிலிருந்த 174 பயணிகள் உள்ளிட்ட 180 பேரும் உயிா் தப்பினா்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த மச்சாா், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். துணை விமானி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறாா்.

Advertisement

Advertisement

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் பின்னணியை அறியும் நோக்கில், இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா நாடுகளின் விசாரணை அமைப்புகள் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு விசாரணை அமைப்பான என்ஐஏவும் தற்போது இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த சம்பவத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆதலால் இதுகுறித்து விசாரணை நடத்தும்படி, என்ஐஏவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதையடுத்து, 2016-ஆம் ஆண்டு விமானக் கடத்தல் தடுப்பு சட்டத்தின் 3-ஆவது பிரிவு, 1967-ஆம் ஆண்டு சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் 16, 15(1ஏ) ஆகிய பிரிவுகளின்கீழ் என்ஐஏ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதில் விமானத்தை கடத்தும் முயற்சி அல்லது விமானத்தை மோத முயற்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டவராக ஓமனைச் சோ்ந்த துணை விமானியின் பெயா் குறிப்பிடப்பட்டுள்ளது’ என்றனா்.

summary

Pilot Smith machar attack incident: NIA registers case.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments