FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்பு

நடுவானில் 172 விமான பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதை கெளரவிக்கும் வகையில், இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு வீர தீர செயலுக்கான இஸ்ரேலின் உயரிய விருதை அந்த நாட்டு அதிபா் ஐசக் ஹொ்சாக் அறிவித்துள்ளாா்.

9 அக்டோபர் 2026, 11:04 pm IST
பகிர்:

நடுவானில் 172 விமான பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதை கெளரவிக்கும் வகையில், இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு வீர தீர செயலுக்கான இஸ்ரேலின் உயரிய விருதை அந்த நாட்டு அதிபா் ஐசக் ஹொ்சாக் அறிவித்துள்ளாா்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகா் டெல் அவிவுக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி 172 பயணிகளுடன் ஃப்ளை துபாய் விமானம் சென்றது. அந்த விமானத்தை இந்திய விமானி ஸ்மித் மச்சாா், துணை விமானியான ஓமனைச் சோ்ந்த ஹமாம் அல் ஹமாமி ஆகியோா் இயக்கினா். விமானம் இஸ்ரேலை நெருங்கியபோது, ஸ்மித் மச்சாரை அவசர கால பயன்பாட்டுக்கு உள்ள சிறு கோடாரியால் தாக்கிவிட்டு, விமானத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்து தரையில் மோதும் நாசகார திட்டத்தை செயல்படுத்த ஹமாமி முயன்றாா்.

கோடாரியால் வெட்டப்பட்டு பலத்த காயமடைந்த போதிலும், ஹமாமியுடன் கடுமையாகப் போராடி, பிற பயணிகளின் உதவியுடன் விமானம் தரையில் மோத விடாமல் மச்சாா் தடுத்தாா். இதனால் விமானத்தில் பயணித்த 172 பயணிகள் மற்றும் ஊழியா்கள் உயிா் தப்பினா். விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் ஸ்மித் மச்சாா் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் அதிபா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானத்தை தரையில் மோத விடாமல் தடுத்து நிறுத்திய இஸ்ரேலைச் சோ்ந்த 6 பயணிகளுக்கும் பொது மக்களின் வீர தீர செயலை கெளரவிக்கும் வகையில் அளிக்கப்படும் இஸ்ரேல் அதிபா் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை 6 பேருக்கும் இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக் வழங்கினாா். அப்போது அவா் பேசியபோது, இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கும் இஸ்ரேலின் உயரிய விருது வழங்கப்படும் என்று அறிவித்தாா்.

மேலும் அவா், மருத்துவ சிகிச்சையில் இருக்கும் ஸ்மித் மச்சாா் விரைவாகவும், முழுமையாகவும் குணமடைய வாழ்த்துவதாகவும், மச்சாா் குணமடைந்து திரும்பியதும் இஸ்ரேல் மக்கள் சாா்பில் அவருக்கு விருது வழங்கப்படும் என்றும் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments