FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அனல், புனல் மட்டுமே போதாது!

இந்தியாவின் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை பற்றி...

24 அக்டோபர் 2026, 6:10 am
மேட்டூர் அனல் மின் நிலையம் (கோப்புப்படம்) - Express
பகிர்:

நீண்டு நின்ற கோடை வெப்பமும், வழக்கத்தைவிடக் குறைவான பருவமழையும் உணவு உற்பத்தியை மட்டுமல்லாமல், மின் உற்பத்தியையும் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றன. மத்திய மின்சார ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் பிரச்னையின் கடுமையை உணா்த்துகின்றன.

இந்தியாவின் அனல் மின் நிலையங்கள் போதுமான அளவு நிலக்கரி இருப்பு இல்லாமல் இருப்பது தெரியவந்திருக்கிறது. அக்டோபர் 19-ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் உள்ள 191 அனல் மின் நிலையங்களில் 96 அனல் மின் நிலையங்களில் மூன்று நாள்களுக்கும் குறைவான தேவைக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருப்பதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இத்தனைக்கும் அன்றாட நிலக்கரி உற்பத்தி செப்டம்பர் மாதம் 36% அதிகரித்திருக்கிறது.

அக்டோபர் மாதம் முதலே, அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு 5% குறையத் தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு அக்டோபர் மாத மின் சக்தி தேவை 45 முதல் 50 ஜிகாவாட் அதிகரித்திருக்கிறது. செப்டம்பர் மாத மின்சார உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி 560 மில்லியன் கிலோவாட் என்று கணக்கிடப் பட்டிருக்கிறது.

Advertisement

Advertisement

எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் வழக்கத்தை விட அதிகமான வெப்பம், அதிகரித்த மின்தேவை, புனல் மின் நிலையங்களின் உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் குறைவு உள்ளிட்ட காரணங்களால் அனல் மின் நிலையங்கள் கடுமையான அழுத்ததுக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவின் மின்சாரத் தேவையை வரும் மாதங்களில் நாம் எப்படி ஈடுகட்டப் போகிறோம் என்கிற கவலை எழுந்திருக்கிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தினசரி அதிகபட்ச மின்சாரத் தேவை அதிகரித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வழக்கத்தைவிடக் குறைவான பருவமழை காரண மாகப் புனல் மின் நிலையங்கள் முழுமையான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை. அதே நேரத்தில், அதிகரித்த வெப்பமும், பருவமழைக் குறைவும் அன்றாட உபயோ கத்துக்கான மின்சாரத் தேவையையும், பாசனத்துக்கான வேளாண் தேவையையும் அதிகரித்திருக்கின்றன. அதனால், நமது மின்சாரத் தேவைக்கு அனல் மின் நிலையங்களை அதிகமாக சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது, அனல் மின் நிலையங்களின் உற்பத்தி 13.3% அதிகரித்திருக்கிறது. ஆனால், புனல் மின்நிலையங்களின் உற்பத்தி 20% குறைந்துவிட்டது. இத்தனைக்கும் நமது மின்சாரத் தேவை 55% புதைபடிம எரிசக்தி சாராமல் இருந்து வருகிறது. போதுமான சேமிப்புத் திறன் உள்ள கலன்கள் (பேட்டரிகள்) இல்லாததால், உச்சகட்ட மின்சாரத் தேவையின்போது புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி கைகொடுப்பதில்லை என்பது மிகப் பெரிய பலவீனம்.

உக்ரைன் - ரஷியா போரும், மேற்காசியாவில் தொடரும் மோதல் களும் சர்வதேசச் சந்தையில் நிலக்கரியின் விலையைக் கடுமையாக உயர்த்தி இருக்கின்றன. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது, இறக்குமதி நிலக்கரியின் விலையை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு சர்வதேசச் சந்தையில் நிலக்கரியின் விலை உயர்த்திருக்கும் நிலையில், இறக்குமதி என்பது சாத்தியமில்லை என்பது மட்டுமல்ல, நம்பகமானதும் அல்ல.

நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இல்லை. அரசு நிறுவனமான 'கோல் இந்தியா'வைத் தனது முழுத்திறனுடன் மின்சார உற்பத்தியை அதிகரிக்கத் தூண்டியிருக்கிறது. இந்த ஆண்டு இறுதி வரையில் அக்டோபர் மாதத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய அனல் மின் நிலையங்கள் தங்களது அதிகபட்ச மின்சார உற்பத்தியை முன்னெடுக்கப் பணிக்கப்பட்டிருக்கின்றன.

அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி ஒதுக்கீடு, செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 36% அதிகரித்திருப்பதாக நிலக்கரி அமைச்சகம் தெரிவிக்கிறது. அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்கு 475 சரக்கு ரயில் பெட்டிகள் நிலக்கரி பல்வேறு அனல் மின் நிலையங்களுக்கு போர்க்கால அடிப்படையில் அனுப்பப்பட்டிருக்கின்றன. இதன்மூலம், எந்தவொரு அனல் மின் நிலையமும் நிலக்கரி இல்லாமல் உற்பத்தியை நிறுத்திவிடாது என்று அமைச்சகம் உறுதி அளிக்கிறது.

2003 மின்சாரச் சட்டம் அமலுக்கு வந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஓரளவுக்குப் பற்றாக்குறை, கட்டமைப்புக் குறைபாடுகள் உள்ளிட்டவை சரி செய்யப்பட்டிருக்கின்றன. மின் பகிர்மான நிறுவனங்கள்கூட, முன்புபோல இழப்பில் இயங் காமல், ஓரளவுக்கு லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

2024-25-க்கும் 2035-36-க்கும் இடையிலான பத்து ஆண்டுகளில், உச்சகட்ட மின்சாரத் தேவை ஆண்டுதோறும் 5.58% அதிகரிக்கும் என்பது மத்திய மின்சார ஆணையத்தின் எதிர்பார்ப்பு. அதை எதிர் கொள்ள மின்சார உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மின்தடை, மின்வெட்டு இல்லாமல் பயனாளிகளின் வாங்கும் சக்திக்கு ஏற்ற விலையில் மின்சாரம் வழங்கப்படுவதும் அவசியம். அனல், புனல் மின் நிலையங்களால் மட்டுமே நமது தேவையை நிறைவு செய்துவிட முடியாது.

summary

Heat and steam alone are not enough

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments