FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தீர்வு வன்முறையல்ல; பொறுமை!

மருத்துவமனையில் மருத்துவர்களைத் தாக்கும் போக்கு அதிகரித்து வருவது பற்றிய தலையங்கம்....

29 அக்டோபர் 2026, 4:18 am
மருத்துவர்கள் - கோப்புப்படம்.
பகிர்:

மருத்துவமனையில் மருத்துவர்களைத் தாக்கும் போக்கு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. ஸ்பெயின், துருக்கி போன்ற நாடுகளில் மருத்துவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக கடும் சட்டம் இயற்றி உள்ளனர். இந்தியாவில் 77.3 சதவீத மருத்துவர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது தாக்குதலை எதிர்கொள்வதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

மொஹாலி மாவட்டம், கரர் நகரில் உள்ள உள்ளூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஹர்மன்பிரீத் கெளர் கடந்த சனிக்கிழமை (அக். 24) இரவு 8 மணியளவில் பணியில் இருந்துள்ளார். அப்போது மருத்துவமனைக்கு வந்த ஆண் நோயாளி, மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை கீழே தள்ளி, அவரது ஆடையைக் கிழித்துத் தாக்கி உள்ளார். அங்கிருந்த பொருள்களையும் சேதப்படுத்தி உள்ளார்.

சப்தம் கேட்டு வந்த மருத்துவமனை ஊழியர்கள் ஒரு மணி நேரம் போராடி நோயாளியைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் பணியில் இருந்த அந்தப் பெண் மருத்துவர், நோயாளியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

இதுபோன்று மருத்துவர் தாக்கப்படுவது என்பது விதிவிலக்கான சம்பவம் என்று கருதிவிட வேண்டாம். தமிழகத்தில் இருந்து மணிப்பூர் வரை இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் தனது தாயின் புற்றுநோய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அவரது மகன் புற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் பாலாஜி ஜகந்நாதனை கடந்த 2024 நவ. 13-ஆம் தேதி 7 முறை கத்தியால் குத்தியது அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் மருத்துவர் உயிர் தப்பினார்.

பாதுகாக்க வேண்டிய காவலரே களேபரத்தில் ஈடுபட்ட சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியது. காவலர் தங்கப்பாண்டி தலைவலிக்கு சிகிச்சை பெறுவதற்காக திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கடந்த ஜூலை 23-ஆம் தேதி இரவு சென்றுள்ளார். சீருடையில் இல்லாமல் மதுபோதையில் சென்ற அவர், அங்கு ரகளையில் ஈடுபட்டு மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்தினார். இவரது செயலுக்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அடுத்த நாள் மருத்துவமனைக்கு சென்று செவிலியரிடம் வருத்தம் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம், பீதரில் உள்ள பீதர் மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் மருத்துவச் சான்று விவகாரத்தில் மருத்துவர் துகாராம் மச்சீந்திராவை நோயாளியின் உறவினர்கள் கடந்த மே 21-ஆம் தேதி கடுமையாகத் தாக்கினார்கள்.

நோயாளிக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் மருத்துவரை உயிருடன் விடமாட்டோம் என்றும் எச்சரித்தனர். இந்த விவகாரத்தில் நோயாளியின் உறவினர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டம் டோம்பிவலியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக, பிறந்த பச்சிளங்குழந்தையை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியதால், மூன்று மருத்துவர்களை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிவசேனை மாநகராட்சி கவுன்சிலர் ரமேஷ் சுக்ரியா மாத்ரேவும், அவருடன் சென்ற கும்பலும் கடந்த ஜூலை 6-ஆம் தேதி தாக்கியது.

இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் பிணை வழங்கியதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து ரமேஷ் சுக்ரியா மாத்ரே உச்சநீதிமன்றத்தை நாடினார். "இதுபோன்று மருத்துவர்களின் மீது தாக்குதல் நடத்துபவர்கள் ஒரு நிமிஷம்கூட சுதந்திரமாகத் தெருக்களில் உலவத் தகுதியற்றவர்கள். இந்தத் தகவல் அனைவரையும் சென்றடைய வேண்டும்' என்று நீதிபதி விக்ரம் நாத் குறிப்பிட்டார்.

சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு நாளும் நோயாளிகள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆயிரக்கணக்கில் திரளும்போது எல்லோருமே தங்களுக்கு முதலில் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று விரும்புவதால் குழப்பம் ஏற்படுகிறது. போதிய எண்ணிக்கையில் ஊழியர்களும், மருத்துவர்களும் இல்லாததால் பெரும் சிரமத்தை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

நோய் முற்றிய நிலையில் வருபவர்களுக்கு முறையாக சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் போகும்போது அதை விளக்கினாலும் புரியாத காரணத்தால் உறவினர்களின் கோபம் மருத்துவர்கள் மீது பாய்கிறது. என்னதான் காரணம் கூறினாலும் மருத்துவர்களைத் தாக்குவது என்பது தவறானது; ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஏற்கெனவே இருக்கும் பணி நெருக்கடியில் தங்களுக்குப் பாதுகாப்பும் இல்லை என்று மருத்துவர்கள் கருதினால் அது மீண்டும் நோயாளிகளையே பாதிக்கும்.

இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, முதல் நடவடிக்கையாக மருத்துவர்களைத் தாக்குபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். அதைவிட முக்கியமாக, எல்லா மருத்துவமனைகளிலும் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் நிறுவப்பட வேண்டும்.

மருத்துவமனைகள் வணிகமயமாகிவிட்டதும், மருத்துவர்கள் தங்கள் பணியை சேவையாகக் கருதும் போக்குக் குறைந்து வருவதும்கூட அதிகரித்துவரும் மருத்துவர்கள் மீதான தாக்குதலுக்குக் காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன்கண் செயல்.

ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தைச் செலுத்துதலாகும்.

திருக்குறள் (எண் 832) அதிகாரம்: பேதைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments