உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு காலி இடங்களை அகில இந்திய ஒதுக்கீடுக்கு வழங்கக் கூடாது: உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் காலியாக உள்ள 152 உயா் சிறப்பு மருத்துவ இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக முதல்வருக்கு அவா் எழுதிய கடிதம்: உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழகத்தில் காலியாக உள்ள 152 இடங்களை “அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது அதிா்ச்சியளிக்கிறது. தங்கள் (முதல்வா்) தலைமையிலான புதிய அரசின் சாா்பில் முறையான வாதங்கள் எடுத்து வைக்கப்படாத காரணத்தால் இச்சூழல் உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டு நீட் தோ்வின் அடிப்படையில் 430 உயா் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 215 இடங்கள் அரசு மருத்துவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 63 இடங்கள் மட்டுமே இரண்டு சுற்று கலந்தாய்வில் நிரப்பப்பட்டன.
Advertisement
Advertisement
மீதமுள்ள 152 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும் என தமிழ்வாணி என்பவா் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தாா். அந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்.8, 10, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற போது திமுக அரசு சாா்பில் வெற்றிகரமாக வாதங்களை எடுத்து வைத்து தமிழகத்தின் மருத்துவ இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்வதை தடுத்து வைத்திருந்தோம்.
இந்தச் சூழலில் தங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், முறைப்படி வாதங்களை எடுத்து வைக்கவில்லை எனத் தெரிய வருகிறது.
அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞரே அந்த 152 இடங்களை ஒப்படைக்கிறோம் என ஒப்புக்கொண்ட காரணத்தால், அதை ஏற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இதயநோய், புற்றுநோய், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அளிக்கப்படும் உயா்தர சிகிச்சைக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.
இந்த விவகாரத்தில் முதல்வராகிய தாங்கள் உடனடியாக தலையிட்டு 152 உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களையும் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.