கல்வி இருக்க வேண்டியது ஒத்திசைவுப் பட்டியலிலா? மாநிலப் பட்டியலிலா?
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய கல்வி இருக்க வேண்டியது ஒத்திசைவுப் பட்டியலிலா? மாநிலப் பட்டியலிலா? என்பது பற்றி..
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மத்திய, மாநில அரசுகளுக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒத்திசைவுப் பட்டியல், மாநிலப் பட்டியல் என அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
கடந்த 1976-இல் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சியில் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட காலத்தில், அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அன்று முதல் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என குரல் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கல்வியைச் சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமெனில், அதை ஒத்திசைவுப் பட்டியலிலேயே வைக்க வேண்டும் என்றும், மாநிலப் பட்டியலில் இருந்தால்தான், சமூகத்தில் நிலவும் பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து கல்வியை முன்னேற்றத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
Advertisement
Advertisement
கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இருக்க வேண்டுமா?, மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டுமா? என்று கல்வியாளர்களிடம் கேட்டோம். அவர்களது கருத்துக்களை காண்போம்.
கல்விக் கொள்கையில் கூட்டு முயற்சி தேவை
தேசிய கல்வி கொள்கை 2020 சுதந்திரத்திற்குப் பிறகு வரையப்பட்ட இந்தியாவின் மூன்றாவது கல்விக் கொள்கை ஆகும். டாக்டர் ராதாகிருஷ்ணன் கமிஷன் (1948-49) உயர்கல்வியிலும், கோத்தாரி கமிஷன் அறிக்கை (1965) பொதுக் கல்வியிலும் கவனம் செலுத்தியிருந்தது. 1968-இல் வரையப்பட்ட முதல் தேசிய கல்விக் கொள்கையின் போது கல்வி மத்திய பட்டியலில் இருந்தது. 1976 இல் செய்யப்பட்ட 46-ஆவது அரசமைப்புத் திருத்தம் கல்வியை பொது பட்டியலில் சேர்த்தது. அதன் பிறகு இரண்டாவது கல்விக்கொள்கை 1986-இல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 1992 -இல் ஒரு செயல் திட்டம் வெளியிடப்பட்டது. பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்துரையாடிய பிறகு, கரோனா பெருந்தொற்று காலத்தில் 2020 -இல் தேசிய கல்வி கொள்கை 2020 வெளியிடப்பட்டது. உண்மையில், தேசிய கல்வி கொள்கை 2020, டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு அறிக்கை (2015) வடிவில் ஒத்திகை பார்க்கப்பட்டது. பின்னர் கஸ்தூரி ரங்கன் குழு இறுதியாக தேசிய கல்வி கொள்கை 2020-இன் அறிக்கையை உருவாக்கியது. இந்த மூன்று தேசிய கொள்கையிலும் சில பொது பிரச்சினைகள் உள்ளன. பரந்த தேவைகள் நாட்டில் இருப்பதால் பல பொதுவான சிக்கல்கள் உள்ளன. இந்த சிக்கலான நிலையில்தான், கல்வியை பொதுப்பட்டியலில் சேர்க்கும் பிரச்சினையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுப்பட்டியல் குறித்த கொள்கைகள் விஷயத்தில், அரசியலைத் தவிர்த்துவிட்டு மாணவர்களின் எதிர்காலம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டையும் உள்ளடக்கிய சில வெற்றிக்கு வித்திடும் தீர்வுகளில் கவனம் செலுத்துவது அவசியமானது. சுகாதாரம் (மாநில பட்டியல்) மற்றும் கல்வி (பொது பட்டியல்) ஆகியவை எந்தவொரு அரசாங்கத்தின் மிக முக்கியமான இரண்டு சமூக உள்கட்டமைப்பு விஷயங்கள் ஆகும். சுகாதாரம் நீண்ட ஆயுளை உறுதி செய்யும் அதே வேளையில், கல்வி பொருளாதார செழிப்பை உறுதி செய்கிறது. இவை இரண்டும் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்கிறது. சுகாதாரம் மாநில பட்டியலில் உள்ளது என்றாலும், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் பல மருத்துவமனைகள் மற்றும் திட்டங்கள் உள்ளன. அவை மத்திய பட்ஜெட் மற்றும் பிற நிதி வடிவங்களில் இருந்து நிர்வகிக்கப்படுகின்றன. பொதுப் பட்டியலில் உள்ள கல்வி ஒரு சுவாரஸ்யமான கலவையைக் கொண்டுள்ளது. இதில் பல சிக்கல்கள் இருந்தாலும், எனது கவனம் மூன்று விஷயங்களில் உள்ளது - பள்ளிகள், உயர்கல்வியில் சேர்க்கை மற்றும் உயர்கல்விக்குப் பிறகு பட்டப்படிப்பு. முதலில் பள்ளிக் கல்வியுடன் தொடங்குவோம்.
உயர்கல்வியுடன் ஒப்பிடும்போது பள்ளிக் கல்வியின் அளவு மிகப்பெரியது. இந்தியா முழுவதும் சுமார் 14.7 லட்சம் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2.6 லட்சம் பள்ளிகள் நகர்ப்புறத்திலும் மீதமுள்ளவை கிராமப்புறத்திலும் உள்ளன. இவற்றில், சுமார் 75% அரசுப் பள்ளிகள் (70% அரசு நடத்தும் பள்ளிகள், 5% அரசு உதவி பெறும் பள்ளிகள்). இப்பள்ளிகள் அடிப்படை கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை சுமார் 24 கோடி மாணவர்களுக்கு கல்வியை வழங்குகின்றன. இதில் 1 கோடி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளிக் கல்வியில் மாநில அரசுகளின் பங்கு தனித்துவமானது. குறிப்பாக பள்ளிக் கல்வியை வளர்ப்பதற்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. மேலும் இதில் முன்னோடியாகவும் உள்ளது.
பெரும்பாலான பள்ளிகள் மாநில அரசுகளால் நடத்தப்படுகின்றன என்பதையும், அவற்றில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் உள்ளன என்பதையும் கருத்தில் கொண்டு, மத்திய-மாநில உறவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இதை ஒரு வலுவான மத்திய-மாநில-பஞ்சாயத்து உறவாக மாற்ற பஞ்சாயத்துக்களையும் இதில் இணைத்துக் கொள்வது முக்கியம். மகாத்மா காந்தியின் "கிராம சுயராஜ்ஜியத்தை" யதார்த்தமாக்க கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசின் கூடுதல் உதவி மற்றும் ஆதரவு அவசியமாகிறது.
Should education be in the Concurrent List or the State List?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.