8.7.1976: மூன்று விண்வெளி கலங்களை இணைக்க ரஷியா திட்டம்
மூன்று விண்வெளி கலங்களை இணைக்க ரஷியா திட்டமிட்டிருப்பது பற்றி...
மாஸ்கோ, ஜூலை. 7 - விண்வெளியில் மூன்று செயற்கைக் கோள்களை ஒன்றாக இணைக்க ரஷிய திட்டமிட்டுள்ளது; ஏற்கெனவே இரு கலங்கள் விண்வெளியில் ஏவப்பட்டுள்ளன; மூன்றாவது செயற்கைக் கோள் இன்னும் சில வாரங்களில் செலுத்தப்படும்.
இரு விண்வெளி வீரர்கள் கொண்ட 'சோயுஸ்- 21' என்னும் விண்வெளிக்கலத்தை செவ்வாயன்று ரஷியா அனுப்பியது. அதுவும் இப்போது பூமியை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
இரு வாரங்களுக்கு முன்பு 'சல்யூட்-5' என்னும் விண்வெளி நிலையத்தை ரஷியா விண்ணில் செலுத்தியுள்ளது. அது பூமியை வலம் வந்து கொண்டிருக்கிறது.
Advertisement
Advertisement
இப்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள 'சோயுஸ்-21' என்னும் விண்கலம் இந்த "சல்யூட்-5" விண்வெளி நிலையத்துடன் புதன்கிழமை இணைந்தது. பின்னர் அந்த விண்வெளி நிலையத்துக்குள் இரு வீரர்களும் சென்று ஆராய்ச்சி நடத்துவர்.
இன்னும் 4 அல்லது 5 வாரங்களில் மற்றொர் விண்வெளிக் கலத்தையும் ரஷியா விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதிலும் இரு வீரர்கள் இருப்பார்கள்; ஏற்கனவே விண்வெளியில் இணைந்துள்ள சல்யூட் - 5, சோயுஸ் - 21 கலங்களுடன் இந்தப் புதிய கலமும் இணையுமாம். இவ்வாறு மூன்று விண்வெளிக் கலங்கள் இணைந்த ”3 அடுக்கு விண்வெளி நிலையம்” பூமியைச் சுற்றி வந்து ஆராய்ச்சி நடத்துமாம்.
இத்தகைய மூன்று அடுக்கு விண்கல திட்டம் முன்பு எப்போதும் நடந்திராத ஒரு புதுமையாகும். ...
செவ்வாய் பரப்பில் நிலாவில் உள்ளது போன்ற பள்ளங்கள்
பாசடோ, ஜூலை 6 - நிலாவின் பள்ளங்கள் நிறைந்த மேற்பரப்பு போலவே செவ்வாய்க் கிரகத்தின் மேல் பரப்பும் இருப்பதாக செவ்வாயைச் சுற்றும் 'வைசிங் - 1' கலம் அனுப்பி உள்ள படங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
வைகிங் -1' கலம் ஜூலை 17த் தேதி செவ்வாயில் இறங்க இருப்பது தெரிந்ததே. இதைத்தொடர்ந்து "வைகிங் 2" என்ற மற்றோர் விண்கலமும் செப்டம்பர் மாத வாக்கில் நிலாவில் இறங்க இருக்கிறது. அது எங்கே இறங்கினால் பாதுகாப்பாக இருக்கும் என்பதை ஆராய "வைகிங்-1” கலம் செவ்வாயைச் சுற்றி வந்து படம் பிடித்தது.
செவ்வாயின் பரப்பில் பல பள்ளங்கள் இருப்பது இந்தப் படங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இந்தப் பள்ளங்களுக்கு இடையில் மென்மையான சமவெளிப் பகுதிகள் உள்ளன. காற்று வீசியதில் மணல் நிரம்பிப் போன புதைப் பள்ளங்களும் அங்கு உள்ளன. செவ்வாயில் உள்ள பள்ளங்கள் சந்திரனில் உள்ள பள்ளங்களைப் போலவே இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதற்கிடையில் "வைகிங்-1" செவ்வாயில் இறங்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் பத்திரமானது தானா என்பதை போர்ட்டோரிகோவில் அரெசிபோ என்னும் இடத்தில் உள்ள பெரிய ராடார் கருவி ஆராய்ந்து வருகிறது.
8.7.1976: Russia plans to link three spacecraft.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.