4.11.1976: யு.எஸ். ஜனாதிபதியாக கார்ட்டர் தேர்வு
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
வாஷிங்டன், நவ. 3 - அமெரிக்காவின் 39-வது ஜனாதிபதியாக, டெமாகிரடிக் கட்சியைச் சேர்ந்த ஜிம்மி கார்ட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கு நடந்த தேர்தலில் அவர் ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி ஜெரால்ட் போர்டைத் தோற்கடித்தார்.
அமெரிக்காவின் புதிய உதவி ஜனாதிபதியாக டெமாகிரடிக் கட்சியைச் சேர்ந்த வால்டர் மாண்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்க பார்லிமெண்டின் இரு சபைகளிலும், டெமாகிராட் கட்சியினர் மீண்டும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்தியாவில் அமெரிக்க தூதராக இருந்த டேனியல் மொய்னிஹன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப். கென்னடியின் தம்பி எட்வர்ட் கென்னடி, முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஹியூபர்ட் ஹம்ப்ரி ஆகியோர் டெமாகிரடிக் கட்சியின் சார்பில் அமெரிக்க செனட்டுக்குத் தேர்த்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கவர்னர்கள்
இரு லட்சாதிபதிகளும் ஒரு பெண் விஞ்ஞானியும் புதிய கவர்னர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேற்கு வெர்ஜீனியா கவர்னராக டெமகிராட் ஜாவ் ராக்பெல்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெயித்த மற்றொரு லட்சாதிபதி டூபாண்ட்.
14 கவர்னர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.
காட்டர் செய்தி
வெற்றி செய்தி வந்தபோது அட்லாண்டாவில் ஒரு கூட்டத்தில் கார்ட்டர் கலந்து கொண்டிருந்தார்.
நாட்டை ஐக்யப்படுத்தி, அதை மீண்டும் சிறப்புடையதாகச் செய்ய ஓர் அறிக்கையில் அவர் உறுதி கூறினார்.
போர்ட் ஒரு நல்ல, கண்யமான நபர் என அவர் வர்ணித்தார்.
63 வயது போர்டுக்கு இது மிக மோசமான தோல்வியாகும். தன் 28 ஆண்டு அரசியல்வாழ்வில் அவர் முதல் தேசிய தேர்தலில் இறங்கினார். வாடர்கேட் ஊழல் காரணமாக பதவியிலிருந்து நிக்ஸன் விலகியதை அடுத்து ஜனாதிபயாக நியமிக்கப்பட்ட போர்ட் மக்கள் ஆதரவு பெற பெரு முயற்சி, செய்தார். அவர் முயற்சியை 52 வயது கார்ட்டர் முறியடித்தார்.
எனக்கு வாழ்வு இருக்கிறது. என் மனைவியும், குடும்பமும் இருக்கிறார்கள். தோல்வி என்னை அழித்து விடாது என்று தன் நண்பர்களிடம் போர்ட் கூறினார். ...
கார்ட்டருக்கு இந்திரா காந்தி பாராட்டு
புதுடில்லி, நவ. 3 - ஜிம்மி கார்ட்டர் யு.எஸ். ஐனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு பாராட்டு தெரிவித்து அவருக்கு பிரதமர் இந்திரா காந்தி ஒரு செய்தி அனுப்பியுள்ளார்.
“ஜனாதிபதி தேர்தலில் உங்களுக்குக் கிடைத்துள்ள வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்துக் கொள்ளுவதில் இந்திய சர்க்காரும் மக்களும் பங்கு கொள்கின்றனர்” என்றும் பிரதமர் இச்செய்தியில் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கு மிடையில் உள்ள உறவு முறையை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். நமக்கிடையில் உறவு முறை நிலவுவது, சமாதானத்தையும் ஸ்திரத் தன்மையையும் உறுதிப்படுத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் இந்திரா காந்தி கூறினார்.
தற்போதுஇருந்து வரும் நமது பரஸ்பர நல்லுணர்வையும் ஒத்துழைப்பையும் பேணி வளர்த்து விரிவுபடுத்தி வரவேண்டுமென்பது எங்கள் மனப்பூர்வமான விருப்பமாகும் என்றும் பிரதமர் கூறினார்.
Jimmy Carter elected as U.S. President
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.