11.11.1976: வங்கக் கடலில் புயல் சின்னம் - தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
சென்னை, நவ. 10- வங்கக் கடலில் புயல் சின்னமொன்று உருவாகியுள்ளது. இது கடலூலிருந்து தென்கிழக்கில் சுமார் 560 கிலோமீட்டர் (சுமார் 350 மைல்) தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்கு மேற்கு திசையில் நகரக்கூடும்.
இதன் காரணமாக அடுத்த இரு தினங்களில் தமிழ்நாட்டிலும், புதுவை யூனியன் பிரதேசத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும். இதே காலத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் நெல்லூர், பிரகாசம் மாவட்டங்களிலும் ஆங்காங்கே பலத்த மழை பெய்யலாம்.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அடுத்த இரு தினங்களில் காற்றுடன் கூடிய கனமழை இருக்கும்.
சென்னையிலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கும். வியாழனன்று மழை அதிகரிக்கக்கூடும்.
ராஜ்யசபையில் 59 ஷரத்துக்களும் அங்கீகாரம் - அரசியலமைப்பு திருத்த மசோதா 2வது கட்டம் பூர்த்தி
புதுடில்லி, நவ. 10 - அரசியலமைப்பு 44வது திருத்த மசோதாவின் 59 ஷரத்துக்களையும் எவ்வித திருத்தமும் இல்லாமல் ராஜ்யசபை இன்று நிறைவேற்றியது.
ஷரத்துக்களுக்கு அங்கத்தினர்கள் முன்னதாகப் பிரேரித்த எல்லா திருத்தங்களும் வாபஸ் பெறப்பட்டன அல்லது சபையால் நிராகரிக்கப்பட்டன. இத்துடன் மசோதாவின் 2வது கட்ட பரிசீலனை முடிவடைந்தது. நாளை இறுதி வாசிப்பு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
மசோதாவில் 8 ஷரத்துக்கள் மீது வோட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி அங்கத்தினர்கள் வற்புறுத்தினர். இவை பெரும்பான்மையான மெஜாரிட்டியுடன் நிறைவேற்றப்பட்டன. மற்றெல்லா ஷரத்துக்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
எதிர்க்கட்சியினர் வோட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிய ஷரத்துக்களில், தேச விரோத நடவடிக்கைகள் சம்பந்தமான ஷரத்து, லோக சபை, மாநில சட்டசபைகளின் பதவிக் காலத்தை உயர்த்த வகை செய்யும் ஷரத்து, மாநிலங்களுக்கு மத்திய ஆயுதப்படையை அனுப்ப வகை செய்யும் ஷரத்து முதலியவை அடங்கும். ...