முகப்பு

24.11.1976: கருணாநிதி மீதான கோதுமை ஊழல் வழக்கு 30-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

24.11.1976: கருணாநிதி மீதான கோதுமை ஊழல் வழக்கு 30-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது
24.11.1976 - Dinamani
பகிர்:

சென்னை, நவ. 23 - தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மீது மத்ய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) தொடர்ந்த கோதுமை ஊழல் வழக்கு இன்று விசேஷ கோர்ட் நீதிபதி எஸ். சாமிக்கண்ணு கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் தரப்பில் வேண்டிக்கொண்டபடி இம்மாதம் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோர்ட்டில் மு. கருணாநிதியும், முன்னாள் அமைச்சர் ப. உ. சண்முகமும் பிரசன்னமாக இருந்த கோர்ட் ஆரம்பமானதும் கருணாநிதி தரப்பில் ஆஜராகும் வக்கீல்களில் ஒருவரான கே. ராமசாமி நீதிபதியிடம் பிராசிகூஷன் தரப்பில் 550-க்கும் மேற்பட்ட தஸ்தாவேஜிகளைத் தாக்கல் செய்திருப்பதால் அவைகள் அனைத்தையும் பார்த்துப் பரிசீலனை செய்ய தங்களுக்கு நேரம் போதாமல் இருக்கிறதென்றும், இன்னும் இரண்டு வார காலம் அவகாசமாவது கொடுத்து அதுவரை வழக்கைத் தள்ளிவைக்க வேண்டுமென்று கோருவதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்க தரப்பில் சி.பி.ஐ.க்காக பிராசிகூஷன் தரப்பில் ஆஜராகும் என்.டி. வானமாமலை இக்கோரிக்கையை உடனடியாக எழுந்து எதிர்த்தார். சாதாரணமாக வழக்கை சீக்கிரமாக நடத்தி முடிக்க எதிரி தரப்பில் அவசரப்படுவார்கள் என்றும், இவ்வாறு காலம் தாழ்த்துவது ஏன் என்று தனக்குப் புரியவில்லை என்றும் கூறினார்.

Advertisement

Advertisement

நீதிபதி சாமிக்கண்ணு இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, எதிரி தரப்பில் போடப்பட்ட கோரிக்கையைத் தான் ஏற்றுக்கொள்ள விரும்புவதாகவும், ஆனால் இரண்டு வார கால அவகாசம் தேவையில்லை; ஒரு வாரமே போதுமானது என்று தான் கருதுவதாகவும், ஆகவே எதிரி தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை இம்மாதம் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தார்.

இனி எக்காரணத்தைக் கொண்டும் மேற்கொண்டு அவகாசம் தரப்படமாட்டாது என்று எதிரி தரப்பினருக்கு நீதிபதி அறிவுறுத்தினார். ...

உணவு கார்ப்பரேஷனுக்கு வர்த்தக, ரிசர்வ் பாங்குகள் கடனுதவி ரூ. 3000 கோடி

புதுடில்லி. நவ. 23 - இந்திய உணவு கார்ப்பரேஷனுக்கு வர்த்தக பாங்குகளும், ரிசர்வ் பாங்கும் ரூ. 3 ஆயிரம் கோடிவரை நிதி உதவியளித்திருக்கிறது. உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யவும், 1.7 கோடி டன் உணவு தானிய இருப்பை வைத்திருக்கவும் இந்தத் தொகை பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பஞ்சாப் நேஷனல் பாங்கு தலைவர் டி. ஆர். துலி இன்று இங்கு நிருபர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் வர்த்தக பாங்குகள் சுமார் ரூ. 2200 கோடி உணவு கார்ப்பரேஷனுக்குக் கடன் வழங்கியிருப்பதாகவும், ரிசர்வ் பாங்கு ரூ. 700லிருந்து 800 கோடி வரை உதவியுள்ளதாகவும் தெரிவித்தார்.

உணவு கார்ப்பரேஷனுக்கு வர்த்தக பாங்குகள் அளித்த மொத்த கடனில் 8.6 சதவிகிதம் பஞ்சாப் நேஷனல் பாங்கு வழங்கியுள்ளது. பஞ்சாப் நேஷனல் பாங்கு இதுவரை அளித்திருக்கும் தொகை ரூ. 180 கோடி என்று அவர் சொன்னார். ...

summary

24.11.1976: The wheat scandal case against Karunanidhi has been adjourned until the 30th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.