முகப்பு

27.11.1976: 36 மணி நேரம் வெள்ளத்தில் சிக்கிய சென்னை ரயில்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

27.11.1976: 36 மணி நேரம் வெள்ளத்தில் சிக்கிய சென்னை ரயில்
26.11.1976 - Dinamani
பகிர்:

சென்னை, நவ. 26 - சென்னைக்கு வந்து கொண்டிருக்கையில் இருபுறமும் தண்டவாளத்தில் வெள்ளம் ஓடிய காரணத்தால் முன்னுக்கும் போக முடியாமல், பின்னுக்கும் போக முடியாமல் ஆந்திராவில் வெங்கடகிரி ரயில் நிலையம் அருகே 36 மணி நேரம் வெள்ளத்தின் நடுவே சிக்கித்தவித்த ஹெளரா - சென்னை மெயில் வண்டி ஒருவழியாக இன்று மாலை அங்கிருந்து கிளம்பிவிட்டது.

வியாழக்கிழமை அதிகாலை சென்னை வந்திருக்க வேண்டிய இந்த ரயில் வண்டி இருபுறமும் ஓடிய வெள்ளத்தால் நேற்று அதிகாலையிலிருந்து இன்று மாலை வரை இருந்த இடத்திலேயே நிற்க வேண்டியதாயிற்று.

இந்த ரயில் வண்டியின் சுமார் 800 பிரயாணிகளும் கொட்டும் மழையையும், வயிற்றைக் கிள்ளும் பசியையும் சமாளித்து வழி பிறக்காதா என்று வேண்டி தங்களது ரயில் பெட்டிகளிலேயே நேரத்தைக் கழிக்க நேரிட்டது.

Advertisement

Advertisement

எனினும் பின்னர் இப்பயணிகளின் பசி தீர்க்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். சென்னை தாம்பரத்திலிருந்து விசேஷ ஐ.ஏ.எப். விமானம் ஒன்று வெங்கடகிரிக்குப் பறந்து சென்று சுமார் 2000 உணவுப் பொட்டலங்களைப்போட்டது. தென் பிராந்திய ரயில்வே பிரதம வைத்திய அதிகாரியான டாக்டர் ராம்தாஸ் இந்த ரயிலில் சிக்கியவர்களில் ஒருவர். அவர் நெல்லூர் கலெக்டர், வெங்கடகிரி தாசில்தார் ஆகியோரின் உதவியுடன் பிரயாணிகளுக்குத் தேவையான வைத்திய உதவியை அளித்தார்.

இதற்கிடையே ரயில்வே அதிகாரிகள் இரவு பகலாக ஓயாது பாடுபட்டு வெங்கடகிரி-ரேணிகுண்டா பாதையில் ஏற்பட்ட உடைப்பைச் சரிப்படுத்தினர்.

பின்னர் அந்த ரயில் வண்டி அங்கிருந்து இன்று மாலை 4-30 மணிக்கு அரக்கோணம் நோக்கிக் கிளம்பியது. அது மாலை 6.30 மணிக்கு ரேணிகுண்டா வந்து சேர்ந்த போது அலுத்துப் போன பிரயாணிகளுக்கு சூடான உணவும் பானங்களும் வழங்கப்பட்டன.

இந்த ரயில் வண்டி அரக்கோணம் வந்து அத்துடன் பின்னர் முடிவடையும். அதன் பயணிகள் மீட்டர் கேஜ் பாதை மூலம் விசேஷ ரயில் வண்டிகள் மூலம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியே சென்னை எழும்பூர் வந்து சேருவர்.

கூடுதல் பயணிகள் வருகையை முன்னிட்டு எழும்பூரிலிருந்து மேலும் அதிக பஸ்களை விட பல்லவன் போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஹைதராபாத்-சென்னை எக்ஸ்பிரஸ் தெனாலி அருகே புயலில் சிக்கிக் கொண்டபோது அந்த ரயில் வண்டியின், சுமார் 800 பயணிகளும் இதே போலத் தவித்தனர்.

சென்னை ரயில்கள் அரக்கோணத்திலேயே நிறுத்தப்படுகின்றன

சென்னை, நவ. 26- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தொடர்ந்து இரண்டாவது நாளாக, வெள்ளியன்றும் எந்த ரயிலும் புறப்படவுமில்லை, வந்து சேரவும் இல்லை.

சென்னை - அரக்கோணம் இடையிலும் சென்னை கூடூர் இடையிலும் ரயில் பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதே இதற்குக் காரணமாகும்.

சில இடங்களில் ரயில் பாதைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வேறு சில இடங்களில் இருப்புப் பாதையின் கீழுள்ள மண் அரித்துவிட்டுள்ளது. சில இடங்களில் ரயில் தண்டவாளங்கள் பெயர்ந்துள்ளன.

கூடூர் - ரேணிகுண்டா இடையிலேயும் ரயில் சர்வீஸ் பாதிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் வழியாக சென்னை வரும் ரயில்கள் யாவும் அரக்கோணத்திலேயே நிறுத்தப்பட்டு, மீண்டும் அங்கிருந்தே வெளியூர்களுக்குக் கிளம்பிச் சென்றன.

கூடூர் வழியாகச் சென்னை அரக்கோணத்திற்குத் வரும் ரயில்களும் திருப்பி விடப்பட்டன. அவையும் அங்கேயே நிறுத்தப்பட்டு, மீண்டும் அங்கிருந்து அப்படியே வெளியூர் களுக்கு விடப்படுகின்றன. ...

summary

27.11.1976: Chennai train stranded in floodwaters for 36 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.