24.10.1976: அரசியல் சாசன மசோதாவுக்கு 213 திருத்தங்கள்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
புது டில்லி, அக். 23 - அரசியல் சாசன 44-வது திருத்த மசோதாவுக்கு 213 திருத்தங்களை பல பார்லிமெண்ட் உறுப்பினர்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள.
திங்கட்கிழமையன்று பார்லிமெண்ட் கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. அதற்கு முன்பாக உறுப்பினர்கள் மேலும் திருத்தங்களை தாக்கல் செய்யும் சாத்தியம் இல்லாமல் போய்விடவில்லை. இந்த பார்லிமெண்ட் கூட்டத் தொடரில் 44வது திருத்த மசோதா மீது விவாதம் நடைபெறவிருக்கின்றது.
இந்த மசோதா பற்றி நாட்டில் பெரிய விவாதம் நடக்கிறது. இந்த மசோதா 59 பிரிவுகள் கொண்டது. பார்லிமெண்ட் நீதித்துறை பிரதம மந்திரி ஆகியோரின் அதிகாரங்கள், லோக் சபையின் ஆயுள், மக்களின் கடமைகள், தேசிய விரோத நடவடிக்கைகள் முதலியவை இம்மசோதாவில் இடம்பெறுகின்றன
Advertisement
Advertisement
உறுப்பினர்கள் ஏற்கெனவே 313 திருத்தங்களை அனுப்பியிருப்பதால், இம்மசோதா மீது ராஜ்ய சபை, லோக் சபை ஆகியவற்றில் விவாதம் விரிவான தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ...
... கட்சிக் கூட்டத்தில் பிரதமர் பேச்சு
புது டில்லி, அக். 23- "பார்லிமெண்டுக்கு அரசியலமைப்பைத் திருத்த அதிகாரம் உண்டு என்று பிரதம மந்திரி இந்திரா காந்தி இன்று மீண்டும் கூறினார்.
அரசியல் நிர்ணய சபையொன்றைக் கூட்ட வேண்டும் என்று மூன்று, நான்கு மாநில காங்கிரஸ் கமிட்டிகள் யோசனைகள் தெரிவித்துள்ள சூழ்நிலையில் பார்லிமெண்ட் காங்கிரஸ் அங்கத்தினர்கள் கூட்டத்தில் பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
அரசியலமைப்புக்கு உத்தேச மாறுதல்களை நிறைவேற்ற அரசியல் நிர்ணய சபையொன்றைக் கூட்டுவது அவசியமில்லை என்பதே பிரதம மந்திரியின் பேச்சுகுப் பொருளாகும் என்று காங்கிரஸ் எம். பி.க்கள் வியாக்கியானம் செய்தனர்.
"நன்கு தீவிர ஆலோசனை செய்து, நிபுணர் கருத்துக்களைப் பரிசீலித்த பிறகே அரசியலமைப்பைத் திருத்த பார்லிமெண்டுக்கு அதிகாரம் உண்டு என்ற நமது கருத்தை ஏற்கனவே கூறியுள்ளோம்" என்று பிரதமரே கூறினார்.
அரசியலமைப்பு மாறுதல்கள் சம்பந்தமாக சுவரண் சிங் கமிட்டி ஆற்றிய சிரமமான பணியை பிரதமர் பாராட்டினார். ...
பண வீக்கம் மீண்டும் தலை தூக்குகிறது - ரிஸர்வ் பாங்கின் உதவி கவர்னர் எச்சரிக்கை
பாடியாலா, அக். 21- பணவீக்கம் என்ற பூதம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருப்பதால் பாங்குகள் கடன் கொடுக்கும் விஷயத்தில் இன்னும் அதிக கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் பாங்கின் உதவி டைரக்டர் ஹஜாரி இன்று எச்சரித்தார்.
ஆயினும், ரிசர்வ் பாங்க் சமீபத்தில் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் பணவீக்க நிலைமையைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு விலைவாசிகள் பதினொன்றரை சதவிகிதம் உயர்ந்திருக்கின்றன. பணப் புழக்கமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கட்டாய சேமிப்புத் தொகை சமீபத்தில் திருப்பிக் கொடுக்கப்பட்டது இதற்கு ஒரு காரணமாகும் என்றார்.
சென்ற வருஷத்தில் எல்லாத் துறைகளிலுமே நாட்டின் சாதனைகள் திருப்திகரமாக இருந்திருக்கின்றன. இதனால் தேசிய வருமானம் ஆறரை சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. அரபு நாடுகளில் பெட்ரோல் விலையை ஏற்றப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெட்ரோலின் விலை மேலும் உயர்த்தப்பட்டால், பணவீக்கத்தை எதிர்த்து கடும் போராட்டம் நடத்த வேண்டியிருக்குமென்று எதிர்பார்க்கலாம் என்றும் டாக்டர் ஹஜாரி எச்சரித்தார்.
24.10.1976: 213 amendments to the Constitution Bill
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.