FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

26.9.1976: சர்க்காரியா கமிஷன் விசாரணை - பில் தொகை பட்டுவாடா பற்றி ஹெலிகாப்டர் சர்வீஸ்காரர் சாட்சியம்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

25 செப்டம்பர் 2026, 2:58 pm IST
26.9.1976 - Dinamani
பகிர்:

சென்னை, செப். 25- சர்க்காரியா கமிஷன் முன்னிலையில் இன்று தொடர்ந்து சாட்சியம் அளித்த ஹெலிகாப்டர் சர்வீசை சேர்ந்த எஸ். ஏ. ராமச்சந்திரன், தாம் தமது கம்பெனிக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் "கருணாநிதி பழிவாங்கும் தன்மை வாய்ந்தவர்" என்றும் ''அவரது ஆணைப்படியே அதிகாரிகள் பில் தொகைகளைப் பட்டுவாடா செய்யாமல் நிறுத்தி வைத்து ஏக்கருக்கு 30 பைசா கமிஷன் கேட்கிறார்கள்" என்றும் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.

முதலமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் வைத்தியலிங்கம், முதலமைச்சரின் உத்தரவுப்படியே செயல்பட்டார் என்றும், கருணாநிதி சொன்னதன் பேரிலேயே கமிஷன் கேட்டார் என்றும் ராமச்சந்திரன் கூறினார்.

ராமச்சந்திரன் மேலும் கூறியதாவது:-

Advertisement

Advertisement

"1971 செப்டம்பர் மாதம் செக்ரிடேரியட்டில் விமானக் கம்பெனி நடத்துவோருக்கும் முதலமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் வைத்தியலிங்கத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், ரசீது இல்லாமல் ஏக்கருக்கு 90 பைசா வீதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று கருணாநிதி தெரிவிக்கச் சொன்னதையே வைத்தியலிங்கம் கூறினார்.

"யாராவது இந்தப்படிக்கு கமிஷன் தரவில்லையென்றால், இதுவரை அவர்கள் செய்துள்ள வேலைக்கான பில் பணம் கொடுக்கப்பட மாட்டாது என்பதோடு, மேற்கொண்டும் மருந்து தெளிக்கும் வேலையும் அவர்களிடம் கொடுக்கப்படமாட்டாது" என்று 1971 செப்டம்பர் 20-ம் தேதியன்று எங்கள் கம்பெனி டைரக்டர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் நான் தெரிவித்துள்ளேன். வைத்தியலிங்கத்தைச் சந்தித்த பின் இந்தக் கடிதத்தை நான் எழுதினேன்.”

நீதிபதி சர்க்காரியாவின் கேள்வி ஒன்றுக்கு "ஏக்கருக்கு 90 பைசா வீதம் கொடுக்க வேண்டும் என்று எங்களை நிர்ப்பந்தம் செய்யும் பொருட்டே, அன்பில் தர்மலிங்கத்தை மந்திரி சபையிலிருந்து விலக்கிவிட்டு ப.உ. சண்முகத்தை விவசாய அமைச்சராக முதலமைச்சர் நியமித்தார். இப்படி மந்திரி சபையில் மாற்றம் செய்து 'கெடுபிடி' ஏற்படுத்தி ஏக்கருக்கு 90 பைசா தொகையை எங்களிடம் வசூலிப்பதில் கருணாநிதி பிடிவாதமாக இருந்தார் என்று நான் உணர்ந்தேன்" என்று சாட்சி ராமச்சந்திரன் பதிலளித்தார். "கருணாநிதி பழிவாங்கும் தன்மை வாய்ந்தவர்" என்பது என் சொந்தக் கருத்து. "பில் தொகைகளை நிறுத்தி வைக்க அவர் அதிகாரிகளிடம் நடந்து கொண்ட முறையிலிருந்து இந்தக் கருத்து எனக்கு ஏற்பட்டது" என்றும் அவர் கூறினார். ...

5-வது திட்டத்தை தேசிய வளர்ச்சி சபை ஏற்றது

புது டில்லி, செப். 25- தேசிய வளர்ச்சி சபை இன்று ஐந்தாண்டு திட்டத்தை ஏற்றது. அது ரூ. 39,303 கோடி அரசு துறை முதலீட்டுக்கு வகை செய்கிறது.

1974-ல் திட்டம் துவக்கப்பட்ட திட்ட நகலின் அடிப்படையில் இருந்ததை விட திருத்தப்பட்ட நகலில் திட்ட முதலீடு சுமார் 2,000 கோடி அதிகமாகும்.

திட்டம் பற்றிய மத்ய மாநில தேசிய உயர்மட்ட குழுவான வளர்ச்சி சபை திட்டத்தை ஏற்று நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தில். திட்ட இலக்குகளை அடைய மக்கள் ஒத்துழைப்பைக் கோரியது.

இரு தின கூட்டத்தில் மத்திய மந்திரிகள், திட்டக் கமிஷன் அங்கத்தினர்கள், மாநில முதன் மந்திரிகள், ராஷ்டிரபதி ஆட்சி நடக்கும் மாநிலங்களின் கவர்னர்கள் கலந்து கொண்டனர். நஷ்டத்தை போக்கி, வருவாய் கிடைப்பதற்காக விசை, பாசன கட்டணங்களை அவசியமானால் உயர்த்த வேண்டும் என்றும் சபை முடிவு செய்தது.

விவசாயம், பாசனம், எரி பொருள் மற்றும் மையத்துறைகள் வலியுறுத்தப்பட்டதை தீர்மானம் அங்கீகரித்தது. ...

summary

26.9.1976: Sarkaria Commission Inquiry – Helicopter service operator testifies regarding bill payment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments