ஆந்திரத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 16 தொழிலாளர்கள் பலியாகினர்.
இதுகுறித்து கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் ஹெச். அருண்குமார், பிடிஐ செய்தியாளரிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
குண்டூர் மாவட்டம், தாச்சேபள்ளி கிராமத்தில் இருந்து கட்டுமானப் பொருள்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று திங்கள்கிழமை வந்தது. அந்த லாரியில் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பனைத் தொழிலாளர்கள் உள்பட 35 பேர் பயணித்தனர். இந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டம், காண்டிபள்ளி கிராமத்தில் லாரி வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் மீது லாரியில் கொண்டு வரப்பட்ட செங்கற்கள் உள்ளிட்டவை விழுந்து மூடின. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ராஜமுந்திரியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்த 8 பேருக்கும் பெரிய அளவில் பாதிப்பில்லை. இதனால் அவர்கள் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை.
லாரி விபத்துக்குள்ளானதற்கு, லாரி ஓட்டுநர் தூங்கியதே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து லாரி ஓட்டுநரும், அவரது உதவியாளரும் தப்பியோடி விட்டனர்.
லாரியில் பயணித்த 35 பேரில், 32 பேரின் நிலை தெரிய வந்துள்ளது. எஞ்சிய 3 பேரின் நிலை குறித்து தெரியவில்லை என்று அருண்குமார் கூறினார்.
விபத்து குறித்து கேள்விப்பட்டதும், சம்பவ இடத்துக்கு மாநில நிதியமைச்சர் ஒய். ராமகிருஷ்ணுடு விரைந்து சென்று பார்வையிட்டார். மேலும், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களும் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.