இடைநீக்கத்துக்கு எதிரான வழக்கு: தேமுதிக எம்எல்ஏக்கள் பதில் மனு
தமிழக சட்டப் பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள
தமிழக சட்டப் பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரும், அந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்தனர்.
தமிழக சட்டப் பேரவையில் இருந்து தேமுதிக உறுப்பினர்கள் அழகாபுரம் ஆர்.மோகன் ராஜ், வி.சி.சந்திரகுமார், கே.தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்டேசன் ஆகியோரை இடைநீக்கம் செய்து சட்டப் பேரவைத் தலைவர் தனபால் நடவடிக்கை மேற்கொண்டார்.
இதுதொடர்பாக ஆறு எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில், நீதிமன்ற உத்தரவின்படி ஆறு பேரின் மனுக்களுக்கு தமிழக சட்டப் பேரவைத் தலைவர், பேரவைச் செயலாளர் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்ய சட்டப் பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும்போது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: சட்டப் பேரவை உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது. கடந்த ஏழு மாதங்களாக சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கான கடமைகளை ஆற்றுவதில் இருந்து சம்பந்தப்பட்ட ஆறு பேரும் தடுக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய சட்டப் பேரவையில் பெரும்பான்மையாக உள்ள ஆளுங்கட்சியே, உரிமை மீறல் குழுவிலும் பெரும்பான்மையாக உள்ளது. இதனால் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பேரவை நடவடிக்கைகள் தொடர்பான உண்மையான விடியோ பதிவுகள் திருத்தப்பட்டுள்ளன. அந்த விடியோ பதிவை ஆதாரமாகக் கூறியே உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்' என்று மனுவில் தேமுதிக உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.