அழைப்பு முறிவுக்கு இழப்பீடு: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
செல்லிடப்பேசி அழைப்புகள் தாமாகத் துண்டிக்கப்பட்டால் (கால் டிராப்) வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று
செல்லிடப்பேசி அழைப்புகள் தாமாகத் துண்டிக்கப்பட்டால் (கால் டிராப்) வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பிறப்பித்த உத்தரவுக்கு இடைக் காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
செல்லிடப்பேசிகளில் ஒவ்வொரு முறை அழைப்பு தாமாகத் துண்டிக்கப்படும்போதும் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம், வாடிக்கையாளருக்கு ஒரு அழைப்பு முறிவுக்கு ஒரு ரூபாய் வீதம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபரில் டிராய் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ரிலையன்ஸ், ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட 21 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்பில், தில்லி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.
அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், டிராய் அறிவித்த விதிமுறைகள் செல்லும் என்று தெரிவித்தனர்.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
பின்னர், நீதிபதிகள் கூறியதாவது: தில்லி நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்டது என்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. அழைப்பு தாமாகத் துண்டிக்கப்படுவது என்பது தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பிரச்னை. அதற்காக இழப்பீடு வழங்க வேண்டியது அவர்களது பொறுப்பு.
எனவே, தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பிறப்பிக்க வேண்டியதில்லை. அதேவேளையில், தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, வரும் 10-ஆம் தேதி நடைபெறும். அந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் டிராய் அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதிகள தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.