மக்களவை முன்னாள் சபாநாயகர் சங்மா காலமானார்
மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா உடல்நலக்குறைவால் தில்லியில் இன்று காலமானார்.
மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா உடல்நலக்குறைவால் தில்லியில் இன்று காலமானார்.
மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த குடும்பத்தில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி பி. ஏ. சங்மா பிறந்தார். அங்குள்ள புனித அந்தோணி கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்றார். பின்பு, திப்ருகர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் எம்.ஏ பட்டம் பெற்றார். பின்பு எல்.எல்.பி பட்டமும் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை: 1973 இல் இளைஞர் காங்கிரஸில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலில் பரிணாம வளர்ச்சி அடைந்தார். 1975 - 1980 களில் மேகாலயா மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988-1990 வரை மேகாலயா மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார்.
Advertisement
Advertisement
காங்கிரஸ் கட்சியுடன் எழுந்த (சோனியா காந்தி வெளிநாட்டவர்) கருத்து வேறுபாட்டின் காரணமாக சரத்பவார், தாரிக் அன்வர் ஆகியோருடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் என்னும் கட்சியைத் தொடங்கினார். பின்பு அக்கட்சியின் தலைவரான சரத் பவார் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை பின்பற்றுவதை எதிர்த்து தேசிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார். பின்பு அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) நிறுவனர்களில் ஒருவராக விளங்கி வந்த சங்கமா, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு எட்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
பதவிகள்:
1991 - 1993 - மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சர்
1993 - 1995 - மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர்
1995 - 1996 - மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர்
1996 - 1998 - மக்களவைத் தலைவர்
2012 நடைபெற்ற இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு திரட்டினார். இவரை ஆதரிக்கப்போவதாக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்மா காலமானதை அடுத்து, மக்களவை மார்ச் 8 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.