முகப்பு
இந்தியா

வங்கிகளில் ரூ.81,683 கோடி வாராக் கடன் தள்ளுபடி: பாஜகவுக்கு சிபிஐ (எம்) கேள்வி

கடந்த நிதியாண்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ரூ.81,683 கோடி வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து விளக்கமளிக்க வேண்டும்

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

கடந்த நிதியாண்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ரூ.81,683 கோடி வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று பாஜகவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) வலியுறுத்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேரள மாநிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து, சிபிஐ (எம்) கட்சித் தொண்டர்களால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவரது உறவினர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்களது அரசியல் எதிரிகளைப் படுகொலை செய்து வருவதாகவும், மாநிலத்தில் வன்முறைச் சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அருண் ஜேட்லி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியதாவது: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் ரூ.81,683 கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அரசு வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் பெரும்பாலானவை, மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களாகும். எனினும், அதுதொடர்பான தகவல்களை மத்திய அரசு பொதுமக்களிடமிருந்து மறைத்து விட்டது.
கடன் சுமை தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால், பணக்காரர்களை மட்டுமே ஆதரிக்கும் பாஜக அரசு மத்தியில் அமைந்த முதல் இரண்டு ஆண்டுகளில் பணக்காரர்களின் ரூ.1.14 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது மேலும் ரூ.81,683 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆட்சியின்கீழ் யார் பலனடைகிறார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகப் புரிகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது கேரள "சுற்றுலா'வை முடித்துக் கொண்டிருந்தால், இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →