காங்கிரஸ் எம்எல்ஏ கடத்தல்? மாநிலங்களவையில் கடும் அமளி
குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ கடத்தப்பட்டதாகக் கூறி, மாநிலங்களவையில் அக்கட்சி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை அலுவல்கள் முற்றிலுமாக முடங்கின.
குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ கடத்தப்பட்டதாகக் கூறி, மாநிலங்களவையில் அக்கட்சி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை அலுவல்கள் முற்றிலுமாக முடங்கின.
மாநிலங்களவை வெள்ளிக்கிழமை காலை கூடியதும், எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் இந்த விவகாரத்தை எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:
குஜராத்துக்கான மாநிலங்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, மாநிலங்களவையில் பாஜகவின் பலத்தை அதிகப்படுத்துவதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் சம்பவங்களும், எம்எல்ஏக்கள் கடத்தப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.
குஜராத்தில் காங்கிரûஸச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் அண்மையில் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். பின்னர், அவர்களில் ஒருவருக்கு உடனடியாக பாஜக சார்பில் மாநிலங்களவையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இவ்வாறு தேர்தல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி வந்த பாஜக, தற்போது எம்எல்ஏக்களை கடத்தும் அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டது. குஜராத்தின் வியாரா தொகுதி எம்எல்ஏவான புனாபாய் காமித், போலீஸாரால் வியாழக்கிழமை கடத்தப்பட்டார். அவரை மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி, போலீஸார் மிரட்டியிருக்கின்றனர்.
அதிருஷ்டவசமாக, போலீஸாரின் பிடியிலிருந்து அவர் வெள்ளிக்கிழமை அதிகாலை தப்பியுள்ளார். அவர் அளித்த தகவலின்பேரிலேயே, இந்த விவரங்கள் எங்களுக்கு தெரியவந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கடத்துவதும், விலைக்கு வாங்குவதும்தான் பாஜகவின் ஜனநாயகம் காக்கும் செயலா? இது ஒரு ஜனநாயகப் படுகொலை. இதற்காக பாஜக வெட்கப்பட வேண்டும் என்று குலாம் நபி ஆஸாத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அவையின் மையப்பகுதிக்குச் சென்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், பாஜகவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே. குரியன், "இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவது முறையல்ல; இதனை தேர்தல் ஆணையத்திடம்தான் நீங்கள் முறையிட வேண்டும்' என்றார்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, மாநிலங்களவை அடுத்தடுத்து 4 முறை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் 2.30 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும், இந்த விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.