FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

என்சிபிசி-க்கு அரசமைப்பு அந்தஸ்து: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது மசோதா

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு (என்சிபிசி) அரசமைப்பு அந்தஸ்து வழங்க வகைசெய்யும் சட்டமசோதா, நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நிறைவேறியது. மக்களவையில் கடந்த 2-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட அந்த

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:


தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு (என்சிபிசி) அரசமைப்பு அந்தஸ்து வழங்க வகைசெய்யும் சட்டமசோதா, நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நிறைவேறியது. மக்களவையில் கடந்த 2-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா, தற்போது மாநிலங்களவையிலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்களுக்கான தேசிய ஆணையங்களுக்கு நிகராக, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கும் அரசமைப்பு அந்தஸ்து அளிக்கும் வகையிலான இந்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது.
அங்கு எதிர்க்கட்சிகள் வழங்கிய சில திருத்தங்கள் சேர்க்கப்பட்டு அந்த ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட மசோதா, திருத்தங்கள் மீதான ஒப்புதலுக்காக மீண்டும் மக்களவைக்கு அனுப்பப்பட்டது. அந்தத் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், கூடுதலாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சமீபத்தில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, மாநிலங்களவையில் அரசமைப்பு (123-ஆவது திருத்தம்) மசோதா 2017' மீது திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பின்போது 3-இல் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மசோதா மீதான விவாதத்தின்போது, ஜாதிய அடிப்படையிலான கணக்கெடுப்பு முடிவுகளை பொதுவில் வெளியிடவும், இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தவும் உறுப்பினர்கள் சிலர் மத்திய அரசுக்கு வலியுறுத்தினர்.
இதையடுத்து, மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:
பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், தங்களுக்கு எதிரான அராஜகங்களை எதிர்த்து போராடுவதற்கும், அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கும் இந்த சட்டத் திருத்த மசோதா உதவியாக இருக்கும். எதிர்க்கட்சிகளின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் மகளிர் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர்.
மாநில அரசுகளுக்கென தனியே மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இருப்பதால், அவற்றுக்கான அதிகாரத்தின் மீது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆதிக்கம் செலுத்தாது. மாநில அரசுகள் தங்களுக்கான, பிற்படுத்தப்பட்ட மக்களின் ஜாதியப் பட்டியலையும், அதேபோல் மத்திய அரசு தனக்கான தனி பட்டியலையும் கொண்டிருக்கும்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமானது, பட்டியலில் ஓர் ஜாதியை சேர்ப்பது மற்றும் நீக்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு மட்டுமே பரிந்துரைக்கும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்குவது, ஓர் முக்கிய விவகாரமாகும். இதற்காக 1980-ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பலமுறை விவாதங்கள் நடத்தப்பட்டதுடன், நிலைக் குழுவும் கலந்தாலோசித்துள்ளது என்று தாவர்சந்த் கெலாட் பேசினார்.
பிரதமர் பாராட்டு: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments