FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சட்டப்பிரிவு 35 ஏ-வுக்கு எதிரான வழக்குகள்: 3 நீதிபதிகள் அமர்வு முடிவெடுக்கும்

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 35 ஏ-வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 35 ஏ-வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக தற்போதைய 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் நிலையில், அந்த அமர்வில் அங்கம் வகிக்கும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நீதிமன்றத்தில் இல்லாத காரணத்தால், வழக்கு விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
மேலும், அப்போது நீதிபதிகள் அமர்வு, சட்டப்பிரிவு 35 ஏ-வானது, அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிராக இருக்கிறதா என்பதை நீதிமன்றம் கண்டறிய வேண்டியுள்ளது. அரசியல் சாசன ரீதியாக சட்டப்பிரிவு செல்லுபடியாவதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், அது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட வேண்டும். எனவே, இந்த மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக 3 நீதிபதிகள் அமர்வு தீர்மானிக்கும்' என்று கூறியது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டுமென அந்த மாநில அரசு சார்பில் கடந்த 3-ஆம் தேதி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ஜம்மு-காஷ்மீர் அரசின் அந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
சட்டப்பிரிவு 35 ஏ, கடந்த 1954-ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் உத்தரவின் பேரில் அரசியல் சாசனத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது. இந்த சட்டப் பிரிவானது, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு பல்வேறு சிறப்பு அதிகாரங்களை அளிக்கிறது.
அத்துடன், அந்த மாநில நிரந்தர குடிமக்களுக்கு பல்வேறு சிறப்பு உரிமைகளையும் வழங்குகிறது. இச்சட்டப் பிரிவின்படி, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஜம்மு-காஷ்மீரில் அசையாச் சொத்துகள் வாங்க இயலாது. அதேபோல், வெளி மாநில நபரை திருமணம் செய்யும் பெண்ணுக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது. இது அவரது வாரிசுகளுக்கும் பொருந்தும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments