பாலாறு தடுப்பணை விவகாரம்: கூடுதல் ஆவணங்களை 8 வாரங்களில் தாக்கல் செய்ய தமிழகம், ஆந்திரத்துக்கு உத்தரவு
பாலாறு தடுப்பணை விவகாரம் தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்களை 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படி தமிழகம், ஆந்திரம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலாறு தடுப்பணை விவகாரம் தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்களை 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படி தமிழகம், ஆந்திரம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணையையும் 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2016-இல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். சாப்ரே, யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் வழக்கின் முக்கிய அம்சங்களை கேட்டறிந்தனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தமிழகம், ஆந்திரம் ஆகிய இரண்டு மாநிலங்களும் 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
ஆந்திர மாநிலம், குப்பம் வட்டத்தில் உள்ள கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே ஓர் அணையைக் கட்டுவதற்கு ஆந்திர அரசு 2006-இல் முயற்சித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிவாளர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 19, 20 ஆகிய தேதிகளில் ஆந்திர மாநிலத்தின் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.