முசாஃபர்பூர் விவகாரம்: பெண் அமைச்சரின் தொடர்பு உறுதியானால் பதவி பறிக்கப்படும்
பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் அரசு நிதியுதவியுடன் இயங்கி வந்த காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரில்
பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் அரசு நிதியுதவியுடன் இயங்கி வந்த காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரில், மாநில அமைச்சரின் தொடர்பு உறுதி செய்யப்பட்டால், அவரது பதவி பறிக்கப்படும் என்று முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தக் காப்பகத்துக்கு மாநில சமூக நலத் துறை அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவர் அடிக்கடி சென்று வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, மஞ்சு வர்மா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில், வாரந்தோறும் மக்களைச் சந்தித்து உரையாடும் லோக் சம்வாத்' நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் நிதீஷ் குமாரிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்து நிதீஷ் குமார் கூறுகையில், மஞ்சு வர்மா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார். மாநிலம் முழுவதும் உள்ள காப்பகங்களை இனி அரசே நேரடியாக ஏற்று நடத்தும்' என்று தெரிவித்தார்.
பதவி விலகத் தேவையில்லை': இதைத் தொடர்ந்து, மாநில துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஒரு சிலர் குற்றம் சாட்டுகின்றனர் என்ற ஒரே காரணத்துக்காக, அமைச்சர்கள் பதவி விலக வேண்டிய அவசியமில்லை. குற்றம் சாட்டப்படுவது என்பது வேறு. குற்றம் நிரூபிக்கப்படுவது என்பது வேறு. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அமைச்சரைப் பதவி விலக வற்புறுத்துவது நியாயமில்லை.
முசாஃபர்பூர் விவகாரம் தொடர்பாகக் கருத்துகள் கூறுவதற்கு, பாரதிய ஜனதா கட்சி யாருக்கும் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கவில்லை. மாநில பாஜக தலைவர் நித்யானந்த ராயின் கருத்தானது அவரது தனிப்பட்ட கருத்து. அவரது கருத்தை பாஜகவின் கருத்தாகக் கொள்வது தவறு என்று சுஷில் குமார் தெரிவித்தார்.
முசாஃபர்பூரில் காப்பகம் ஒன்றில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. இந்தச் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.