பிரிட்டன் நீதிமன்றத்தின் நாடு கடத்தும் உத்தரவு: மேல்முறையீடு செய்ய மல்லையா முடிவு
தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு பிரிட்டன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தொழிலதிபர் விஜய் மல்லையா முடிவு செய்துள்ளார்.
தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு பிரிட்டன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தொழிலதிபர் விஜய் மல்லையா முடிவு செய்துள்ளார்.
இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்தாத மல்லையா, வழக்கு விசாரணையைத் தவிர்ப்பதற்கு பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக, சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு அனுமதி அளித்து கடந்த வாரம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு மல்லையா முடிவு செய்துள்ளார் என்றும், அதற்கான சரியான நேரத்தை ஒதுக்குமாறு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார் என்றும் அவரது தரப்பு வழக்குரைஞர் ஆனந்த் தூபே புதன்கிழமை கூறினார். இதன்மூலம், அவர் மேல்முறையீடு செய்வது உறுதியாகியுள்ளது.
நாடு நடத்தும் ஒப்பந்த விதிகளின்படி, மல்லையாவை நாடு கடத்துவதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டாலும், இதுதொடர்பாக பிரிட்டன் உள்துறை அமைச்சரே இறுதிமுடிவெடுப்பார். அதன்படி, நீதிமன்றத்தின் பரிந்துரை, உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர், மல்லையாவை நாடு கடத்துவது குறித்து 2 மாதங்களில் இறுதி முடிவெடுப்பார்.
இதுகுறித்து இந்திய அரசு சார்பில் வாதாடிய கிரெளன் பிராசிக்யூஷன் சர்வீஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டால், அந்த உத்தரவை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் 14 நாள்களில் மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.