இழந்த செல்வாக்கை மீட்க உத்தரப் பிரதேசத்தில் பாஜக சிறப்பு பிரசாரம்
உத்தரப் பிரதேசத்தில் கட்சியின் செல்வாக்கை மீட்க சிறப்பு மக்கள் தொடர்புத் திட்டம்' என்ற பிரசார உத்தியை பாஜக கையிலெடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கட்சியின் செல்வாக்கை மீட்க சிறப்பு மக்கள் தொடர்புத் திட்டம்' என்ற பிரசார உத்தியை பாஜக கையிலெடுத்துள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் உத்தரப் பிரதேசத்தில் முகாமிட்டு பொதுமக்களைச் சந்திக்க இருக்கின்றனர்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜகவுக்கு 325 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.
அப்போது, உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. ஆனால், அதன் பிறகு அங்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பாதகமாக அமைந்தன.
முக்கியமாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் எம்.பி.யாக இருந்த கோரக்பூர் மக்களவைத் தொகுதி, துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா எம்.பி.யாக இருந்த புல்பூர் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. அங்கு சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி வெற்றிபெற்றது. அண்மையில், கைரானா மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலிலும் பாஜக தோல்வியடைந்தது. இது, உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் செல்வாக்கு சரிந்து வருவதை தெளிவாக உணர்த்தியது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உத்தரப் பிரதேச மக்கள் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களித்தது அக்கட்சித் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துல்ளது.
இதையடுத்து, மாநிலத்தில் இழந்த செல்வாக்கை மீட்க புதிய பிரசாரத் திட்டத்தை கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் முன்னெடுத்தது. 15 நாள்கள் நடத்த திட்டமிடப்பட்ட இந்த பிரசாரத் திட்டம், இடைத்தேர்தல் காரணமாக சூடுபிடிக்காமல் இருந்தது. இடைத்தேர்தலில் பாஜக பின்னடவை சந்தித்ததை அடுத்து, உத்தரப் பிரதேசத்துக்கு பாஜக தலைமை கூடுதல் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளது.
அதன்படி, வரும் 13-ஆம் தேதி மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் லக்னெளவிலும், மனோஜ் சின்ஹா அலிகரிலும் மக்களைச் சந்தித்து மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளக்க இருக்கின்றனர். மோடியின் தொகுதியான வாராணசியில் மத்திய அமைச்சர் வி.கே. சிங்கும், அலாகாபாதில் மத்திய அமைச்சர் சத்திய பால் சிங்கும் களமிறங்க உள்ளனர். இது தவிர பிற மத்திய அமைச்சர்கள் சந்தோஷ் குமார் கங்வார், மகேஷ் சர்மா, சிவ பிரதாப் சுக்லா உள்ளிட்டோருக்கும் பிரசாரம் செய்வதற்கான நகரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தான் எம்.பி.யாக இருந்த கோரப்பூரில் மக்களைச் சந்திக்க இருக்கிறார். இதுபோல துணை முதல்வர்கள் மெளரியா, தினேஷ் சர்மா, மாநில அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களைச் சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு திரட்ட இருக்கின்றனர்.
மோடியின் 4 ஆண்டு ஆட்சி சாதனைகள் மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் இத்திட்டம் தேசிய அளவில் செயல்படுத்தப்படுகிறது என்று பாஜக சார்பில் கூறப்பட்டாலும், உத்தரப் பிரதேசத்துக்கு மட்டும் கூடுதல் கவனம் அளிக்கப்பட்டுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.