உண்மையான இந்தியர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்பட்டு விடுவார்கள்: அஸ்ஸாம் முதல்வர்
உண்மையான இந்தியர்கள் அனைவரின் பெயர்களும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்பட்டு விடும் என்று அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் கூறினார்.
உண்மையான இந்தியர்கள் அனைவரின் பெயர்களும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்பட்டு விடும் என்று அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமுக்கு வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக மக்கள் குடியேறிவது தொடர்கதையாக உள்ளது. அந்த மாநிலத்தில் உண்மையான இந்தியர்களைக் கண்டறிவதற்காக, கடந்த 1951-ஆம் ஆண்டில் இருந்து தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1951-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, அஸ்ஸாம் குடிமக்களாக 80 லட்சம் பேர் இருந்தனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில், மாநிலத்தில் குடிமக்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. குடிமக்கள் பதிவேட்டின் முதலாவது வரைவு அறிக்கை, கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 3.29 கோடி பேரில் 1.9 கோடி பேரின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டன. இறுதி வரைவு அறிக்கையை, வரும் 30-ஆம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பிடிஐ செய்தியாளரிடம் அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் வியாழக்கிழமை கூறியதாவது:
பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உண்மையான இந்தியர்கள் அனைவரும் குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்பட்டு விடுவார்கள். எனவே, மக்கள் பீதியடைய தேவையில்லை. மேலும், வரும் சனிக்கிழமை இறுதி வரைவு அறிக்கை வெளியிட்ட பிறகு, வன்முறை நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. எனினும், எந்தவொருச் சூழல்நிலையையும் சமாளிப்பதற்காக, மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களைப் போன்று இந்த முறையும் மக்கள் ஒத்தழைப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
இதனிடையே, அஸ்ஸாமில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 7 மாவட்டங்களில் குடிமக்கள் கணக்கெடுப்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இறுதி வரைவு அறிக்கையை வெளியிடுதற்கு தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கோரும் என்று தெரிகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.